பிளஸ் டூ வகுப்பில் அக்கவுண்டன்சி பாடப்பிரிவை எடுத்துப் படித்த மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு இது. கல்லூரியில் பி.காம். போன்ற ஏதாவது பட்டப் படிப்பைப் படித்துக்கொண்டே, காஸ்ட் அக்கவுண்டிங் படிக்கலாம். ஏதேனும் வேலைக்குச் செல்பவர்கள்கூட, இந்தப் படிப்பைப் படிக்கலாம். பிற படிப்புகளைப் போல அதிக செலவு இல்லை. படித்து முடித்தவுடன் நல்ல ஊதியத்தில் வேலையும் கிடைத்துவிடுகிறது என்பது இப்படிப்பின் சிறப்பு அம்சம்.
தொழில் நிறுவனங்களை அறிவியல்ரீதியாக நிர்வாகம் செய்வதற்காக நிர்வாகிகளை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் இன்ஸ்டிடியூட் ஆஃப் காஸ்ட் அக்கவுண்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா (Institute of Cost Accountants of India). மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் இது. அக்கவுண்டிங் துறையில் ஆர்வமும் நிர்வாகத் துறையில் பணிபுரியும் எண்ணமும் ஆய்வியல் நோக்கும் உடையவர்களுக்கு ஏற்ற பணி இது.
ஒரு பொருளை உருவாக்கும்போது எந்த அளவுக்குச் செலவைக் கட்டுப்படுத்தலாம், ஒரு பொருளின் விலையை எவ்வாறு நிர்ணயிக்கலாம், எப்படி எல்லாம் செலவைக் குறைத்தால் லாபத்தை உயர்த்தலாம் என்பதை எல்லாம் கணக்கிட்டுச் சொல்வது காஸ்ட் அக்கவுண்டன்ட் வேலை. நியாயமான விலையில், அதே வேளையில் தரமான பொருள்களை மக்களுக்கு வழங்குவதிலும் காஸ்ட் அக்கவுண்டன்ட்களின் பணி முக்கியமானது. வர்த்தகத்தில் நிதி, விற்பனை, பொருள் தயாரிப்பு என்கிற மூன்று நிலையையும் ஒருங்கிணைத்து, செயல்பட வேண்டிய பணியே அவர்களுடையது.
தொழில் உற்பத்தி நிறுவனத்தில் நிர்வாகம் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும், திறம்பட நடத்துவதற்கும், பட்ஜெட் தயாரிப்பதற்கும், செயல்பாடு சீராகவும் சிறப்பாகவும் நடைபெறுகிறதா என்று சோதிப்பதிலும் பொருள் உற்பத்தி - சேவை மேலாண்மையிலும் இவர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். செலவின திட்டமிடல், முதலீடு திட்டமிடல், திட்டப்பணி மேலாண்மை, உள் தணிக்கை, செலவின தணிக்கை, நஷ்டத்தில் இயங்கி மூடப்பட்ட தொழிற்சாலையை எப்படி மீண்டும் வெற்றிகரமாக இயங்கவைப்பது, சரியான முடிவுகளை எடுப்பது எப்படி என்பதை எல்லாம் திறம்பட மேற்கொள்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் செலவு மேலாண்மையை காஸ்ட் அக்கவுண்டன்ட்டுகள்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.
பேச்சுவார்த்தை நடத்தும் திறன், கம்ப்யூட்டர் திறமை, பல்வேறு வகையான அக்கவுண்டிங் மென்பொருள்களைக் கையாளும் திறன், புத்திசாலித்தனமாக முடிவுகள் எடுத்தல், தனிப்பட்ட மதிப்பீடு போன்ற திறமைகள் காஸ்ட் அக்கவுண்டன்ட்டுகளுக்கு அவசியம்.
