வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளில் லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுதுகி றார்கள். போட்டித் தேர்வில் வெற்றி பெறாதவர்கள் பல ஆண்டு களானாலும் அரசுப் பணிக்காக முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்களே ஏன்? சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடையே இல்லையா? - கூத்தப்பாடி மா. பழனி, தருமபுரி
உங்களின் கேள்வி சரியானதே. பெரும்பாலான இளைஞர்களின் முதன்மைக் கனவு அரசு வேலை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் மத்திய அரசின் போட்டித் தேர்வுகள், ரயில்வே, வங்கி களின் தேர்வுகளையும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர்.
ஆனால், இத்தேர்வு களுக்காக முழுமையாகத் தயார் செய்துகொண்டு கடின உழைப்புடன் எதிர்கொள்பவர்கள் 20%க்கும் குறைவே. சுமாராகத் தேர்வுக்குத் தயார் செய்துவிட்டு எழுதுபவர்கள் 25% முதல் 30% பேர்.
சுமார் 20% பேர் தேர்வு எழுத வருவதில்லை. மீதமுள்ளவர்கள் எந்தவித ஆயத்தமும் இன்றி எழுதுபவர்கள். போட்டித் தேர்வுகள் அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் நடை பெறுவதில்லை. அப்பணிகளுக்கு நீங்கள் தகுதியான வரா எனத் திறனறியும் தேர்வாகும்.
மேலும், அனைத்து அரசுப் பணிகளையும் ஒருங்கிணைத்தால் மொத்த வேலைவாய்ப்பில் 4%க்கும் குறைவே. மீதமுள்ளவை தனியார் துறை வாய்ப்புகள்தான் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எனவே, தனியார் துறை வேலைவாய்ப்புக்கான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒன்றை இழந்தால்தான் மற்றொன்று கிடைக்கும்.
சோம்பேறித் தனம், மந்தநிலை ஆகியவற்றைப் புறந் தள்ளிவிட்டு, முயற்சியும் பயிற்சியும் இருந்தால் கண்டிப்பாகப் பணி வாய்ப்பினைப் பெறலாம். சுயதொழில் பற்றிய விழிப்புணர்வு இளைஞர்களிடையே அதிகம் தேவை.
சமூக வலைத்தளங்களில் உழைப்பால் உயர்ந்தவர்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் உலா வருகின்றன. சமீபத்தில்கூட ஒரு பெண் தடைகளைத் தாண்டி ‘லோடு’ வண்டியை வங்கிக்கடனில் வாங்கி, அதைச் சிறப்பாக இயக்கி மேலும் ஒரு வண்டியை வாங்கியுள்ளார்.
இவர் தனது இரண்டு பிள்ளைகளையும் பட்டப் படிப்பு படிக்க வைக்கிறார். சொந்த உழைப்பை மட்டும் நம்பி உயர்வோர் லட்சக்கணக்கில் உள்ளனர். சுயதொழில் குறித்த விவரங்களை மாவட்டத் தொழில் மையத்திலும் மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. துறையிலும் அறிந்துகொள்ளலாம்.
இல்லையெனில் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் குறுகியகாலப் பயிற்சிகளைப் பெற்று, அதன்வழி தொழில் தொடங்கலாம். அது போலவே மத்திய அரசும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கிவருகிறது. இளைஞர்கள் தங்களின் விருப்பம் போல் இதில் தேர்ந்தெடுக்கலாம். வாழ்வில் உயர தன்னம்பிக்கையும் உழைப்பும் வெற்றிபெறும் நாணயத்தின் இரு பக்கங்களாகும்!
MDS - Periodontology படித்துக்கொண்டிருக்கும் என் மகள் அடுத்து இது தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பு என்ன படிக்கலாம், எங்குப் படிக்கலாம் என்பதைத் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். - லுக்மான், மதுரை.
தங்கள் மகள் எம்.டி.எஸ் படித்துக்கொண்டிருப்பதால் பின்வரும் இரு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக் கலாம். முதலாவதாக ‘அகடமிக்’ எனப்படும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவது. இரண்டாவது, தனியே பல் மருத்துவத் தொழில் தொடங்குவது. ‘அகடமிக்’ பிரிவினைப் பொறுத்த வரை பி.எச்டி. படிக்க வேண்டியது கட்டாயம் அல்லது ஆராய்ச்சியாளராகச் செல்லலாம்.
கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம் அல்லது மருந்து உற்பத்தி நிறுவனங்களில் இத்தகைய ஆராய்ச்சியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
புதிய வகை மருந்துகளைக் கண்டறிந்து சந்தையில் அறிமுகப்படுத்தவும், புதிய மருந்துகளைச் சந்தைப்படுத்துவதன் தரவுகளை ஆராய்ந்து அதற்கேற்ப மருந்தின் தன்மை, வீரியத்தை மாற்ற இந்த ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படுவர்.
ஆராய்ச்சி என்கிற நிலைப்பாட்டை மேற்கொள்ளும்போது படிக்கும் பாடப்பிரிவுக்கேற்ப மரபணுவியல், பெரியோடென்டல் ரீஜெனரேசன், லோ லெவல் லேசர் தெரபி, நீரிழிவு, கார்டியோ வாஸ்குலர் சிஸ்டெமிக் டிஸ்ஆர்டர் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சிகளைத் தொடரலாம். உங்கள் மகளுக்கு எது உகந்தது என்பதைச் சிந்தித்துத் தெரிவுசெய்யுங்கள்.