“ஒருமுறை 200 ரூபாய்ன்னு சொல்லி நூறு ரூபாயைக் கொடுத்து ஏமாற்றிவிட்டதாகப் பார்வைக் குறை பாடுள்ள ஒரு மாற்றுத்திறனாளி முதியவர் வருத்தப் பட்டார். அப்போதுதான், அவரைப் போன்றவர்களுக்கு உதவுகிறஒரு ‘ஆப்’ உருவாக்க நினைத்தேன்” என்கிறார் முகமது அப்பாஸ்.
அதேபோன்று ஒரு செயலியை உருவாக்கி யிருக்கிறார். மாற்றுத்திறனாளிகள் தங்களது குரல் மூலமாகத் திறன்பேசியைத் திறந்து, இந்தச் செயலியை அடைந்து, அதற்கு நேரே ரூபாய் நோட்டுகளை நீட்டி அவற்றின் மதிப்பை அறிந்திட முடியும். தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள்கூட இதைப் பயன்படுத்த முடியும்.
ரூபாய் நோட்டு அழுக்காக, பயன்படுத்த முடியாததாக இருக்கிறதா என்றுகூட முகமது அப்பாஸின் இந்தச் செயலி சொல்லிவிடும். இதன் மூலமாகத் தமிழ், ஆங்கிலப் புத்தகங்களில் இருக்கிற தகவல்களை அறிய முடியும்.
ஏதேனும் பொருளை வைத்த இடம் தெரியாமல் மாற்றுத் திறனாளிகள் தடுமாறும்போது, அது எங்கிருக்கிறது என்றறிய முடியும். சாலையில் வருகிற பேருந்தை நோக்கித் திறன்பேசியைக் காட்டி னால்போதும்; பேருந்து எண், செல்லுமிடம் உள்ளிட்ட தகவல்களை யாருடைய உதவியும் இன்றிப் பெற முடியும்.
“மொபைல்போனில் பட்டனை ‘க்ளிக்’ செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. வால்யூம் பட்டனை அழுத்தினாலே அனைத்தையும் செய்கிற வகையில் வடிவமைத்திருக்கிறேன்” என்கிறார் முகமது அப்பாஸ். முதுமை, உடல்நலக் குறைவால் அவதிப்படுபவர்களும் இதைப் பயன்படுத்தலாம்.
சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள பட்டேல் நகரில் குடும்பத்தோடு வசிக்கிறார் முகமது அப்பாஸ். அங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் டூ வரை படித்தவர், பின்னர் எலக்ட்ரானிக்ஸ் பட்டயப் படிப்பில் சேர்ந்தார். அப்போதுதான், கணினித் துறையில் சாதிக்க வேண்டு மென்கிற ஆசை அவருக்குள் பிறந்தது.
அப்பாஸின் தந்தை ஓர் உணவகத்தில் சர்வராகப் பணியாற்றியவர். இவரது பூர்விகம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகிலுள்ள ஒரு கிராமம். எளிமையான பின்புலத்தில் இருந்து வந்த காரணத்தால், சாதாரண மனிதர்களுக்கு உதவுகிற எண்ணம் இவருக்குள் வேர்பிடித்திருக்கிறது.
“நானாகப் புத்தகங்களைப் படித்துக் கற்றுக் கொண்டு, சாப்ட்வேர் டெவலப்பிங்கைச் செய்து வருகிறேன். ஏஐ வந்த பிறகு இந்த வேலை இன்னும் சுலபமாகியிருக்கிறது” என்கிறார் முகமது அப்பாஸ்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே, ‘அறிவு’ என்றழைத்தால் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுகிற ஒரு ரோபாட்டை வடிவமைத்திருக்கிறார் இவர். தமிழில் குர்ஆன் வசனங்களைத் தலைப்புவாரியாகத் தேடியெடுத்து வாசிக்கச் சிரமப்பட்டவர்களுக்காக, அப்போதே ஒரு மென்பொருளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
தற்போது பள்ளி மாணவர்கள் பாடங்களைப் பயில்வதில் இருக்கும் சிரமங்களைக் குறைக்க, ஏஐ உதவியோடு ‘ஏஐ டீச்சர் ஃபார் தமிழ்நாடு ஸ்டேட் போர்டு சிலபஸ்’ எனும் செயலியை வடிவமைத்திருக்கிறார்.
“தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களில் இருந்து என்ன கேள்வி கேட்டாலும், அதற்கான பதில் எந்தப் பாடத்தில், எந்தப் பக்கத்தில், எந்தப் பத்தியில் இருக்கிறது என்று இந்த ‘ஆப்’ பதிலளிக்கும்.
எளிதாகப் புரியும்படி விளக்கும். மாணவர்கள் எப்படிப் படித்திருக்கின்றனர் என்றறிய தேர்வும் நடத்தும். தமிழ், ஆங்கிலம் இரண்டு மீடியம் மாணவர்களும் பயன்படுத்தலாம்” என்று இவர் சொல்லும் பதில் நிச்சயம் பல பெற்றோரை ஆசுவாசப்படுத்தும்.
இதே போன்று ‘மொழிச்சிறகு’ என்கிற பெயரில் தமிழில் ஒலிக்கிற ‘காணொளி’யை அப்படியே எழுத்துருவாகத் தருகிற செயலியையும் வடிவமைத் திருக்கிறார். மாணவர்கள், ஆய்வாளர்கள், ஊடக உலகினர் தவிர்த்து அரசியல் கட்சியினரும் தமது பொதுக்கூட்ட உரைகளைச் செய்தியாக்க உதவக் கூடியது இது.
இதே போன்று, வேற்று மொழியில் இருக்கிற காணொளியைத் தமிழில் மொழிபெயர்த்து ஒலிக்க வைக்கிற, எழுத்துருவாகவும் தருகிற செயலியையும் தயாரித்திருக்கிறார் முகமது அப்பாஸ். “சோஷியல் மீடியாவுல புரியாத மொழியில வர்ற வீடியோவைச் சரியாகப் புரிஞ்சுக்க இது உதவும்” என்கிறார்.
52 மொழிகளைப் பேசுகிறவர்கள் பயன்படுத்துகிற வகையில் இதை வடிவமைத்திருக்கிறார். ‘அதுக்கு சேம்பிள் வேணுமா’ என்பதுபோல, வங்க மொழியில் இருக்கிற ஒரு செய்தித் துணுக்கைச் சில நொடிகளில் தமிழில் மாற்றி ஒலிக்கவிடுகிறார். தற்போது டப்பிங் துறையிலும் ஏ.ஐ. நுட்பத்தைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறார்.
இந்தச் செயலியை வெறும் இரண்டே வாரங்களில் உருவாக்கியதாகச் சொல்லி ஆச்சர்யமூட்டுகிறார். “முயற்சிக்கு ஏற்ற பலன் / இடத்தை அடைய முடியாத வருத்தம் இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம், டிகிரி படிக்காததுதான்” எனும் இவரைத் தற்போது பல கல்லூரிகள் மாணவர்களிடத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்து வருகின்றன.
- uthayasankaran.p@hindutamil.co.in