இந்தியாவின் கல்வி நிறுவனங்களில் பல, மாணவர்களுக்கு உதவித்தொகை, நிதிநல்கை போன்றவற்றை வழங்கிவருகின்றன. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் போன்றவை சார்ந்து ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதிநல்கைகளில் சில:
ஜவாஹர்லால் நேரு நிதி உதவித்தொகை
கல்வித் தகுதி: இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்குப் பதிவு செய்தவர்கள். பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு இரண்டிலும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
வயது: அதிகபட்சம் 35 வயது
பாடப் பிரிவுகள்: இந்திய வரலாறு மற்றும் நாகரிகம், சமூகவியல், மதம் மற்றும் கலாச்சாரம், பொருளாதாரம், புவியியல், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், தத்துவவியல்.
நிதிநல்கை: இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.18 ஆயிரம். ஆராய்ச்சி தொடர்பான போக்குவரத்து, புத்தகம் உள்ளிட்ட இதர செலவினங்களுக்கும் நிதி வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு நிதி உதவித்தொகை அலுவலகத்துக்கு மே இறுதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இணையம் மூலம் விண்ணப்பிக்க இயலாது. விவரங்களுக்கு: https://www.jnmf.in/sapply.html
ஆராய்ச்சிக்குப் பிந்தைய நிதிநல்கை (ஐ.ஐ.டி. ரோபர்)
கல்வித் தகுதி: பி.எச்டி. முடித்தவர்களுக்கான நிதிநல்கை இது. ஐ.ஐ.டி. ரோபர் அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்துடன் கூட்டாகச் சேர்ந்து மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இது. பி.எச்டி. முடித்து 5 ஆண்டுகளுக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். ஐஐடி. ரோபர் பேராசிரியர்களின் நேரடி அல்லது இணை மேற்பார்வையில் பி.எச்டி. முடித்திருந்தால் 3 ஆண்டுகள் கழித்தே இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நிதிநல்கை: ஒவ்வொரு ஆராய்ச்சிக்கும் ஏற்ற வகையில் மாறும். உத்தேசமாக ரூ. 45 ஆயிரத்திலிருந்து 55 ஆயிரம் வரை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?: தபால் மூலம் அனுப்பலாம் அல்லது சம்பந்தப்பட்ட துறையில் நேரடியாகச் சமர்ப்பிக்கலாம். மேற்கொள்ளப்படும் ஆய்வுகளைப் பொறுத்து நிதிநல்கையும் விண்ணப்பிப்பதற்கான தேதியும் மாறும். விவரங்களுக்கு: https://www.iitrpr.ac.in/post-doctoral-opportunities
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம்
மத்திய அரசின்கீழ் செயல்படும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம், ஆராய்ச்சித் துறையில் களம்காண விரும்பும் மாணவர்களுக்கு வழங்கும் நிதிநல்கை இது.
கல்வித் தகுதி: இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பி.எச்டி., எம்.டி., எம்.எஸ். ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும். இப்படிப்புகளை முழுநேரப் படிப்பாகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அறிவியல், பொறியியல் துறைகளில் ஆய்வு மேற்கொள்பவராக இருக்க வேண்டும்.
வயது: அதிகபட்சம் 35 வயது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் சலுகை உண்டு.
நிதிநல்கை: மாதம் ரூ. 55 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு நிதிநல்கை வழங்கப்படும். போக்குவரத்து, ஆராய்ச்சிக்கான பொருட்கள் போன்றவற்றுக்காக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலதிக செலவினங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?: அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் இணையதளத்தில் (https://serbonline.in/SERB/npdf) ஜூன் 1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பேராசிரியர்களுக்கான ஆராய்ச்சி நிதிநல்கை
அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தால் (SERB) வழங்கப்படும் மற்றுமொரு நிதிநல்கை இது. மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் போன்றவற்றில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட இந்தியாவின் மத்தியக் கல்வி நிறுவனங்கள், தேசிய நிறுவனங்கள், மத்தியப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் தங்களை இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு இது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அறிவியல் புலத்தில் பி.எச்டி, அறிவியல் மேற்படிப்பு, மருத்துவ மேற்படிப்பு, பொறியியல் மேற்படிப்பில் ஒன்றை முடித்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முழுநேர ஆசிரியர் அல்லது ஆய்வுப் பணியில் இருக்க வேண்டும்.
வயது: அதிகபட்சம் 45 வயது. இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் தளர்வு.
பாடப்பிரிவு: உயிரியல், விலங்கியல், உயிர்வேதியியலை உள்ளடக்கிய வாழ்க்கை அறிவியல், இயற்பியல், வேதியியல், பொறியியல், புவி மற்றும் வளிமண்டல அறிவியல், கணிதவியல்.
நிதிநல்கை: ஆண்டுக்கு ரூ. 60 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதிநல்கை வழங்கப்படும். மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?: http://serb.gov.in/tare.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நிதிநல்கை
ஆராய்ச்சித் துறையில் ஆர்வமுள்ளவர் களை ஊக்குவிக்கும் நோக்கில் வழங்கப்படும் நிதிநல்கை இது.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. மருத்துவ மேற்படிப்பு, அறிவியல் மேற்படிப்பில் ஒன்றை முடித்திருக்க வேண்டும். பி.எச்டி.யில் மேற்கொண்ட ஆய்வின் தொடர்ச்சியாகத்தான் இந்த நிதிநல்கைக்கான ஆராய்ச்சியும் இருக்க வேண்டும்.
வயது: அதிகபட்சம் 32. இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பில் ஐந்து ஆண்டுகள் தளர்வு. தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் ஆய்வு, விருதுகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து 3 ஆண்டுகள் தளர்வு.
பாடப் பிரிவு: அடிப்படை அறிவியல், தொற்றும் நோய்கள், தொற்றா நோய்கள், இனப்பெருக்க நலம் மற்றும் ஊட்டச்சத்து போன்றவற்றை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை.
நிதிநல்கை: மாதம் ரூ. 65 ஆயிரம் வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். ஆராய்ச்சியின் தன்மை, தேவையைப் பொறுத்து ஆராய்ச்சியின் காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?: ஜூன் 30, டிசம்பர் 31 ஆகிய இரு தேதிகளில் ஆண்டுக்கு இரு முறை மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். https://main.icmr.nic.in/content/post-doctoral-research என்ற இணையதளத்தைப் பார்த்து விண்ணப்பிக்கலாம்.