திசைகாட்டி

ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

ராகா

ஆயுர்வேதம், இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஓமியோபதி ஆகிய படிப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கான நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம், தமிழ்நாடு சுகாதாரத் துறை இணையதளத்தில் இன்று முதல் (21.09.2022) தொடங்கியுள்ளது. இதில், பி.எஸ்.எம்.எஸ்., பி.ஏ.எம்.எஸ்., பி.யு.எம்.எஸ்., பி.எச்.எம்.எஸ்., ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின்கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவ முறை மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இவை தவிர்த்துத் தனியார் கல்லூரிகளும் இயங்கிவருகின்றன.

இதில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,164 இடங்களும் நிரப்பப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவ மாணவிகள், அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்புகளை https://tnhealth.tn.gov.in/ என்கிற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைச் சரியான ஆவணங்களுடன், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அலுவலக முகவரிக்கு அக்டோபர் 12ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநரகம், அரும்பாக்கம், சென்னை-600 106

மேலும் விவரங்க:ளுக்கு https://tnhealth.tn.gov.in/ என்கிற இணையதளத்தை பாருங்கள்.

SCROLL FOR NEXT