திரைப்படம், மக்களைப் பெரிதும் கவர்ந்து ஈர்க்கும் பொழுதுபோக்கு கலை சாதனம். திரைப்படங்களைத் தயாரிக்கும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று. குறிப்பாக, தமிழகத்தில் ஆண்டுதோறும் மிக அதிக எண்ணிக்கையில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
திரைப்படத்திற்கு நிகராகக் கருதப்படும் தொலைக்காட்சியும் திரைப்படங்களை மக்களிடம் நேரடியாக வீட்டுக்கே கொண்டுவந்து சேர்க்கிறது. ஓ.டி.டி. தளங்களில் வெளியிடுவதற்காகவே தனித் திரைப்படங்களும் வெப் சீரியல்களும் எடுக்கப்படும் காலம் இது. இங்கே அரசியலுக்கும் திரைப்படத் துறைக்கும் உள்ள நெருக்கம் அதிகம். திரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள் அதிகம் என்பதிலிருந்து தமிழக மக்களிடம் திரைப்படத்தின் தாக்கம் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
திரைப்படத் துறை சம்பந்தமான படிப்புகள்:
நாட்டிலேயே பிரசித்திப் பெற்ற கல்வி நிறுவனம், புணேயில் உள்ள ஃபிலிம் அண்ட் டெலிஷன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கல்வி நிறுவனம். மத்திய அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாகத் திகழ்ந்த இக்கல்வி நிறுவனம் தற்போது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது. புணே திரைப்படக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் உலகெங்கிலும் தங்களது தனி முத்திரையைப் பதித்து, இக்கல்வி நிறுவனத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள். எனவே, இக்கல்லூரியில் சேருவதற்கு கடும் போட்டி உள்ளது.
டைரக்ஷன் அண்ட் ஸ்கிரீன்ப்ளே ரைட்டிங், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, சவுண்ட் ரிக்கார்டிங் அண்ட் சவுண்ட் டிசைன், ஆர்ட் டைரக்ஷன் அண்ட் புரடக்ஷன் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் திரைப்படத்துறையில் எம்.எஃப்.ஏ மூன்று ஆண்டு படிப்பைப் படிக்கலாம். ஸ்கிரீன் ஆக்டிங், ஸ்கிரீன் ரைட்டிங் (திரைப்படம், தொலைக்காட்சி, வெப் சீரிஸ்) ஆகிய பாடப்பிரிவுகளில் இரண்டு ஆண்டு எம்.எஃப்.ஏ படிக்கலாம்.
ஆர்ட் டைரக்ஷன் அண்ட் புரடக்ஷன் டிசைன் படிப்பில் சேர விரும்புபவர்கள் ஆர்க்கிடெக்சர், பெயிண்டிங், ஸ்கல்ப்சர், இன்டீரியர் டிசைன் போன்ற நுண்கலைப் படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகளைப் படித்திருக்க வேண்டும். மற்ற படிப்புகளில் சேர விரும்புவோர், ஏதாவது பட்டப்படிப்பைப் படித்திருக்க வேண்டும்.
இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, சவுண்ட் ரெக்கார்டிங் அண்ட் டெவிஷன் இன்ஜினீயரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் டெலிவிஷன் துறையில் ஓராண்டு போஸ்ட் கிராஜுவேட் சர்டிபிகேட் கோர்ஸ் படிக்கலாம். பட்டப் படிப்புப் படித்தவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு (Mixed Format Assessment) அடிப்படையில் இப்படிப்புக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சென்னையில் படிக்க...
தரமணியில் எம்.ஜி.ஆர் அரசு திரைப்படக்கல்லூரி - தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் உள்ளது. தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கீழ் செயல்பட்டு வந்த இந்தக் கல்வி நிறுவனம், தற்போது டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை - நுண்கலைப்பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.
திரைப்படத் தொழில்நுட்பம் சம்பந்தமாக நான்கு ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகளை (விஷுவல் ஆர்ட்ஸ்) படிக்கலாம். இந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்நாடு இசை - கவின்கலைப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கும். இங்கு ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஒலிப்பதிவு, படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் - காட்சிப்பயன் (அனிமேஷன் அண்ட் விஷுவல் எஃபெக்ட்ஸ்), இயக்கம், திரைக்கதை எழுதுதல் ஆகிய பாடப்பிரிவுகளில் நான்கு ஆண்டு இளநிலைப் பட்டப் படிப்புகளைப் படிக்கலாம்.
ஒளிப்பதிவு, டிஜிட்டல் இன்டர்மீடியட் ஆகிய படிப்புகளில் சேரவிரும்புவோர் பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களை முக்கியப் பாடங்களாக எடுத்து, தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிறப்புப் பாடமாக ஒளிப்படம் சார்ந்த தொழிற்படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இப்படிப்புகளில் சேரலாம்.
