உலகின் சவாலான செஸ் தொடர்களில் ஒன்றான நார்வே செஸ் தொடரில், வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியர் ஒருவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இச்சாதனையைப் படைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக் ஞானந்தா.
தலைசிறந்த வீரர்களுடன் தொடர்ந்து போட்டியிடுவதாலும் ஆட்டங்கள் பல மணி நேரம் நீடிப்பதாலும் ஒவ்வொரு செஸ் வீரரும் தனது மனதை அவ்வப்போது ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
வெளியில் இருந்து பார்க்கும்போது அமைதியான விளையாட்டைப் போலத் தோன்றினாலும், செஸ் விளையாட்டின் ஒவ்வொரு நகர்வுக்குப் பின்னாலும் கவனமான சிந்தனையும் துல்லியமான கணிப்பும் தேவை.
அதனால்தான் செஸ் விளையாட்டின் முன்னணி வீரர் - வீராங்கனைகள் வெற்றிக்காக மட்டுமல்லாமல், தங்களின் மன நலத்தையும் சமநிலைப்படுத்து வதற்காகத் தனிப்பட்ட சில வழி முறைகளைப் பின்பற்றுகின்றனர்.
செஸ் ஜாம்பவானான மேக்னஸ் கார்ல்சன் ஒரு தொடரின் முக்கியப் போட்டிகளுக்கு நடுவில் கோல்ஃப் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இது செஸ்ஸின் மீதான கவனத்தைத் திசைதிருப்பி, மனதை இலகுவாக்க உதவுகிறது என்கிறார்.
ஜெர்மனியின் வின்சென்ட் கைமர், செஸ் விளையாட்டைத் தவிர வேறு விஷயங்களில் அதிக நேரம் செலவிடுவதில்லை என்றாலும், நாள்தோறும் சில மணிநேரமாவது செஸ்ஸைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பது மன ஓய்வுக்கு மிக அவசியம் எனக் குறிப்பிடுகிறார்.
அமெரிக்க வீரர் வெஸ்லி சோவின் அணுகுமுறை இன்னும் சுவாரசியமானது. திறன்பேசி போன்ற மின்னணுக் கருவிகளைப் பயன்படுத்துவதில் இருந்து விலகி இருப்பது, இசையைக் கேட்பது, நடைப்பயிற்சி மேற்கொள்வது, போதுமான தூக்கம் ஆகியவற்றைத் தவறாமல் பின்பற்றுவதாகச் சொல் கிறார்.
அதேபோல் பிரக்ஞானந்தாவும் போட்டிகளுக்கு முன் போதுமான ஓய்வைப் பெற அதிக முக்கியத்துவம் அளிப்பதாகச் சொல்கிறார். செஸ் மட்டுமல்ல, தேர்வுகளுக்குத் தயாராகும் பள்ளி - கல்லூரி மாண வர்களுக்கும் இது பொருந்தும்.
இன்றைய சூழலில் பள்ளி, கல்லூரி அல்லது பணியிடங்களில் பலர் மனஅழுத்தத்தைச் சந்திக்க நேரிடலாம். ஆனால், கடின உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஓய்வும் முக்கியம்.
போதுமான தூக்கம், உடற்பயிற்சி, பொழுதுபோக்கு, குடும்பத்தினருடன் மனம்விட்டுச் செலவிடும் நேரம், மின்னணுக் கருவிகளில் இருந்து போதுமான இடைவெளி ஆகிய அனைத்தும் நேரத்தை வீணாக்கும் செயல்கள் அல்ல. அடுத்த சவாலை யும் தேர்வுகளையும் உறுதியாக எதிர்கொள்ள உங்களைத் தயார் படுத்துவதற்கான ஆரோக்கிய இடை வேளை!