படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணியைத் தொடர்வது எந்த அளவுக்கு மகிழ்ச்சியைத் தருமோ அதற்குச் சிறிதும் குறைவில்லாத மகிழ்ச்சியைத் தருவது, தான் படித்து வளர்ந்த மாவட்டத்திலேயே கல்வி சார்ந்த பணியைச் செய்வது. அப்படி தான் படித்த காஞ்சிபுரம் களியம்பூண்டி கிராமத்திலேயே கடந்த 11 ஆண்டுகளாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பணி முன்பயிற்சி அளிப்பவர் என்னும் பெருமையைப் பெற்றிருப்பவர் ப.ரஜனி.
ஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் - கற்பித்தலில் உள்ள இடர்பாடுகளைக் களைவது, பயிற்சிக் கட்டகம் தயாரிப்பது என ஆசிரியர்களுக்கான வியூகங்களை வகுக்கும் இவர், தற்போது தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
ஒவ்வொரு பகுதி சார்ந்த தன்னார்வலருக்கும் அந்தப் பகுதிக்கே உரிய தனித்தன்மையோடுதான் குழந்தைகளுக்கான கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும். எனினும் எந்தப் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலரும் கடைப்பிடிக்க வேண்டிய சில விஷயங்களை இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கான தன்னார்வலர்களுக்கு இங்கே அறிவுறுத்துகிறார் ரஜனி:
“குழந்தைகளின் உலகம் கொண்டாட்டமானது. அவர்களின் திறமை எல்லையற்றது. அவர்களிடம் தன்னியல்பில் மறைந்திருக்கும் திறன்களைத் தட்டி எழுப்புங்கள், அவர்களின் குழந்தைமையைக் கொண்டாடுங்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித் திறன் உண்டு. அதனைக் கண்டுபிடிப்பதில்தான் உங்களின் திறமை இருக்கிறது.
குழந்தையின் மனத்துக்கேற்ற திறன்களை வளர்ப்பது குழந்தை மைய கல்வியின் நோக்கம் ஆகும். கற்றல் செயல்பாட்டில் அதிக பங்கு மாணவர்களைக் கொண்டதாக அமையும். கற்பித்தலைவிடக் கற்றலுக்கு அதிக முக்கியம் அளிக்கப்பட வேண்டும். இங்கே ஆசிரியர் வழிகாட்டியாகவும், வாய்ப்புகளை வழங்குபவராகவும், மேற்பார்வையாளராகவும் இருக்க வேண்டும்.
விளையாட்டின் வழியாகக் கல்வி கற்பிப்பது குழந்தைகளின் சுதந்திர உணர்வை வளர்க்கும். அது மட்டுமின்றி இடர்பாடுகளைக் களையும் முறைகளைத் தானாகவே அவர்கள் கற்றுக்கொள்ள உதவும். குழந்தைகளின் கவனத்தையும் ஆர்வத்தையும் விளையாட்டின்வழிக் கற்றல் முறை மூலம் எளிமையாக உங்களால் ஈர்க்க முடியும்.
குழந்தைகளின் குறும்புகளை ரசித்து, மனதாரப் பாராட்டுங்கள். அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். குறும்பான மாணவர்களே ஆசிரியரது சுய வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றனர்.
குரலில் ஏற்ற இறக்கம், அதற்கான உடல்மொழியைக் கொண்டு கதை சொல்ல குழந்தைகள் உங்கள் வசமாவார்கள். கதைகள் மூலமாகப் பல மாற்றங்களை நாம் வகுப்பில் கொண்டுவரலாம். கதை சொல்வதில் பல விதமுண்டு. மாணவர்களுக்கு அவர்களின் வயதுக்கும் சிந்தனைக்கும் ஏற்ற வகையில் கதைகளை வடிவமைக்கலாம். மாணவர்களின் கனவுகளை ஆசிரியர்களே உருவாக்குகிறார்கள் என்பதால் ஆசிரியர் எப்போதுமே தூண்டுகோலாக இருக்க வேண்டும்.
சோர்வான குழந்தைகளை மனமகிழ் செயல்பாடுகள் மூலமாக உற்சாகமாக மாற்றுங்கள். குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப இருக்கைகளை மாற்றுங்கள். வட்டமாக, எதிர் எதிராக, குழுவாக, செயல்பாட்டின் வசதிக்கேற்ப இருக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும். வகுப்பறையைக் கலகலப்பாக வைத்திருங்கள்.
குழந்தைகளைப் பேச விடுங்கள், அவர்கள் பேசுவதைக் கவனியுங்கள். அதில் உள்ள சிறப்புகளைப் பாராட்டுங்கள். கற்பனையான சூழலைக் கொண்டுவாருங்கள். அதில் அவர்களைப் பங்கேற்று நடிக்கச் செய்யுங்கள். இதன்மூலம் அவர்களின் மொழித்திறன் மேம்படும். எக்காரணம் கொண்டும் ஆலோசனை என்னும் பெயரில் தொடர் அறிவுரை தர வேண்டாம்.
தன்னார்வலர்களுக்கான கற்றல் - கற்பித்தல் உபகரணப் பொருட்களை அந்தக் கிராமப்புறப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாகப் பெற்றுக்கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம். செலவில்லாக் கற்றல் - கற்பித்தல் உபகரணப் பொருட்கள் தயாரிக்கும் நுட்பத்தை அறியுங்கள். மாணவர்களைக் குழுவாக, செயல்திட்டப் பணியாகவும் செய்யச் சொல்லலாம்.
மொழிப் பாடமாக இருப்பின் கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல், புரிதல் ஆகியவற்றை வலியுறுத்த வேண்டும். சுற்றுச்சூழல் அறிவியல், அன்றாட வாழ்க்கை போன்றவற்றிலும் உள்ளீடுகள் வழங்கப்பட வேண்டும். மாநிலக் கல்விவியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம் ‘இல்லம் தேடிக் கல்வி’ வகுப்புகளுக்குரிய பாடத்திட்டம் கட்டகமாகத் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்ட சமூகமாகத் தன்னார்வலர்களின் பணி சிறக்க வேண்டும். இதற்கு அடிப்படை, மாணவர்களின் உடல் நலம் மற்றும் மன நலனில் அக்கறை கொள்பவர்களாகத் தன்னார்வலர்கள் இருக்க வேண்டும். மாணவர்களிடம் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதும், நல்லொழுக்கச் சிந்தனைகளை விதைப்பதும் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் இடம்பெறும் தன்னார்வலர்களின் அவசர அவசியப் பணியாக இருக்க வேண்டும்.