ஜெர்மனியிலிருந்து கிறிஸ்தவ சமயப் பணியாளராக இந்தியாவுக்கு வந்தவர், சார்லஸ் தியாபிலஸ் எட்வர்ட் ரேனியஸ் என்ற இரேனியஸ் பாதிரியார். 1814-ஆம் ஆண்டு சென்னைக்கு வந்த இவர் ஆறு ஆண்டுகள் சென்னையிலும் பதினெட்டு ஆண்டுகள் திருநெல்வேலி மாவட்டத்திலும் சமயப்பணியோடு கல்விப் பணி உட்பட பல்வேறு சமுதாயப் பணிகளையும் செய்தவர்.
‘தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட்’ என அழைக்கப்படும் பாளையங்கோட்டையை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் இவர். அவற்றுள் அவருடைய கல்விப் பணி தற்கால நவீனக் கல்விக்கு அடித்தளமிட்டவை. பொதுக் கல்வியைத் தமிழகத்தில் தாராளமயமாகிட வழிவகுத்தவர்.
எண்ணும் எழுத்தும் கற்பிப்பதே கல்வி என்றிருந்த நிலையை மாற்றியமைத்து, இருநூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளைத் தொடங்கி அவற்றில் மொழிப் பாடங்களோடு அறிவியல், வரலாறு, புவியியல்,பொதுஅறிவு, வானவியல் என இன்றைய பாடமுறைகளுக்கு இணையான கல்விமுறையை தமிழகத்தில் அறிமுகம் செய்தார்( கிறிஸ்துதாஸ். டி. 'திருநெல்வேலி அப்போஸ்தலர் ரேனியஸ், திருநெல்வேலி டயோசிஸ் அச்சகம், 1959). பள்ளிகளில் தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களை நியமிக்க ‘செமினரி’ என்ற ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகளையும் ஏற்படுத்தினார். பள்ளிகளில் முதன்முறையாக ‘Inspecting school master’ ( I.S.M) பரிசோதிக்கும் ஆசிரியர்களை நியமித்து பள்ளியின் கல்வித்தரத்தை சோதித்தறிந்தார். இம்முறையே இன்றுவரையும் நமது பள்ளிகளில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிறுசிறு துண்டு அறிக்கைகளின் (Tract) மூலம் மக்களிடம் சமூக, சமயச் செய்திகளைக் கொண்டு செல்ல இயலும் என்ற உண்மையை அறிமுகப்படுத்தியவர் இரேனியஸ் பாதிரியார்தான். இதற்காக ‘Madras Tract Society’ என்ற அமைப்பை 1818-இல் அவர் நிறுவினார். தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு இவருடைய பணி முக்கியமானது. தமிழில் நிறுத்தற் குறியீடுகளைப் பயன்படுத்தவும் வாக்கியங்களில் சந்திப் பிரித்து எழுதும் முறையையும் உருவாக்கி வாசித்தலையும் புரிதலையும் எளிமையாக்கினார். பள்ளிகளில் தமிழ்வழி கற்பித்தலை முக்கியப்படுத்தி செயல்படுத்தினார்.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில்கூட பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்துப் பாடியும் எழுதியும் போராடிய நிலைமை நம் வரலாற்றில் மாறாத வடுக்களாக இருந்து கொண்டிருக்க, இரேனியஸ் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே பெண்களுக்கான பள்ளிகளை உருவாக்கி அவர்களுக்கான பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளையும் திறந்தார். 1822-ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சிப் பள்ளியை ஏற்படுத்தி அதை தன் மனைவி அனியின் தலைமையில் செயல்படுத்தினார் (மேலது) இப்பள்ளிதான் இந்தியாவிலேயே விடுதியோடு பெண்களுக்காக தொடங்கப்பட்ட இரண்டாவது பள்ளி என்ற சிறப்பிற்குரியது. இன்று அது ‘மேரிசார்சன்ட்’ என்ற மகளிர் மேல்நிலைப் பள்ளியாக சிறப்பாக இயங்கி வருகிறது்.
