கல்வி - வேலை வழிகாட்டி

மருத்துவ உலகில் ஒரு நவீனப் புரட்சி வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 18

நெடுஞ்செழியன்.தா

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ‘ஃபிட்னெஸ் டிராக்கர்’ முதல் காணொளி வழியாக மருத்துவர் வழங்கும் மருத்துவ ஆலோசனைவரை, எண்ணிலக்கத் தொழில்நுட்பம் (Digital technology) மருத்துவத் துறையை முற்றிலும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. அண்மைக் காலமாக கவனம் பெறும் ‘டிஜிட்டல் ஹெல்த்’, மருத்துவத் துறையில் ஆழமாக வேரூன்றிப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவருகிறது.

‘டிஜிட்டல் ஹெல்த்’ என்றால் என்ன? - மருத்துவமும் தொழில்நுட்பமும் கைகோத்து செயல்படும் துறை இது. தற்காலத்தில் மருத்துவத் துறை சந்தித்திருக்கும் பல சவால்களுக்கு டிஜிட்டல் ஹெல்த்புதுமையான தீர்வுகளை வழங்க முயல்கிறது எனலாம்.

மருத்துவ வசதிகளை மேம்படுத்த டிஜிட்டல் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதும், அது தொடர்பான அறிவை வளர்ப்பதுமாக இத்துறையை உலகச் சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. இதில் டெலிமெடிசின், திறன்பேசி மருத்துவச் செயலிகள், அணியக்கூடிய கருவிகள் (Wearable devices), செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் எனப் பல நவீன அம்சங்கள் அடங்கியுள்ளன

          

முக்கியத் தொழில்நுட்பங்கள்:

செயற்கை நுண்ணறிவு (AI): நோய் கண்டறிதல், சிகிச்சை திட்டமிடல், மருந்து கண்டுபிடிப்பு ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பிக் டேட்டா (Big Data): பெரும் அளவிலான சுகாதாரத் தரவுகளைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்வதன் மூலம் நோய்ப் பரவலைக் கண்டறிதல், சிகிச்சை முடிவுகளை மேம்படுத்துதல் ஆகியவை சாத்தியமாகிறது. குறைந்த, நடுத்தர வருமான நாடுகளில் சுகாதாரத்தை மேம்படுத்து வதில் பிக் டேட்டா முக்கியப் பங்கு வகிக்கிறது.

பிளாக்செயின் (Blockchain): மருத்துவப் பதிவுகள், தரவுகள் பாதுகாப்பு, தனியுரிமையை உறுதிசெய்ய பிளாக் செயின் தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.

டிஜிட்டல் ட்ரையல்ஸ் (Digital Trials): நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லாமலேயே, வீட்டில் இருந்த படி நவீன மருத்துவப் பரிசோதனைகளில் பங்கேற்க இது வழிவகை செய்கிறது.

இந்தியாவின் நிலை மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் வெறும் மேலை நாடுகளோடு மட்டும் நின்றுவிட வில்லை. இந்தியாவிலும் இதன் தாக்கம் ஆச்சரியப்பட வைக்கிறது. உதாரணமாக, மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவ மனை, சென்னையில் உள்ள சங்கர நேத்ராலயா ஆகியவற்றில் கூகுள் நிறுவனத்தின் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆயிரக்கணக்கான ‘ரெட்டினா ஸ்கேன்’களை ஆய்வு செய்கிறது.

ஒருவரின் கண்ணைப் பரிசோதிப் பதன் மூலமே, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதை ஏ.ஐ. துல்லியமாகக் கண்டறிந்து எச்சரிக்கிறது.

அதேபோல், வெளிநாடுகளில் அறிமுகமாகியுள்ள ‘எம்ப்ரேஸ்' (Embrace) போன்ற கைக்கடிகாரங்கள் பக்கவாத அறிகுறிகளை 48 மணி நேரத்திற்கு முன்பே கண்டறிந்து உயிரைக் காப்பாற்ற உதவுகின்றன. நீரிழிவு, புற்றுநோய் பாதிப்பில் உலகத் தலைநகராக மாறி வரும் இந்தியாவுக்கு இத்தகைய கண்டு பிடிப்புகள் வரப்பிரசாதம்.

சவால்கள் என்ன? - கிராமப்புறங்களில் உள்ள மக்கள் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற முடியாத பட்சத்தில், டெலிமெடிசின் மூலம் சிறந்த ஆலோசனைகளைப் பெற முடிகிறது. 2022இல் அமெரிக்காவில் 80% மக்கள் இச்சேவையைப் பயன்படுத்தியுள்ளனர். நேரமும் செலவும் மிச்சமாவதுடன், முதியவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கிறது.

இருப்பினும், ‘டிஜிட்டல் பிளவு’ (Digital Divide) ஒரு முக்கியத் தடையாக உள்ளது. இணைய வசதி இல்லாமல் இருப்பது, தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது, நோயாளிகளின் தரவுப் பாதுகாப்பு (Data Privacy) சிக்கல் போன்ற சவால்களை நாம் கடக்க வேண்டியுள்ளது.

‘டிஜிட்டல் ஹெல்த்’ என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல. அது சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவத்தைக் கொண்டுசேர்க்கும் ஒரு பாலமாகும். சவால்களைத் தகர்த்து, தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தினால், ஆரோக்கியமான எதிர்காலத்தை நாம் உறுதிப்படுத்த முடியும்.

மருத்துவ உலகில் நவீனப்புரட்சியை ஏற்படுத்திவரும் ‘டிஜிட்டல் ஹெல்த்’ தொடர் பான படிப்புகளும், அதை வழங்கும் கல்வி நிறுவனங்கள் பற்றியும், உலகளாவிய வேலைவாய்ப்புகள் பற்றியும் அடுத்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

நீங்களும் கேட்கலாம்! - வேலைவாய்ப்பு, உயர் கல்வி தொடர்பான கேள்விகளை, கல்வி - வேலை வழிகாட்டி சிறப்புப் பக்கத்துக்கு நீங்கள் அனுப்பலாம். கேள்விகளுக்கு இரா.நடராஜன் பதில் அளிப்பார். மின்னஞ்சல்: kalvivelai@hindutamil.co.in

SCROLL FOR NEXT