திசைகாட்டி

உதவிக்காக அழைக்கும் சிறார்கள்.. தொண்டு நிறுவனத்தின் உதவிகள்

ராகா

இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஒரு கோடிக்கும் அதிகமானோர் குழந்தைத் தொழிலாளராக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. ஏற்கெனவே 1948ஆம் ஆண்டு 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலையில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டு சட்டம் அமலானது. தொடர்ச்சியாக அடுத்தடுத்து புதிய சட்டங்கள் இயற்றப்பட்டு 2009ஆம் ஆண்டு, 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

அரசுடன் சேர்ந்து பல தொண்டு நிறுவனங்களும் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றும் திட்டத்தின் கீழ் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வருகிறது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ’ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா’ அமைப்பு. இதுவரை பல ஆயிரம் சிறார்களை மீட்டு அவர்களுக்குப் பள்ளிக்கல்வி கிடைப்பதை இந்த அமைப்பு உறுதி செய்திருக்கிறது.

இந்நிலையில் இந்த அமைப்பின் ‘முன்னாள் மாணவர்கள் சங்கம்’ சார்பாக சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இந்நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர், டாக்டர். கல்பனா சங்கர், “கல்வி, பெண்கள் முன்னேற்றம் தொடர்பான துறையில் கடந்த 20 ஆண்டுகளாக சமூக சேவைகளைச் செய்து வருகிறோம். குறிப்பாக, குழந்தைகளுக்கான கல்வியில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறோம். பொதுவாக வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள்தாம் பெரும்பாலும் பள்ளிக்குச் செல்வதில்லை. அப்படியானவர்களைக் கண்டறிந்து அடிப்படைத் தேவைகளைச் செய்துகொடுக்கிறோம்.

அரசு உதவியுடன் உறைவிடப் பள்ளிகளில் அவர்களுக்குத் தேவையான கல்வி கிடைப்பதை உறுதி செய்து வருகிறோம். இந்தக் காலகட்டத்திலும் சிறார் உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு ஏராளமானோர் உதவிக்காக அழைக்கிறார்கள். எங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகிறோம். மேலும், பெரும்பாலான கிராமங்களில் இருக்கும் குழந்தைகள் நல அலுவலர்களை தொடர்பு கொண்டு எங்களது பணியைத் தீவிரப்படுத்தி வருகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT