ஓவியமும் சிற்பமும் புராதனக் கலைகளாகக் கருதப்பட்டாலும், கால மாறுதல்களுக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களைப் பெற்று, அதேசமயம் உன்னதம் கெடாமல் ஓங்கி வளர்ந்துள்ளன. மரபு ஓவியத்திலிருந்து மார்டன் ஆர்ட் வரை ஓவியக்கலையில் மாற்றங்கள் வந்துவிட்டன.
சித்திரமும் கைப்பழக்கம் என்பார்கள். ஆனால், முறையாக இதைக் கற்றுக் கொடுத்து, அதன் மூலம் அவர்களது திறமையை வளர்க்க உதவும் படிப்புகளும் வந்துவிட்டன. இந்தக் கலையில் தீவிர ஆர்வம் உள்ள மாணவர்களை, இந்தக் கவின் கலைக் கல்வி நிலையங்கள் பட்டைத் தீட்டி ஜொலிக்கச் செய்கின்றன.
படைப்பாகத் திறமை, ஓவியத்தில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற படிப்புகள் கவின்கலைப் படிப்புகள். பிளஸ் டூ படித்த மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம். சென்னை அரசு கவின் கலைக் கல்லூரிதான் நாட்டிலேயே முதன் முதலாகத் தொடங்கப்பட்ட தொழிற்கலைப் பள்ளி.
பிரிட்டிஷ் ராணுவ சேவையில் இருந்த பிரபல சர்ஜன் அலெக்ஸாண்டர் ஹண்டர் 1850இல் சென்னையில் ஸ்கூல் ஆஃப் இன்டஸ்ட்ரியல் ஆர்ட்ஸ் என்கிற இந்தத் தொழிற்கலைப் பள்ளியைத் தொடங்கினார். இதையடுத்துதான் 1875இல் மும்பை, கொல்கத்தா, லாகூர் ஆகிய இடங்களில் இதேபோன்ற தொழிற்கலைப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
1952இல் இந்தப் பள்ளி டைரக்டர் ஆஃப் பப்ளிக் இன்ஸ்ட்ரக்ஷன் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1928இல் இதன் முதல் இந்திய முதல்வராக தேவிபிரசாத் ராய் செளத்ரி பதவியேற்றார். 1957இல் பிரபல ஓவியர் கே.சி.எஸ். பணிக்கர் முதல்வராக இருந்த காலத்தில்தான் சென்னையில் இருந்த தொழிற்கலைப் பள்ளி கல்லூரியாகத் தரம் உயர்த்தப்பட்டது.
1979இல்தான் இந்தக் கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்துடன் அரசு கவின் கலைக் கல்லூரி இணைப்புக் கல்லூரியாகச் செயல்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள அரசுக் கவின் கலைக் கல்லூரியில் காட்சித் தொடர்பு வடிவமைப்பு (விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன்), வண்ணக்கலை (பெயிண்டிங்), சிற்பக்கலை (ஸ்கல்ப்ச்சர்), சுடுமண் வடிவமைப்பு (இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் செராமிக்), துகிலியல் வடிவமைப்பு (இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல்), பதிப்போவியம் (பிரிண்ட் மேக்கிங்) ஆகிய துறைகளில் நான்காண்டு இளங்கவின் கலைப் பட்டப்படிப்புகள் (பி.எப்.ஏ) உள்ளன.
அத்துடன் இந்தக் கல்லூரியில் கவின் கலைப் படிப்புகளில் முதுநிலைப் பட்டப் படிப்புகளும் உள்ளன. திரைத்துறை, ஓவியத்துறைகளில் சிறந்து விளங்கும் பலர் இக்கல்லூரியைச் சேர்ந்தவர்கள். கும்பகோணம் நகராட்சியால் 1887இல் தொடங்கப்பட்ட சித்ரகலாசாலை, அந்தக் காலத்தில் பொம்மை காலேஜ் என்று மக்களிடம் பிரபலமாக இருந்தது.
பின்னர் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் என்று பெயர் மாறி, தற்போது அரசு கவின் கலைக் கல்லூரியாகத் திகழ்கிறது. இங்கு காட்சித் தொடர்பு வடிவமைப்பு (விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன்), வண்ணக்கலை (பெயிண்டிங்), சிற்பக்கலை (ஸ்கல்ப்ச்சர்) ஆகிய துறைகளில் நான்காண்டு இளங்கவின் கலைப் பட்டப்படிப்புகள் உள்ளன.
தற்போது மதுரையிலும் அரசு கவின் கலைக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பெயிண்டிங், சிற்பம், விஷுவல் கம்யூனிகேஷன் ஆகியப் பாடப்பிரிவுகளில் பிஎப்ஏ நான்கு படிப்பைப் படிக்கலாம்.
