‘ஜுராசிக் பார்க்’ படம் மொத்தம் 7 பாகங்கள் வந்துவிட்டன. நம் நிலத்தில் வாழ்ந்து அழிந்து போன உயிரினங்களை அத்தனை பாகங்களிலும் ரத்தமும் சதையுமாக உலவவிட்டது அந்தப் படம். சரி, படத்தில் கர்ஜித்த டைனசோர்கள் உயிர்பெற்றது எப்படி என்று எத்தனை பேர் யோசித்தீர்கள்? பெரும்பாலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்பார்கள்.
ஆனால், அதெல்லாம் பழைய கதை. இப்போது வந்தவிட்டது, அனிமட்ரானிக்ஸ் (Animatronics). இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஏகப்பட்ட மாயாஜாலங்களை நிகழ்த்த முடியும்.
ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் காணும் பிரம்மாண்ட உயிரினங்கள், மேலைநாட்டுத் தீம் பார்க்குகளில் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் பேசும் பொம்மைகள், லண்டன், நியூயார்க் அருங்காட்சியகங்களில் உண்மை யாகவே மூச்சுவிடும் அழிந்த உயிரினங் களின் உருவங்கள் என எல்லாவற்றிலும் பின்னணியில் இருப்பது அனிமட் ரானிக்ஸ்.
உலகம் முழுவதும் வெகுவேகமாக அனிமட்ரானிக்ஸ் துறை வளர்ந்துவருகிறது. பொழுதுபோக்கு களில் மட்டுமல்ல; கல்வி, மருத்துவம், பாதுகாப்பு, விண்வெளி ஆராய்ச்சி போன்ற பல துறைகளிலும் இது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அனிமட்ரானிக்ஸ் என்றால் என்ன? - அனிமட்ரானிக்ஸ் என்பது மெக்கட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறையின் ஒரு சிறப்புக் கிளை. அனிமேஷனும் எலெக்ட்ரானிக்ஸும் சேர்ந்த பிரிவு
(Animation + Electronics = Animatronics). மோட்டார்கள், சென்சார்கள், ஹைடிராலிக், நியூமேட்டிக் அமைப்புகள், கணினிக் கட்டுப்பாடு களைப் பயன்படுத்தி ஓர் உருவத்தை உயிருள்ள உயிரினம்போல இயக்கு வதே இந்தத் தொழில்நுட்பத்தின் நோக்கம்.
ஒரு சிங்கம் தலையைத் திருப்புவது, கண் சிமிட்டுவது, கர்ஜிப்பது போன்ற நுட்பமான அசைவுகள் அனைத்தும் துல்லியமாக நிரலாக்கப்பட்ட இயந்திர அமைப்புகளால் நிகழ்கின்றன. அனிமட்ரானிக்ஸ் பிரிவில் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் இன்னும் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை. ஆனால், அந்தத் தொழில்நுட்பத்தில் அடுத்தக் கட்டமான ‘Stuntronics’, ‘automatronics’ உலகெங்கும் அறிமுக மாகிவிட்டன.
டிஸ்னியின் தொழில்நுட்பச் சாதனைகள்: 2018ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி இமேஜினியரிங் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஸ்டன்ட்ரானிக்ஸ் தொழில் நுட்பம், ரோபாட்டிக்ஸ் உலகில் ஒரு மைல்கல். டிஸ்னியின் ஸ்பைடர்-மேன் ஸ்டன்ட்ரானிக் ரோபாட், 20–25 மீட்டர் உயரத்திலிருந்து குதித்து, காற்றில் சுழன்று, துல்லியமாகத் தரையிறங்கும் திறன் கொண்டது. இது பொறியியல், இயற்பியல், கணினி அறிவியலின் ஒருங்கிணைந்த சாதனை. இதன் அடுத்த பரிணாமமே ஆட்டோமேட்ரானிக்ஸ்.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சென்சார் தொழில்நுட்பத்துடன் இணைந்து, மனித முகபாவனைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப எதிர்வினையாற்றும் ரோபாட்கள் உருவாகி வருகின்றன.