தற்போது பொருள் உற்பத்தி - தயாரிப்புத் துறை வேகமாக வளர்ந்து வருவதால் காஸ்ட் அக்கவுன்டண்ட்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. காஸ்ட் அக்கவுண்ட்டிங் படித்தவர்கள் மத்திய, மாநில அரசுகளில் இடைநிலை, உயர்நிலை பொறுப்புகளைப் பெறலாம். வங்கிகள் - இன்சூரன்ஸ் துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.
தனியார் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. இங்கு சிறப்பாகச் செயல்படுபவர்களுக்கு நிறுவனத்தை வழிநடத்த வேண்டிய தலைமை பொறுப்புகளை வழங்குகிறார்கள். உதாரணத்துக்கு தலைவர் மற்றும் மோலாண்மை இயக்குநர், செயல் இயக்குநர், நிதி இயக்குநர், நிதி கட்டுப்பாட்டாளர், தலைமை கணக்காளர், விற்பனை மேலாளர், தலைமை நிர்வாகத் தணிக்கையாளர் போன்ற பெரிய பொறுப்புகள் கிடைக்கின்றன.
மத்திய அரசு நடத்தும் தேர்வில் (Indian Cost Accounts Service) தேர்ச்சி பெறும் காஸ்ட் அக்கவுண்டன்ட்டுகளுக்கு, ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற பணிகளுக்கு இணையான குரூப்-1 பதவி கிடைக்கும். இவர்கள் வரித்துறை, நிதித்துறையில் உயர் பொறுப்புகளில் அமர்த்தப்படுவார்கள்.
காஸ்ட் அக்கவுண்டன்சி படித்து முடித்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலும் மேலாண்மைக் கல்லூரிகளிலும் மேனேஜ்மெண்ட் படிப்புத் துறைகளில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேரலாம். அதற்காக, பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளின்படி நெட், ஸ்லெட் போன்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆய்வுப் படிப்புகளில் நேரடியாகச் சேரவும் சில பல்கலைக்கழகங்கள் அனுமதி அளிக்கின்றன. காஸ்ட் அக்கவுண்டிங் படித்தவர்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வேலைவாய்ப்புக் கிடைக்கும்.
காஸ்ட் அக்கவுண்டிங் படிப்பதற்கு ஃபவுண்டேஷன் தேர்வு (Foundation Course Examination), இன்டர்மீடியட் தேர்வு (Intermediate Course Examination), இறுதித்தேர்வு (Final Course Examination) என்கிற மூன்று தேர்வுகளை எழுத வேண்டும். இதற்காக, நேரடி வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம். அல்லது தொலைநிலைக் கல்வி மூலமும் படிக்கலாம்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஃபவுண்டேஷன் கோர்ஸில் சேரப் பதிவு செய்யலாம். பிளஸ் டூ தேர்ச்சி பெற்ற பிறகு, ஃபவுண்டேஷன் தேர்வுகளை எழுத அனுமதிக்கப்படுவார்கள். ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் பிசினஸ் லாஸ் அண்ட் பிசினஸ் கம்யூனிகேஷன், ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் ஃபைனான்சியல் அண்ட் காஸ்ட் அக்கவுண்டிங், ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் பிசினஸ் மேட்டிக்ஸ் அண்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், ஃபண்டமெண்டல்ஸ் ஆஃப் பிசினஸ் எகனாமிக்ஸ் அண்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய நான்கு பாடப்பிரிவுகளில் ஃபவுண்டேஷன் தேர்வை எழுத வேண்டும்.