இந்தக் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு உள்ளது. லைப் மாடல் ஸ்டடீ, பாடம் தொடர்பான தேர்வு ஆகியவை இரண்டு செய்முறைத் தேர்வுகள் இந்த நுழைவுத் தேர்வின் ஒரு பகுதியாக உள்ளன.
அத்துடன் அப்ஜெக்டிவ் முறையில் தேர்வும் நேர்காணலும் இருக்கும். இவற்றில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இப்படிப்புக்குத் தகுதியுடைய மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பொதுப் பிரிவின் கீழ் 23 வயது வரையிலும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 26 வயது வரையிலும் இப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். அரசு கவின் கலைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.
அத்துடன் பிஎப்ஏ இறுதியாண்டில் படிக்கும் 10 சிறந்த மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். அரசு கவின் கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் படிப்புக்குத் தேவையான 2 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் இலவசமாக வழங்கப்படும்.
மாமல்லபுரத்தில் 1958ஆம் ஆண்டு சிற்பக்கலைப் பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டு, படிப்படியாக வளர்ந்து, 1980இல் சிற்பக் கல்லூரியாக மாறியது. இந்த அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் டிரெடிஷனல் ஆர்க்கிடெக்சர் பாடப்பிரிவில் நான்கு ஆண்டு பி.டெக். படிப்பில் சேர விரும்புவோர் பிளஸ் டூ வகுப்பில் கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கவின்கலை இளையர் மரபுச் சிற்பக்கலை (கற்சிற்பம்/ சுதைச் சிற்பம்/ மரச்சிற்பம்/ உலோகச் சிற்பம்) படிப்புகளிலும் கவின் கலை மரபு ஓவியமும் வண்ணமும் பாடப்பிரிவுகளிலும் பிஎப்ஏ படிப்புகளில் சேர விரும்புவோர் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பரோடாவில் உள்ள எம்எஸ் பல்கலைக்கழகம் மும்பையில் ஜே.ஜே. ஸ்கூல் ஆஃப் அப்ளைடு ஆர்ட், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம், தில்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா போன்ற கல்வி நிறுவனங்களும் கவின் கலைப் படிப்புகளைப் படிப்பதற்குப் புகழ்பெற்ற நிறுவனங்களாகும். இதுபோல மாணவர்களை ஈர்க்க மேலும் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன.
ஓவியக் கலை படித்த மாணவர்கள் எல்லாம் பள்ளிகளில் டிராயிங் மாஸ்டர் ஆவது மட்டுமே வாய்ப்பு என்று கருத வேண்டியதில்லை. அவர்களுக்கான வாய்ப்புகள் பல்வேறு துறைகளில் விரிந்து வருகின்றன. அனிமேஷன், விஷுவல் கம்யூனிகேஷன், அட்வர்டைசிங், இன்டீரியர் டெக்கரேஷன், ஆர்ட் டைரக்ஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன.
நுண்கலைப் படிப்புகளுடன் அதற்குத் தொடர்புடைய கம்ப்யூட்டர் தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெறும் மாணவர்களுக்கு நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அட்வர்டைசிங் நிறுவனங்களில் விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன் மாணவர்களுக்கு வேலை கிடைக்கும். தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையிலும் திறமையாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
பிரபல பீங்கான் பொருள் உற்பத்தி நிறுவனங்களிலும் கட்டிடக்கலை நிறுவனங்களிலும் செராமிக் டிசைன் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். டெக்ஸ்டைல் மில்கள், அரசின் நெசவாளர் சேவை மையங்களில் டெக்ஸ்டைல் டிசைன் படித்தவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். ஏற்றுமதி ஆடை நிறுவனங்களிலும் வேலைக்குச் சேரலாம்.
திறமையானவர்கள் காஸ்ட்யூம் டிசைனராக முடியும். தங்களது தனித்த ஓவியத் திறமையினால் சில திறமையான ஓவியர்களின் ஓவியங்களைத் தனியார் நிறுவனங்களும் ஓவிய ஆர்வலர்களும் நல்ல விலையில் வாங்கிக் கொள்கிறார்கள்.
அத்துடன், திரைப்படம், தொலைக்காட்சி போன்ற துறைகளில் நுழைவதற்கான படிக்கட்டுகளாக இந்தப் படிப்புகள் இருப்பதால் கவின் கலைப் படிப்புகளும் ஓவியத்துறையில் ஆர்வமிக்க மாணவர்களிடம் முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டன.
- கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; தொடர்புக்கு: pondhanasekaran@yahoo.com