திசைகாட்டி

மாணவர்களுக்கு வழிகாட்டும் அமேசான் ஃபியூச்சர் இன்ஜினியர் திட்டம்

நிஷா

இந்தியாவில் கணினி அறிவியல் கல்வியை பொது மயமாக்கும் நோக்கத்துடன் அமேசான் ஃபியூச்சர் இன்ஜினியர் (AFE) திட்டம் 2021இல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் ஓராண்டை நிறைவு செய்துள்ள இந்தத் திட்டத்தின் கீழ், 11 மாநிலங்களில் உள்ள 3000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்குக் கணினி அறிவியல் கல்வி வழங்கப்பட்டு இருக்கிறது.

3 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், முக்கியமாகக் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதனால் பயனடைந்துள்ளனர். முக்கியமாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 பெண் குழந்தைகளுக்குக் கணினி அறிவியல் கல்வியைத் தொடர உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இணைந்த கைகள்

AFE திட்டத்தை செயல்படுத்துவதற்காக லீடர்ஷிப் ஃபார் ஈக்விட்டி (LFE), லர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன் (LLF), பை ஜாம் ஃபவுண்டேஷன், அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் Code.org, எஜூகேஷன் இனிஷியேட்டிவிஸ் உள்ளிட்ட பல கல்வி சார்ந்த இலாப நோக்கற்ற நிறுவனங்கள் அமேசானுடன் இணைந்து பணியாற்றுகின்றன. பீபுல், தி இன்னோவேஷன் ஸ்டோரி, நவ்குருகுல், ஃபவுண்டேஷன் ஃபார் எக்ஸலன்ஸ் ஆகியவை மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன. அமேசான் தனது விரிவான கட்டமைப்பு மூலம் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, தமிழ்நாடு, தெலுங்கானா. ஆகிய மாநிலங்களில் AFE திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

கற்றல் வாய்ப்புகள்

கணினி அறிவியலின் அடிப்படைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, 'ஹவர் ஆஃப் கோடு', 'அமேசான் சைபர் ரோபாட்டிக்ஸ் சேலஞ்ச்' போன்ற கணினி அறிவியல் ஆய்வு நடவடிக்கைகளை AFE வழங்குகிறது. இத்துடன் மாணவர்களுக்கு ‘கோட்-ஏ-தோன்’, 'கோட்-மித்ரா', 'மெராக்கி' போன்ற ஆழமான கணினி அறிவியல் கற்றல் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

முக்கியமாக, இவை அனைத்தும் மாணவர்களின் தாய்மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. தொழில்நுட்ப துறையில் கிடைக்கும் பல்வேறு வகையான தொழில்களை அமேசான் ஊழியர்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றனர். இதன் மூலம் மாணவர்கள் தொழில்நுட்பத் துறையில் உள்ள பல்வேறு தொழில்களை அறிந்துகொள்வதுடன், அங்கு எப்படிச் செல்வது என்பதையும் தெரிந்துகொள்கின்றனர்.

சிறப்பு அம்சம்

உள்ளூர் மொழிகளில் கணினி அறிவியலின் (CS) நிஜ உலகப் பயன்பாடு, பள்ளிகளுக்கான பாடத்திட்டம், கணினி அறிவியலில் ஆசிரியர்களுக்கான பாடத்திட்டங்கள், கணினி அறிவியலைக் கற்பிக்கக் கூடுதல் உதவியாளர், சாத்தியமான இடங்களில் உள்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய கற்றல் வழிமுறைகளை இந்தத் திட்டம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்குகிறது.

அமேசானின் இந்த முன்முயற்சிகள், தரமான கணினி அறிவியல் கல்வியை மாணவர்களுக்குக் கிடைக்கச் செய்கிறது. அது அவர்களின் சிறந்த எதிர்காலத்துக்கான அடித்தளமாக இருக்கும். இதன் மூலம் மாணவர்கள் தொழில்நுட்பத்தின் நுகர்வோராக மட்டுமல்லாமல்; படைப்பாளிகளாகவும் மாற முடியும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

அமேசான் தற்போது 2023ஆம் ஆண்டின் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரவேற்கத் தொடங்கியுள்ளது. 2023இல் உதவித்தொகைகளின் எண்ணிக்கை 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கக் கடைசி தேதி 31 டிசம்பர் 2022 ஆகும். மத்திய அல்லது மாநில அளவிலான நுழைவுத் தேர்வின் மூலம் பொறியியல் கல்லூரியில் ஏற்கனவே சேர்க்கை பெற்ற, மொத்த குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 3 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக உள்ள பெண் மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

விண்ணப்பிக்க: https://ffe.org/amazon-future-engineer/
கூடுதல் தகவல்களுக்கு:

SCROLL FOR NEXT