ஒலிப்பதிவு பட்டப்படிப்பில் சேர விரும்புவோர், பிளஸ் டூ வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்திருக்க வேண்டும். சிறப்புப் பாடமாக வானொலி அல்லது தொலைக்காட்சி அல்லது உள்நாட்டு மின்னணு உபகரணங்கள் சார்ந்த தொழில் படிப்புகள் அல்லது அதற்கு இணையான படிப்புகள் அல்லது எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் இப்படிப்பில் சேரலாம்.
இயக்கம், திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, அனிமேஷன் அண்ட் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆகிய படிப்புகளில் பிளஸ் டூ வகுப்புகளில் எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களும் சேரலாம்.
இங்குள்ள ஒவ்வொரு பாடப்பிரிவிலும் ஓர் இடம் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஓர் இடம் பிறமாநில மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவு உள்ளிட்ட இதர வகுப்பினர் பிளஸ் டூ தேர்வில் குறைந்தது 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
சினிமாட்டோகிராபி, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஆடியோகிராபி, படத்தொகுப்பு ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 60 சதவீதமும் திரைப்பட விமர்சனம் குறித்த திறனறித் தேர்வுக்கு 25 சதவீத மதிப்பெண்களும் நேர்காணலுக்கு 15 சதவீத மதிப்பெண்களும் எனக் கணக்கிடப்பட்டு 100க்கு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.
இயக்கம், திரைக்கதை எழுதுதல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் திரைப்பட விமர்சனம், கதை சொல்லுதல் குறித்த திறனறித் தேர்வுக்கு 45 சதவீத மதிப்பெண்களும் நேர்காணலுக்கு 15 சதவீத மதிப்பெண்களும் எனக் கணக்கிடப்பட்டு 100க்கு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.
அனிமேஷன் அண்ட் விஷுவல் எஃபெக்ட்ஸ் பாடப்பிரிவில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் திரைப்பட விமர்சனம், கதை சொல்லுதல், டிராயிங் அண்ட் பெயிண்டிங் குறித்த திறனறித் தேர்வுக்கு 40 சதவீத மதிப்பெண்களும் நேர்காணலுக்கு 20 சதவீத மதிப்பெண்களும் எனக் கணக்கிடப்பட்டு, 100க்கு மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தகுதிவாய்ந்த மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.
புதிய வாய்ப்புகள்:
நாட்டில் திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்றுத்தர கொல்கத்தாவில் உள்ள சத்யஜித் ராய் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்தக் கல்வி நிறுவனங்களில் திரைப்படம் சம்பந்தமான தியரி பாடங்களுடன் நேர்முகப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தங்களது படிப்பின் ஒரு பகுதியாகக் குறும்படம் ஒன்றைத் தயாரிக்க வேண்டியதிருக்கும். கேமரா, எடிட்டிங், திரைக்கதை, வசனம் எல்லாமே மாணவர்கள்தான். அவர்களின் எதிர்காலக் கனவுப் பணிக்கான ஒரு சிறிய முன்னோட்டமாக இது அமையும்.
திரைப்படத்துறை தொடர்பான படிப்புகளைப் படிப்பதன் மூலம் ஒரு படத்தை இயக்கவோ ஒளிப்பதிவு செய்யவோ முடியும் என்றாலும் டைரக்ஷன் படித்தவர்கள் சீனியர் இயக்குநர் ஒருவரிடம் சில காலம் உதவியாளராக இருந்து அனுபவப்பூர்வமாகத் திரைப்பட நுணுக்கங்களை அறிந்துகொண்டு, சில காலம் கழித்து தனியே படங்களை இயக்க முடியும். இதேபோல, ஒளிப்பதிவு படித்தவர்களும் அனுபவம் வாய்ந்த கேமராமேனிடம் சில ஆண்டுகள் உதவியாளராகச் சேர்ந்து தங்களது திறமையைக் கூர்தீட்டிக்கொள்வதன் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளராகப் பரிணமிக்க முடியும்.
மற்றபடி, திரைப்படத் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு மத்திய – மாநில அரசு திரைப்படப் பிரிவுகளிலும் ராணுவத்தில் உள்ள படத்தயாரிப்புப் பிரிவுகளிலும் வேலை கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. தொலைக்காட்சித் தொடர் தயாரிப்புப் பணிகளிலும் சேர முடியும். சவுண்ட் ரிகார்டிங், சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தவர்களுக்கு ஸ்டுடியோக்களில் வேலை கிடைக்கும்.
பெரிய நடிகராகப் பரிமளிப்பதும், வெற்றிப்பட இயக்குநராகத் திகழ்வதும் அந்தந்தப் படிப்புகளால் மட்டும் சாத்தியமாவது இல்லை. திரைப்படம் என்கிற கனவுத் தொழிற்சாலையில் வெற்றிகரமாக உலாவர அதற்குத் தனித்திறமையும் மக்களின் ஏகோபித்த ஆதரவும் வேண்டும் என்கிறார்கள் திரைப்படத் துறை அனுபவஸ்தர்கள்.
- கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர். தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com