இந்த அடிப்படைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்த கட்டமாக இன்டர்மீடியட் தேர்வை எழுதலாம். பட்டதாரிகள் நேரடியாக இன்டர்மீடியட் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இன்டர்மீடியட் தேர்வின் முதல் பிரிவில் பிசினஸ் லாஸ் அண்ட் எத்திக்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், டைரக்ட் அண்ட் இன்டைரக்ட் டாக்ஸ்சேஷன், காஸ்ட் அக்கவுண்டிங் ஆகிய நான்கு பாடப்பிரிவுகள் உள்ளன. அதன் இரண்டாவது பிரிவில் ஆபரேஷன் மேனேஜ்மெண்ட் அண்ட் ஸ்ரேட்டஜிக் மேனேஜ்மெண்ட், கார்ப்பரேட் அக்கவுண்டிங் அண்ட் ஆடிட்டிங், பைனான்சியல் மேனேஜ்மெண்ட் அண்ட் பிசினஸ் டேட்டா அனாலிசிஸ், மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங் ஆகிய நான்கு பாடப்பிரிவுகள் உள்ளன.
இன்டர்மீடியட் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதித்தேர்வை எழுத அனுமதிக்கப்படுவார்கள். இறுதித்தேர்வின் முதல் பகுதியில் (குரூப்3) கார்ப்பரேட் அண்ட் எகனாமிக்ஸ் லாஸ், ஸ்ட்ரேட்டஜிக் பைனான்சியல் மேனேஜ்மெண்ட், டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் இன்டர்நேஷனல் டாக்ஸ்சேஷன், ஸ்ட்ரேட்டஜி்க் காஸ்ட் மேனேஜ்மெண்ட் ஆகிய நான்கு பாடப்பிரிவுகள் உள்ளன.
இரண்டாவது பகுதியில் (குரூப்4) காஸ்ட் மேனேஜ்மெண்ட் ஆடிட், கார்ப்பரேட் பைனான்சியல் ரிப்போர்ட்டிங், இன்டைரக்ட் டாக்ஸ் லாஸ் அண்ட் பிராக்டிஸ் ஆகிய மூன்று பாடப்பிரிவுகள் உள்ளன. இதில் விருப்பப் பாடமாக உள்ள ஸ்ட்ரேட்டஜிக் பெர்ஃபாமன்ஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் பிசினஸ் வேல்யூவேஷன், ரிஸ்க் மேனேஜ்மெண்ட் இன் பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ், ஆன்டரபுருனர்ஷிப் அண்ட் ஸ்டார்ட் அஃப் ஆகிய மூன்று பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படிக்க வேண்டும்.
இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு சாப்ஃட் அண்ட் டெக்னிக்கல் ஸ்கில்ஸ் பிரிவில் 140 மணி நேரம் பயிற்சி பெற வேண்டும். 7 நாட்கள் தொழில் பயிற்சி (Industry Oriented Training) பெற வேண்டும். 15 மாதங்கள் செயல்முறை பயிற்சியில் சேர வேண்டும். இதன் பிறகு, கவுன்சிலில் காஸ்ட் அக்கவுண்டன்ட்டாகப் பதிவு செய்ய வேண்டும்.
காஸ்ட் அக்கவுண்டிங் (சிஎம்ஏ) தகுதி, பல்கலைக்கழக முதுநிலைப் பட்டத்துக்கு இணையானதாகக் கருதப்படும். இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துடன் (IGNOU) இந்த அமைப்பு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, இந்தப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ., எம்.காம்., பி.காம். ஆகிய படிப்புகளில் சேர்ந்து படிக்கும் காஸ்ட் அக்கவுண்டிங் மாணவர்களுக்குச் சில பாடப்பிரிவுகளை எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்களில் அக்கவுண்டன்டுகளின் தேவையைக் கருத்தில் கொண்டு அக்கவுண்டிங் டெக்னீஷியன் (CAT) என்கிற சான்றிதழ் படிப்பை இந்த அமைப்பு தொடங்கியுள்ளது. பிளஸ் டூ படித்த மாணவர்கள் இதில் சேரலாம். இந்தச் சான்றிதழ் படிப்பைப் படித்த மாணவர்கள், தொடர்ந்து படித்து காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டன்டுகளாக ஆகலாம்.
மேலும் விவரங்களுக்கு: www.sircoficwai.com | www.icwai.org
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர் | தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com