கலை, வணிகவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை வழங்கும் பட்டப் படிப்பு என்று சொல்லக்கூடிய, முக்கியப் படிப்பு சி.ஏ. என்று அழைக்கப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படிப்பு.
பிளஸ் டூ வகுப்புகளில் வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளாதாரம் போன்ற பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களின் முதல் தேர்வு பி.காம்தான். பி.காம். படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஏற்ற முக்கியப் படிப்பு சி.ஏ. இதில் இடம் கிடைப்பது சிரமம் இல்லை. கட்டணமும் அதிகம் இல்லை. ஆனால், கடுமையாகப் படித்தால்தான் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். தேர்ச்சி பெற்றவுடனே காத்திருக்கிறது ஆடிட்டர் வேலை.
இந்திய நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பு, சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வுகளை நடத்துகிறது. ஆடிட்டர் ஆக வேண்டுமானால், இந்த அமைப்பு நடத்தும் தேர்வுகளை எழுதி உரிய சான்றிதழைப் பெற வேண்டும். இந்திய கம்பெனி சட்டம், வருமான வரிச் சட்டம் ஆகியவற்றின்படி தொழில் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் ஆடிட்டர்களால் பரிசோதிக்கப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். ஆடிட்டரின் சான்றிதழ் இல்லாத தணிக்கை அறிக்கைகளை அரசு ஏற்காது. அந்த அளவுக்கு இந்தப் பணி முக்கியத்துவம் வாய்ந்தது.
தென்னிந்தியாவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த நிறுவனத்தின் மண்டல அலுவலகம் உள்ளது. சி.ஏ. படிப்பில் சேர இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ஸ் ஆஃப் இந்தியா அமைப்பில் மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்ததுமே பதிவு செய்யலாம். பிளஸ் ஒன், பிளஸ் டூ படிக்கும் போதே சி.ஏ முதல் கட்டத் தேர்வுக்கும் தயாராகலாம். ஆனாலும், முதல் கட்டத் தேர்வை எழுத 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்பது விதி. இந்தப் படிப்புக்கான புதிய விதிமுறைகள் 2023ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்துள்ளன.
புதிய கல்வித் திட்டத்தின்படி ஃபவுண்டேஷன், இன்டர்மீடியட், ஃபைனல் ஆகிய முன்று கட்டங்கள் உள்ளன. அக்கவுண்டிங் (100 மதிப்பெண்கள்), பிசினஸ் லாஸ் (100 மதிப்பெண்கள்), குவாலிட்டேட்டிவ் ஆப்டிட்யூட் (100 மதிப்பெண்கள்), பிசினஸ் எகனாமிக்ஸ் (100 மதிப்பெண்கள்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளில் ஃபவுண்டேஷன் கோர்ஸ் மாணவர்கள் எழுத வேண்டும். ஆண்டுக்கு மூன்று முறை அதாவது ஜனவரி, மே, செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஃபவுண்டேஷன் தேர்வுகள் நடைபெறும். அக்கவுண்டிங், பிசினஸ் லாஸ் ஆகிய இரண்டு தேர்வுகளும் சப்ஜெக்டிவ் டைப் தேர்வுகள்.
குவாண்டிடேடிவ் ஆப்டிடியூட், பிசினஸ் எகனாமிக்ஸ் ஆகிய இரு தேர்வுகளும் அப்ஜெக்டிவ் டைப் தேர்வுகள். இந்த அப்ஜெக்டிவ் டைப் தேர்வுகளில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்தத் தேர்வில் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தப்பட்சம் 40 சதவீத மதிப்பெண்களும், அனைத்துப் பாடங்களிலும் சேர்த்து 50 சதவீத மதிப்பெண்களும் பெற வேண்டும். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இன்டர்மீடியட் தேர்வை எழுத, பதிவு செய்யலாம்.
வணிகவியல் பாடப்பிரிவில் இளநிலை அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்கள் 55 சதவீதத்துக்குக் குறைவில்லாமல் மதிப்பெண்களும், இதர பட்ட அல்லது முதுநிலைப் பட்டப்படிப்பு படித்தவர்கள் 60 சதவீதத்துக்குக் குறைவில்லாமலும் மதிப்பெண்களும் பெற்றிருந்தால் நேரடியாக இன்டர்மீடியட் கோர்ஸில் சேர நேரடியாகப் பதிவு செய்யலாம். இன்டர்மீடியட் தேர்வுக்காகப் பதிவு செய்து 8 மாதங்களுக்குப் பிறகு, இன்டர்மீடியட் தேர்வை எழுதலாம். முதுநிலைப் பட்டப்படிப்புகளில் தகுந்த மதிப்பெண்களைப் பெற்று 8 மாத ஸ்டடி பீரியட் கழித்து, இன்டர்மீடியட் தேர்வை எழுதலாம்.
