பர்மாவில் வேலை பார்த்துவந்த வை. கோவிந்தன், வட்டிக்கடைத் தொழில் பிடிக்காமல் நாடு திரும்பினார். அவருடைய 17, 18ஆவது வயதில் ஒரு லட்ச ரூபாயைக் கொண்டு சென்னையில் அச்சுத் தொழிலை ஆரம்பித்தார். அந்தத் துறையில் எந்த முன் அனுபவமும் பெற்றிராத அவர், அடுத்ததாக முன்னோடி இதழ் ஒன்றையும் தொடங்கினார். ‘சக்தி’ இதழ் 1939ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 16 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்துள்ளது. இடையில் சிறிது இடைவெளிக்குப் பிறகு 1954 வரை வெளியாகியுள்ளது. மொத்தம் 141 இதழ்கள் வெளியாகின. அதே காலத்தில் வெளியான மற்ற இதழ்களின் விலை அதிகமாக இருந்தபோதும், ‘சக்தி’ இதழின் விலை 4 அணாவாக மட்டுமே இருந்துள்ளது. காந்தியவாதியான வை. கோவிந்தன் நடத்திய இதழில், காந்தியச் சிந்தனையின் தாக்கம், விடுதலைப் போராட்ட குரல் ஆகியவற்றுடன் சமூகத்துக்குத் தேவையான புதிய பார்வையும் வெளிப்பட்டது. கவியோகி சுத்தானந்த பாரதியார், தி. ஜ. ரங்கநாதன் (தி.ஜ.ர.), கு. அழகிரிசாமி, ‘சரஸ்வதி’ விஜய பாஸ்கரன் உள்ளிட்டோர் ஆசிரியர்களாகச் செயல்பட்டுள்ளனர்.
வல்லிக்கண்ணனின் பாராட்டு
சக்தி இதழ் குறித்து ‘தமிழில் சிறு பத்திரிகைகள்’ என்கிற நூலில் மறைந்த மூத்த விமர்சகர் வல்லிக்கண்ணன் குறிப்பிட்டிருப்பது:
‘சக்தி காரியாலயம்' வை. கோவிந்தன் பிரசுரத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் பெரும் சாதனைகள் புரிந்துகொண்டிருந்தார். அறிவுக்கு விருந்தாகும் நல்ல நூல்களை அழகான முறையில் வெளியிடுவதில் அவர் ஆர்வம் காட்டினார். வை. கோவிந்தன் பல வருட காலம் நடத்திய 'சக்தி' என்ற மாசிகை தமிழில் ஒரு வித்தியாசமான பத்திரிகையாகத் திகழ்ந்தது. ஆரம்பத்தில், 'டைம்' பத்திரிகை அளவிலும் அமைப்பிலும் அது வந்துகொண்டிருந்தது. பிறகு புத்தக வடிவம் பெற்றது. கனத்த அட்டையுடன், அழகிய தோற்றப் பொலிவுடன், நல்ல வெள்ளைத் தாளில் அருமையான அச்சில் வந்த 'சக்தி' - ஒரு சில கதைகள், ஒன்றிரண்டு கவிதைகளோடு, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பாணியில் பல்சுவைக் கட்டுரைகளையும், அறிவுக்கு விருந்தாகும் விஷயங்களையும், சுவாரஸ்யமான துணுக்குகளையும் சேகரித்து வழங்கியது. வெகு காலம்வரை தி.ஜ.ர. (தி. ஜ. ரங்கநாதன்) அதன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். அவருக்குப் பிறகு சுப. நாராயணன் என்ற ஆற்றலும் சிந்தனைத் திறமும் மிகுதியாகப் பெற்றிருந்த எழுத்தாளர் அதன் ஆசிரியராகச் செயலாற்றினார். சில வருடங்களுக்குப் பின்னர் கு. அழகிரிசாமியும் தொ.மு.சி. ரகுநாதனும் பொறுப்பேற்று ‘சக்தி' பத்திரிகையை உருவாக்கி வந்தனர்.
காலப்போக்கில், 'சக்தி' என்ற நல்ல மாதப் பத்திரிகை நிறுத்தப்பட்டது. 'சக்தி மலர்’ என்ற பெயருடன், கதைகள்- கட்டுரைகள், கவிதைகள் நிறைந்த 'மாதம் ஒரு புத்தகம்' அழகிரிசாமி, ரகுநாதன் தயாரிப்பாக ஒரு வருடம் வெளியிடப் பெற்றது (இரண்டாம் உலகப் போர் காகிதப் பற்றாக்குறை காரணமாக). இறுதியில் 'சக்தி காரியாலயம்' என்ற நல்ல புத்தக வெளியிட்டு நிறுவனமே செயலற்றுப் போயிற்று”.
பல்துறை இதழ்கள்
இரண்டாம் உலகப் போரால் அச்சுக் காகிதப் பற்றாக்குறை, கொள்கைக்கு மாறான விளம்பரங்களை மறுத்தது, பொதுவாகவே விளம்பர ஆதரவு குறைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் சக்தி இதழ் நின்றுபோனது. அதே நேரம் தரமான இதழியல் சார்ந்து அது ஏற்படுத்திய முன்னுதாரணம் நிலைத்திருக்கிறது.
தமிழில் முதல்முதலாக குழந்தைகளுக்கு வாரப் பத்திரிகை நடத்தியதும் வை. கோவிந்தன்தான். ‘அணில்' என்கிற அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் தமிழ்வாணன். அதேபோல் ‘மங்கை’ (ஆசிரியர்: குகப்பிரியை), ‘பாப்பா’, ‘குழந்தைகள் செய்தி’, ‘கதைக்கடல்' எனப் பல இதழ்களை வை. கோவிந்தன் வெளியிட்டுள்ளார். ‘கதைக் கடல்’, சிறுகதைகளை மட்டுமே கொண்டு வெளியான ஒரு புதுமை இதழ். வை. கோவிந்தன் நடத்திய சினிமா இதழிலேயே கவியரசு கண்ணதாசன் தொடக்கத்தில் பணியில் சேர்ந்தார்.
நாட்டு விடுதலைக்கு முன்பும் பின்பும் பல்வேறு துறை சார்ந்த இதழ்களை நடத்திய முன்னோடி ஆளுமை வை. கோவிந்தன். அவருடைய பதிப்பு, இதழியல் பங்களிப்பு உரிய வகையில் நினைவுகூரப்பட வேண்டும்.