கல்வி - வேலை வழிகாட்டி

ஐ.ஏ.எஸ். கனவை உயிர்ப்போடு வைத்திருப்பது எப்படி?

உதயசங்கரன் பாடகலிங்கம்

‘ஐ.ஏ.எஸ். ஆகணும்’ என்கிற ஆசை மனதில் மேலெழுந்தாலும், ‘அது எப்படிச் சாத்தியம்’ என்கிற கேள்வி பின்னே வந்து அதைக் கீழே இழுக்கும். இது போன்ற எண்ணங்களைக் களைய, மத்திய அரசின் நிதித் துறையில் கூடுதல் செயலாளராகப் பணியாற்றிவரும் சஜ்ஜன் யாதவ் எழுதியுள்ள ‘ஸ்கேலிங் மௌண்ட் யுபிஎஸ்சி’ எனும் புத்தகம் தமிழில் ‘இலக்கு: ஐஏஎஸ்’ (மஞ்சுள் பதிப்பகம்) என வெளியாகியுள்ளது.

தலைமுறை இடைவெளியைக் கடந்து, இப்புத்தகத்தில் இடம்பெற்ற ஏழு இளம் அதிகாரிகள் கடந்துவந்த தேர்வுப் பயணத்துடன் தன்னைப் பொருத்திப் பார்க்க முடிந்தது என்கிறார் சஜ்ஜன் யாதவ்.

சஜ்ஜன் யாதவ்

வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த அவர்களின் அனுபவங்களில் இருந்து, எப்பேர்ப்பட்ட தடைகளையும் நிறைய மாதிரித் தேர்வுகள், கடின உழைப்பு ஆகியவற்றைக் கொண்டு கடந்திட முடியும் என்பது தெரியவருவதாக அவர் சொல்கிறார்.

தன்னம்பிக்கை வேண்டும்

குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர் களுக்காக, அவர் அளித்த வழிகாட்டுதல்களில் சில: மிகப்பெரிய கனவை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

பிறகு, அதை நேருக்கு நேராக எதிர்கொள்கிற துணிச்சல் வேண்டும். மிகப்பெரிய கனவை அடையப் பயணிக்கையில் நிறைய பதற்றம், பயம், பாதுகாப்பின்மை இருக்கும். அவை அனைத்தும் முக்கியம்.

அவற்றைக் கடந்துவர மிகுதியான உத்வேகத் தைக் கொண்டிருந்தால் போதும். தேர்வுக்காகக் கவனமாகத் தயாராக வேண்டும். அதற்கு முறையான திட்டமிடலும் நேர மேலாண்மையும் அவசியம். ஒருநாளுக்கு 10 – 14 மணிநேரம் படிப்பு; தொடர்ச்சியாக மாதிரித் தேர்வுகள் என்பதை எதிர்கொள்கிற வகையில் மனதை வார்த்துக்கொள்ள வேண்டும்.

தொடக்க கால முயற்சிகளின்போது வெற்றி சதவீதம் குறைவாக இருக்கக்கூடும். அப்போதெல்லாம் தன்னம்பிக்கை அதிக அளவில் இருந்தாக வேண்டும். பாடங்கள் மிக அதிகமாக இருப்பதைக் கண்டு மலைக்கத் தேவையில்லை.

அவற்றைப் படிக்கும்போது சிறிய இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டால் போதும்; ஒவ்வோர் இலக்கை எட்டும்போதும் ‘சாதித்த மனப்பான்மை’ வந்தடையும். அதைக் கொண்டாடுவது, உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக்கொள்ள உதவும்.

கவனச் சிதறல் வேண்டாம்

இலக்குதான் எப்போதுமே முதன்மை. நீங்கள் வெற்றிகரமாகத் திகழும்போது மற்றவை அனைத்தும் தானே வரும். அது நினைவில் பதிந்திருக்க வேண்டும். தேர்வுக் காலக்கட்டத்தில் எந்த விதக் கவனச்சிதறல்களுக்கும் உள்ளாகக் கூடாது. சமூக வலைத்தளங்கள் உள்பட அனைத்தும் அதில் அடக்கம்.

கொஞ்சம் அயர்வாக உணர்கிற நேரத்தில் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்ளலாம். நண்பர்களோடு பேசி மகிழலாம். உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்கிற வழிமுறை எது என அறிந்து அதில் ஈடுபடலாம்.

இம்மாதிரியான தருணங்களில் சிலர் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பார்கள். சிலருக்குத் திரைப்படங்கள் பார்க்கிற வழக்கம் இருக்கும். சிலர் ஊக்கப்படுத்தும் வகையிலான உரைகளைக் கேட்டு மகிழ்வார்கள்.

குறுக்கு வழிகள் கிடையாது

தோல்விகள் என்பவை வெற்றிகளின் ஒரு பகுதி. அதனால், முயற்சியைக் கைவிடக் கூடாது. ஒன்று அல்லது இரண்டு முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிடுவோம் என்பதில் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். ஒருவேளை தோல்வியுற நேர்ந்தால், ‘எங்கு தவறு நிகழ்ந்தது’ என்று ஆராய்ந்து நோக்க வேண்டும்.

இந்த முயற்சியில் வெல்ல, குறுக்கு வழிகள் (shortcut) எதுவும் கிடையாது. நீங்கள்தான் ‘ஸ்மார்ட்’ஆகவும் கடினமாகவும் படித்து முன்னேற வேண்டும். நீங்களாகப் படித்து, உங்களுக்கான குறிப்புகளைத் தயாரித்துக்கொள்ள வேண்டும். தேர்வுக்காகத் தயாராகும் செயல்முறையை உயிர்ப்போடு வைத்திருப்பது உங்களால் மட்டும்தான் முடியும்.

- uthayasankaran.p@hindutamil.co.in

SCROLL FOR NEXT