இன்டர்மீடியட் கோர்ஸ் தேர்வு, ஆண்டுக்கு மூன்று முறை அதாவது ஜனவரி, மே, செப்டம்பரில் நடைபெறும். இதில் குரூப்-1 பிரிவின் கீழ் அட்வான்ஸ்ட் அக்கவுண்டிங் (100 மதிப்பெண்கள்), கார்ப்பரேட் அண்ட் அதர் லாஸ் (100 மதிப்பெண்கள்), டாக்ஸ்சேஷன் (பிரிவு ஏ: இன்கம் டாக்ஸ் லா (50மதிப்பெண்கள்); பிரிவு பி:குட்ஸ் அண்ட் சர்வீசஸ் டாக்ஸ் (ஜிஎஸ்டி) – 50 மதிப்பெண்கள்) ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் உள்ளன.
குரூப்-2 பிரிவின் கீழ் காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங் (100 மதிப்பெண்கள்), ஆடிட்டிங் அண்ட் எத்திக்ஸ் (100 மதிப்பெண்கள்), பைனான்சியல் மேனேஜ்மெண்ட் அண்ட் ஸ்ட்டேரட்டஜிக் மேனேஜ்மெண்ட் (பிரிவு ஏ: பைனான்சியல் மேனேஜ்மெண்ட் 50 மதிப்பெண்கள்; ஸ்ட்ரேட்டஜிக் மேனேஜ்மெண்ட் 50 மதிப்பெண்கள்) ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் உண்டு.
இன்டர்மீடியட் தேர்வில் கேஸ் ஸ்டடி அடிப்படையில் 30 சதவீதக் கேள்விகள் மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகளாகக் கேட்கப்படும். இதில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இருக்காது. 70 சதவீதக் கேள்விகள் டிஸ்கிரிப்டிவ் டைப் முறையில் இருக்கும்.இன்டர்மீடியட் தேர்வில் இரண்டு குரூப்களிலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.
இன்டர்மீடியட் தேர்வில் இரண்டு பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஃபைனல் கோர்ஸ் தேர்வு எழுதப் பதிவு செய்யலாம். இறுதித் தேர்வில் 6 தாள்கள் உள்ளன.
இதில் குரூப் 1 பிரிவில் பைனான்சியல் ரிப்போர்ட்டிங் (100 மதிப்பெண்கள்), அட்வான்ஸ்ட் பைனான்சியல் மேனேஜ்மெண்ட் (100 மதிப்பெண்கள்), அட்வான்ஸ்ட் ஆடிட்டிங், அஸ்யூரன்ஸ் அண்ட் புரபஷனல் எதிக்ஸ் (100 மதிப்பெண்கள்) ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் உள்ளன. குரூப்2 பிரிவின் கீழ் டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் இன்டர்நேஷனல் டாக்ஸ்சேஷன் (100 மதிப்பெண்கள்), இன்டைரக்ட் டாக்ஸ் லாஸ் (100 மதிப்பெண்கள்), இன்டகிரேட்டட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் (100 மதிப்பெண்கள்) ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் உள்ளன.
இறுதித் தேர்வுகளுக்குப் பதிவு செய்த பிறகு, 6 மாதக் காலம் நேர்முக செயல்முறை பயிற்சி பெற வேண்டும். அத்துடன், இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ் அட்வான்ஸ்ட் இன்டகிரேட்டட் பாடப்பிரிவில் பயிற்சி பெற வேண்டியதும் அவசியம். அத்துடன் ஆன்லைன் பாடப்பிரிவுகளிலும் (self-paced online modules) தகுதி பெற வேண்டும். இதில் நான்கு செட் பாடப்பிரிவுகள் உள்ளன.
இதில் கார்பரேட் அண்ட் எகனாமிக்ஸ் லாஸ், ஸ்ட்ரேட்டஜிக் காஸ்ட் அண்ட் பெர்ஃபாமன்ஸ் மேனேஜ்மெண்ட் ஆகிய இரு பாடப்பிரிவுகளைக் கட்டாயம் எழுத வேண்டும். விருப்பப் பாடமாக உள்ள இரு பிரிவுகளில் உள்ள பாடப் பிரிவுகளில் தலா ஒரு பாடத்தைத் தேர்வு செய்து எழுத வேண்டும். இறுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றுவிட்டால் சி.ஏ. இன்ஸ்டிட்யூட் உறுப்பினராக விண்ணப்பித்து, சார்ட்டர்ட் அக்கவுண்டன்டாகப் பணியாற்றலாம்.
நல்ல திறமையானவர்களை இளம் வயதிலேயே கவர்ந்திழுப்பதற்காக இந்த நிறுவனம் பிளஸ் டூ மாணவர்களை சி.ஏ. படிப்பில் சேர்க்கிறது. இதனால் பிளஸ் டூ மாணவர்கள் இப்படிப்பில் நேரடியாகச் சேர்ந்து படித்து, 21 வயதிலேயே சி.ஏ. ஆகிவிட முடியும். அரசுத் துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்கள், வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள், தணிக்கை நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பங்குச் சந்தை நிறுவனங்கள்… இப்படி சி.ஏ. படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. சி.ஏ. முடித்துவிட்டு, வேலைக்காகக் காத்திருக்க வேண்டிய நிலைமை இல்லை. படித்ததும் நல்ல ஊதியத்தில் வேலை காத்திருக்கிறது.
மேலும் விவரங்களுக்கு: www.icai.org
கட்டுரையாளர் - மூத்த பத்திரிகையாளர் > தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com