எடுத்துக்காட்டாக, ஏற்கெனவே ‘அமெக்கா’ (Ameca), ‘சோபியா’ (Sophia) போன்ற ரோபாட்கள் மனிதர்களின் முகபாவனைகளை கேமரா மூலம் படித்து (Emotion Recognition) அவர்கள் சோகமாக இருக்கிறார்களா அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பேசுகின்றன. ஏ.ஐ இணைவதால், இயந் திரங்களால் மனிதர்களைப் போலவே சிந்திக்கவும் பதிலளிக்கவும் முடிகிறது.
1960களிலேயே ஆடியோ-அனிமட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது டிஸ்னி. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள அவதார் – பண்டோரா தீம் பார்க்கில் காணப்படும் 3 மீட்டர் உயர முள்ள ‘நாவி ஷாமன்’ அனிமட்ரானிக் உருவம், உலகின் மிக நுட்பமான மனித வடிவ ரோபாட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அதேபோல், ‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ சவாரியில் பயன்படுத்தப்படும் சில அனிமட்ரானிக் உருவங்கள் 50 ஆண்டுகளுக் கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவத் துறையில்: கார்னஜி மெலன் பல்கலைக் கழகத்தின் ரோபாடிக்ஸ் இன்ஸ்டிடியூட், எம்.ஐ.டி. மீடியா ஆய்வகம், டிஸ்னி ரிசர்ச் போன்ற நிறுவனங்கள் அனிமட் ரானிக்ஸ் துறையில் உலகின் முன்னணி ஆராய்ச்சி மையங்களாக உள்ளன. இந்த நிறுவனங்கள் உயிரியல் இயக்கங் களைப் பின்பற்றும் ரோபாட்கள், சமூகத் தொடர்பு கொண்ட மனித வடிவ ரோபாட்கள், உணர்வுகளை வெளிப் படுத்தும் இயந்திரங்கள் ஆகியவற்றில் முன்னோடிகளாக உள்ளன.
எதிர்காலம்: பொறியியல், கலை, கற்பனை ஆகிய மூன்றும் ஒன்றிணையும் அற்புதத் துறைதான் அனிமட்ரானிக்ஸ். இதன் உட்கூறுகளான மெக்கானிகல் டிசைன், கன்ட்ரோல் சிஸ்டம்ஸ், எம்பெடட் சிஸ்டம்ஸ், ஏ.ஐ. தொழில்நுட்பம், நியூரல் நெட்வொர்க்ஸ் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, திரைப்படத் துறை முதல் மருத்துவம் வரை வேலைவாய்ப்புகள் காத்திருக் கின்றன.
அனிமட்ரானிக்ஸ் தொழில்நுட்பம் இன்று பல்வேறு பரிமாணங் களில் வளர்ந்துள்ளது. மனிதர்களைப் போலவே தோற்றமளிக்கும் ஹியூமனாய்டு, இயற்கையை நகலெடுக்கும் உயிரியல் உத்வேகம் பெற்ற (Bio-Inspired) கல்விக்கு உதவும் உரையாடும் ரோபாட்கள் என இவை பல துறைகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
எதிர்காலத்தில் இவை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டு மல்லாமல், தனிமையில் வாடும் முதியவர்களுக்குத் துணையாகவும் (Companion Robots), மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களாகவும் மாறும் வாய்ப்பு அதிகம்.
மனிதர்களுடன் உரையாடும், உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் உயிர்ப்பான இயந்திரங்களாக அனிமட் ரானிக்ஸ் மாறும் என்பதில் சந்தேகம்
இல்லை. ஆனால், எதிர்காலத் தொழில் நுட்பங்களில் உலகம் முதலீடு செய்து வரும் வேளையில், நமது பல்கலைக்கழகங்கள் இன்னும் பாரம்பரிய பாடத்திட்டங்களில் சிக்கிக்கொண்டிருப்பதுதான் கவலையளிக்கிறது.
- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org