சமூகத்தின் மேன்மைக்கு அடித்தளமாக விளங்கும் படிப்புகளின் பட்டியலில் நர்ஸிங் படிப்புக்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. அதனால்தான், கல்விச் சந்தையில் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு நிகராக நர்ஸிங் படிப்புகளும் மாணவர்களின் விருப்பத்துக்குரிய படிப்பு களாகத் திகழ்கின்றன. இந்தப் படிப்பு, அதை வெற்றிகரமாகப் படித்து முடித்த மாணவர் களுக்கு வேலையை மட்டும் அளிக்கவில்லை; கைநிறைய சம்பளத்தையும் மனநிறைவையும் சேர்த்தே அளிக்கிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு 22 ஆயிரம் செவிலியர்கள் அரசு மற்றும் அதைச் சார்ந்த மருத்துவமனைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். கார்ப்பரேட் மருத்துவமனைகளின் அசுர வளர்ச்சியால் செவிலியர்களுக்கு இன்னும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இது தவிர மருத்துவச் சுற்றுலா மேற்கொள்ளும் நிறுவனங்கள், ஹோம் நர்சிங், இண்டஸ்ட்ரியல் நர்சிங் எனச் செவிலியர்களுக்கான வேலை எல்லைகளும் விரிவடைந்திருக்கின்றன.
யார் நர்ஸிங் படிக்கலாம்?
பன்னிரண்டாம் வகுப்பு உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளைப் படித்தவர்கள், நர்ஸிங் படிப்பில் சேரலாம் என்றாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களிடையே கலந்தாய்வு நடத்தியே நர்ஸிங் படிப்பில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
B.Sc., (Nursing) படிக்க, 17 வயது நிறைவடைந்தவர்களும் 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர் வயது 35 வரை இருக்கலாம். மற்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
மாணவிகளுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள நர்ஸிங் படிப்பில் தற்போது மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். நோயாளிகளுடனும் மருத்துவர்களுடனும் எந்தவிதமான சுணக்கமும் இல்லாமல் பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பு, இரக்கம், சிறந்த தகவல் தொடர்புத்திறன் உள்ளிட்ட பண்புகளைக் கொண்டிருப்பது இந்தப் படிப்புக்கு மிகவும் அவசியம்.
என்ன படிக்கலாம்?
ஆரம்பத்தில் நர்ஸ் என்றழைக்கப்பட்டவர்கள் பொதுவான ஒரு பிரிவின்கீழ் மட்டுமே பயின்றுவந்தனர். தற்போது, நர்ஸிங் துறையிலும் பல சிறப்புப் பிரிவுகள் வர ஆரம்பித்துவிட்டன. நான்காண்டு நர்ஸிங் படித்து முடித்தவர்கள், ஒரு வருடப் பயிற்சி முடித்து, தங்களுடைய பெயரை நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பி.எஸ்சி., நர்ஸிங் முடிப்பவர்கள், எம்.எஸ்சி., நர்ஸிங் படிக்கவும் வாய்ப்புள்ளது. இளநிலை நர்ஸிங் முடித்தவர்கள் மேற்கொண்டு படிக்க, குழந்தை மருத்துவ நர்ஸிங், அவசர கால பிரிவு நர்ஸிங், கார்டியோ - தெரபிக் நர்ஸிங், நியூரோ சயின்ஸ் நர்ஸிங், நெஃப்ரோ-யூராலஜி நர்ஸிங், மகளிர் மருத்துவ நர்ஸிங் என ஏராளமான சிறப்புப் பயிற்சிகளும் படிப்புகளும் உள்ளன.
எத்தனை இடங்கள் உள்ளன?
தமிழகத்தில் ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் நர்ஸிங் படிப்புகள் உள்ளன. இங்கே, 250 பி.எஸ்சி., நர்ஸிங் இடங்களும், 2000 நர்ஸிங் சான்றிதழ் படிப்புக்கான இடங்களும் உள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் 5,134 பி.எஸ்சி., நர்ஸிங் இடங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரியில் நர்ஸிங் பட்டப்படிப்புக்கான ஆண்டுக் கட்டணம் 3000 ரூபாய் மட்டுமே. இதுவே தனியார் கல்லூரியில் 45,000 ரூபாய்.
வேலை வாய்ப்பு
தற்போது, இந்தியா முழுவதும் 6 லட்சம் நர்ஸிங் படித்தவர்களுக்கான தேவை உள்ளது என்கிறது சுகாதாரத் துறை. மத்திய அரசு, சுகாதாரத் துறையில் அதிக கவனம் செலுத்தி வருவதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நர்ஸிங் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பும் அதிகமாக உள்ளது.
நர்ஸிங் படித்தவர்களுக்கு வெளிநாட்டிலும் வேலைவாய்ப்பு மிகுந்துள்ளது. தமிழக அரசு நிறுவனமான ஒவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனம், நர்ஸிங் படித்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பை அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து அனுப்பும் பணியைச் செய்துவருகிறது. குறிப்பாக, இங்கிலாந்து, அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் நர்சிங் படித்தவர்களுக்குத் தேவை அதிகமாக உள்ளது.
நன்றி: இன்னர் வீல் கிளப் ஆஃப் மெட்ராஸ்