ரஷ்ய மண்ணின் எல்லையைக் கடந்து உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், உழைப்பாளிகளால் மதிக்கப்படுபவர் லெனின். ஏனென்றால், உலகின் முதல் மக்கள் புரட்சியால் ஓர் ஆட்சியை நிறுவியவர் அவர். அவருடைய 152ஆம் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றி அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களின் தொகுப்பு இங்கே கொடுக்கப்படுகிறது.
> 1870 ஏப்ரல் 22இல் கல்வி அதிகாரிக்கு மகனாகப் பிறந்த லெனினின் உண்மையான பெயர் விளாதிமீர் இலியீச் உல்யானவ். பிற்காலத்தில் தலைமறைவாக வாழ்ந்தபோது, அவர் வைத்துக்கொண்ட பெயர்தான் லெனின். லெனினுடைய அண்ணன் அலெக்சாண்டர்தான் லெனினுக்கு மார்க்சியத்தை அறிமுகப்படுத்தினார்.
> ரஷ்யாவை ஆண்டுகொண்டிருந்த ஜார் மன்னரின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்துப் பல்வேறு குழுக்கள் ரஷ்யாவில் போராடிக்கொண்டிருந்தன. அவற்றை ஒன்றுபடுத்தி ‘தொழிலாளி வர்க்க விடுதலைக்கான போராட்டக் கழகம்' என்ற அமைப்பை 1895ஆம் ஆண்டில் லெனின் தொடங்கினார். அந்த அமைப்பின் கொள்கைகளை வெளியே எடுத்துச் செல்ல ‘ரபோச்சீ தெலொ’ (தொழிலாளர்களின் இலக்கு) என்ற செய்தித்தாளையும் தொடங்கினார். முதல் இதழ் பறிமுதல் செய்யப்பட்டது. லெனின் கைது செய்யப்பட்டு 14 மாதச் சிறைத் தண்டனை அனுபவித்தார். பிறகு, கிழக்கு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர் நாடியா குரூப்ஸ்கயாவும் அதே பகுதிக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். பிறகு இருவரும் வாழ்க்கைத்துணை ஆனார்கள்.
> ‘ரஷ்ய சமூக ஜனநாயத் தொழிலாளர் கட்சி'யை (போல்ஷ்விக்) 1903இல் லெனின் உருவாக்கினார்.1905இல் ஜார் மன்னரை எதிர்த்துப் நடைபெற்ற புரட்சி ஒன்பது நாட்களில் முடிவுக்கு வந்து, தோற்றது. இதையடுத்து பல நாடுகளில் லெனின் தலைமறைவாக வாழ்ந்தார்.
> 1917இல் தொழிலாளிகள், உழவர்களை ஒன்றுதிரட்டிப் புரட்சி நடத்தினார். ஆயுதப் போராட்டத்தையும் அரசு நிறுவனங்களைக் கைப்பற்றுவதையும் இறுதிக் கட்டத்தில் கையில் எடுத்தார். 1917 மார்ச்சில் ஜார் மன்னரையும், 1917 நவம்பரில் ரஷ்ய முதலாளிகள் - நிலப்பிரபுக்களின் இடைக்கால அரசையும் மக்கள் புரட்சி வீழ்த்தியது.
> புரட்சி வென்ற பிறகு உலகின் முதல் சோஷலிச அரசின் தலைவரானார் லெனின். அடுத்த நாளே ‘போரை நிறுத்துவதற்கான சமாதானம்', ‘நிலங்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆகின்றன’ என்கிற இரண்டு பிரகடனங்களை அவர் வெளியிட்டார். மற்றொருபுறம் புரட்சி எதிர்ப்பாளர்கள் சேர்ந்து, புரட்சிக்கு எதிரான உள்நாட்டுப் போரைத் தொடங்கினார்கள். லெனின் தலைமையிலான அரசு அதிலும் வென்றது.
> புரட்சி தந்த வெற்றிக்குப் பிறகு ரஷ்யாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு லெனின் கடுமையாக உழைத்தார். கல்வி, சுகாதாரம், அறிவியல், வேளாண்மை, தொழில் என அனைத்துத் துறைகளிலும் ரஷ்யா மேம்பட புதிய திட்டங்களை உருவாக்கினார்.
> அந்த காலகட்டத்தில்் நெருக்கடியான பல்வேறு பணிகள் அவருடைய உடல்நிலையைக் கடுமையாகப் பாதித்திருந்தன. 1924 ஜனவரி 21 அன்று லெனின் காலமானார்.
> கம்யூனிஸத்தின் தந்தை கார்ல் மார்க்ஸின் கொள்கைகளை முதன்முதலில் ஒரு நாட்டில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்டியவர் லெனின்.