சாதிப் பாகுபாடுகள் தலைவிரித்தாடிய அக்காலகட்டத்தில், தான் ஏற்படுத்திய பள்ளிகளில் எந்தவகையிலும் சாதிப்பாகுபாட்டை அனுமதிக்காமல் அவற்றை எதிர்த்துப் போராடினார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்றில் முதல் முறையாக ஆசிரியர்களாகப் பயிற்சிப் பெற முன்வந்த வெவ்வேறு சாதியமைப்பின் மாணவர்களையும் சேர்த்துக் கொண்டு பயிற்சியளித்தார்.
இம்மாணவர்கள் தங்களுக்கு தனியாக உணவருந்தும் இடத்தை தர வேண்டும் என்று போராடிய உயர்சாதி மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களின் விவாதத்தையும் புறக்கணித்து, அந்தப் பயிற்சிப் பள்ளியையே மூடினார். மீண்டும் அடுத்த ஆண்டு (1822) சாதிபாகுபாட்டை விரும்பாத வேறுசில மாணவர்களைக் கொண்டு அதே செமினெரியைத் திறந்து சிறந்த ஆசிரியர்களை உருவாக்கினார். ஆசிரியர்களே சாதிப்பாகுபாட்டை கடைபிடித்தால் எதிர்வரும் காலத்தில் அவர்களிடம் கல்விப் பயிலும் மாணவர்களிடமும் இத்தகைய சாதிவெறி புகுத்தப்படும் என்று எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வு 1924 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி என்ற ஊரில் நடைபெற்ற குருகுலப் போராட்டத்தை (பழ.அதியமான் குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும். 2013) 100 ஆண்டுகளுக்கு முன்னரே இவர் தனியொரு ஆளாக நின்று எதிர்த்து வெற்றிகண்டார். அந்தவகையில் தமிழகத்தில் சாதபாகுபாட்டை வெளிப்படையாக எதிர்த்த முதல் நபர் இரேனியஸ் பாதிரியார்தான். அன்றைய காலகட்டத்தில் ஆதிக்கச் சாதியினரின் அடக்குமுறைகளிடமிருந்து பாமர மக்களை பாதுகாக்க அவர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலேயே தனி குடியிருப்புகளை விலைக்கு வாங்கி அதனை சாதி சமயப் பாகுபாடுகளற்ற சமத்துவக் குடியிருப்பாக உருவாக்கி சமத்துவத்தை நிலைநாட்டிக் காட்டினார். இவரால் ஏற்படுத்தப்பட்ட அத்தகைய முப்பது குடியிருப்புகள்( முனைவர் ஜான்சி எமீமா ,முனைவர்பட்ட ஆய்வேடு) இன்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வளர்ச்சிப் பெற்ற ஊர்களாக உள்ளன. அந்தக் கிராமங்களில் அவர்களுக்கென்று தனிப்பஞ்சாயத்து அமைப்பையும் ஏற்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காத்தவர்.
1834 ஆம் ஆண்டு கணவனை இழந்து வாழும் பெண்களுக்கான ‘சகாயநிதி’ (Friend in need sangam) என்ற ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்தார். இவர் எழுதிய 'பூமி சாஸ்திரம்' (1832) என்ற நூல் தமிழில் வெளிவந்த முதல் அறிவியல் நூல் என்ற பெருமைக்குரியது. இந்நூல் புவியைப்பற்றி அதுவரை இருந்துவந்த அறிவியலுக்கு மாறான கருத்துக்களைச் சுட்டிக் காட்டி அறிவியல் மனப்பான்மையை மக்களிடையே உருவாக்க வழிவகுத்தது (இரேனியசு, பூமி சாஸ்திரம், சர்ச்சிமிசியோன், சென்னை 1832). இந்நூலை பள்ளிகளில் பாடநூலாகவும் பயன்படுத்தினார்.
1790 நவம்பர் 5-ல் பிறந்த இவர், இந்தியாவிற்கு வந்த பிறகு ஒருமுறைகூட தனது தாய்நாட்டிற்கு செல்லவில்லை. 1838-ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் தனது 48 வது வயதில் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்தார். அவரது சமுதாயப் பணிகள் என்றும் இந்திய வரலாற்றில் மறுக்க இயலாதவை.
(05-11-1790 இரேனியஸ் பாதிரியார் பிறந்த நாள்)