திசைகாட்டி

தத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் இணையம்!

புரவி

படிப்பு எதுவாக இருந்தாலும் அதை எந்த அளவுக்கு ஊன்றிப் படிக்கிறோம், அந்தத் துறையில் எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு இருக்கிறோம் என்பதில்தான் நம் எதிர்கால வாழ்க்கையே அடங்கியிருக்கிறது. மருத்துவம், பொறியியல் படிப்புகள் படித்தால்தான் எதிர்காலம் என்னும் நிலை என்றைக்குமே கல்வித் துறையில் இருந்ததில்லை. மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு இணையாக கலை, அறிவியல் படிப்புகளைப் படித்தாலும் சாதிக்கலாம் என்னும் நிலைமை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், இலக்கியம், நிகழ்த்துக் கலை இப்படி எண்ணற்ற படிப்புகள் மாணவர்களுக்காக இருக்கின்றன. தற்போது மாணவர்களிடையே தத்துவம் சார்ந்த படிப்புகளைப் படிப்பதற்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்தப் பெருந்தொற்றுப் பேரிடர் காலத்தில் தத்துவம் படிக்கும் மாணவர்களும் புத்தகங்களில் தியரியாக தாங்கள் படிக்கும் விஷயங்கள் சமூகத்தில் நடைமுறை வாழ்க்கை முறையில் எப்படியெல்லாம் எதிரொலிக்கின்றன என்பதைக் கவனிப்பவர்களாக, செயல் படுத்துபவர்களாக மாறியிருக்கின்றனர். தத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்களும் புதிய வாசல்களைத் திறக்கும் வகையில் தத்துவம் சார்ந்த மின்னிதழ்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்று தன்னுடைய கட்டுரையில் வலியுறுத்துகிறார் பேராசிரியர் ஜோஜன் ஜாப்.

இன்டர்நெட் என்சைக்ளோபீடியா ஆஃப் பிலாசபி, தி ஸ்டான்ஃபோர்ட் என்சைக்ளோபீடியா ஆஃப் பிலாசபி, அகாடமியா டாட் இடியு டாட் காம் (Academia.edu.com), ரிசர்ச் கேட், ஸ்டாய்ஸிசம் டுடே போன்றவையும் பிலாசபி நௌ (Philosophy Now), தி பிலாசபி மேகஸின் அண்ட் பிலாசபர்ஸ், இம்பிரிண்ட் போன்ற மின்னிதழ்களும் உள்ளன. இதில் இருக்கும் விஷயங்கள் தத்துவம் சார்ந்த புதிய வெளிச்சத்தை மாணவர்களுக்கு அளிக்கின்றன. மாணவர்கள் இவற்றைப் படிப்பதற்கு ஆசிரியர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். மரபார்ந்த புரிதல்களோடு புதிய தத்துவ சிந்தனைகளையும் மாணவர்களுக்கு அளிக்கும் தகவல் சுரங்கமாக இந்த இணைய பக்கங்கள் இருக்கின்றன.

SCROLL FOR NEXT