கடந்த ஆண்டு ஆசிரியர் தினத்தை ஒட்டி அறிமுகப்படுத்தப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) அறிமுகப்படுத்திய சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே ஒற்றைப் பெண் குழந்தை ஆய்வு உதவித் தொகை (Fellowship) திட்டம் இப்போது ஸ்டெம் என்று அழைக்கப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முனைவர் ஆய்வுப் பட்டம் படிக்கும் பெண்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு இந்த ஆய்வு உதவித் தொகையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் 16 மடங்கு அதிகரித்துள்ளன.
சமூகவியல், கலைப் பாடங்களுக்கு மட்டுமானதாக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தபட்டபோது இந்த ஆய்வு உதவித் தொகைக்கு நாடு முழுவதிலிமிருந்து 67 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இப்போது 1,144 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1,129 விண்ணப்பங்களை தற்போதைக்கு தேர்வு செய்துள்ளது (இது இறுதித் தேர்வு அல்ல).
இந்தத் திட்டத்தின் கீழ் முதல் இரண்டாண்டுகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஆய்வு உதவித் தொகை ரூ.25,000த்திலிருந்து ரூ.31,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆண்டுகளுக்கு மாணவரின் ஆய்வில் திருப்திகரமான முன்னேற்றத்தின் அடிப்படையில் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.28,000த்திலிருந்து ரூ.35,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதோடு எதிர்பாரா நிகழ்வுகளுக்கான உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் வாசிப்பு உதவியாளரை நியமித்துக்கொள்வதற்கு மாதம் ரூ.3,000 ஆகியவையும் வழங்கப்படும்.\
பெற்றோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்து யூஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் முழுநேர மாணவராக முனைவர் ஆய்வுப் பட்டம் மேற்கொள்ளும் பெண்களுக்கு மட்டுமே இந்த ஆய்வு உதவித் தொகை வழங்கப்படும். இதைப் பெறுவதற்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45, பிறருக்கு 40 ஆக வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெம் துறைகளில் உலக அளவில் பெரும் பாலின இடைவெளி நிலவுவதாக ஐ.நா தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஸ்டெம் படிப்புகளில் சேர்பவர்களில் 43% பெண்கள் என்னும் தகவல் பெருமைக்குரியது. இது போன்ற திட்டங்கள் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று நம்பலாம்.
சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே ஒற்றைப் பெண் குழந்தை ஆய்வு உதவித் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முனைவர் ஆய்வுப் பட்டத்தில் பெண்களின் பங்கேற்கை அதிகரிப்பதற்காக மட்டுமல்ல. பெண் குழந்தையைப் பெற்றுக்கொள்வது குறித்த பொதுச் சமூகத்தின் பார்வையை மாற்றுவதற்கும்கூட என்று யூஜிசி தலைவர் எம்.ஜகதீஷ் குமார் கூறியிருக்கிறார்.
பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தினரும் உற்றார் உறவினரும் சற்று முகம் சுளிப்பது இன்றும் தொடரும் வேதனை. அதோடு ஆண் குழந்தை அவசியம் வேண்டும் என்பதற்காகவே அதிக எண்ணிக்கையில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் வழக்கமும் இந்தியர்களிடையே நிலவுகிறது. இது போன்ற மனப்போக்குகளை மாற்ற இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்த காலத்தில் பல ஆபத்துகளையும் இழிவுபடுத்தலையும் எதிர்கொண்டு பெண்களுக்கு கல்வி புகட்டியவருமான சாவித்ரிபாய் புலேவின் பெயரில் இந்தத் திட்டத்தைத் தொடங்கியிருப்பது யூஜிசியின் ஆகச் சிறந்த முன்னெடுப்பு. இதைப் பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்