தற்போது நாங்கள் வசித்துவரும் இஸ்ரேலில் நாளுக்கு ஒரு தட்பவெப்பநிலை நிலவும். ஒருநாள் வெயில் கொளுத்தியெடுக்கும், மறுநாள் ஆலங்கட்டி மழை பெய்யும்! ஒரே நல்ல விஷயம், தட்பவெப்பம் எப்படியிருக்கும் என்பது குறித்துக் கைபேசி செயலியில் முன்கூட்டியே தெரிந்துகொண்டுவிடலாம்.
மதியம் மூன்று மணி முதல் நான்கு மணி வரை மழை பெய்யும் என்று அதில் கூறப்பட்டிருந்தால், சரியாகத்தான் இருக்கும். ஆனால், கைபேசியில் வாட்ஸ்அப் பார்ப்பதில் உள்ள ஆர்வம், தட்பவெப்ப நிலையைப் பார்ப்பதில் இருப்பதில்லை. இப்படியாக ஒருநாள் மழையில் மாட்டிக்கொண்டேன், உடை நனைந்துவிட்டது.
மறுநாள் ஆய்வகத்துக்குப் போக வேண்டியிருந்தது. வியர்வை நாற்றம் சிறிது இருந்தால், வாசனை திரவியம் அடித்துக் கொண்டு முந்தைய நாள் உடையை அணிந்து கொண்டு தப்பித்துவிடலாம். ஆனால், ஈரமாகிவிட்ட துணியை என்ன செய்வது? வீட்டில் காற்றாடிக்குப் பக்கத்தில் விரித்துக் காயவைத்தேன். சரி, துணி எப்படிக் காய்கிறது? சொல்லப்போனால், காற்றில் இருக்கும் ஈரப்பதத்துக்கும் துணி காய்வதற்கும் முக்கியத் தொடர்பிருக்கிறது.
இரண்டு நண்பர்கள்
நனைந்த துணியில் ஈரப்பதம் இருக்கும். அதேபோல் காற்றிலும் ஈரப்பதம் இருக்கும். இந்த இரண்டிலும் இருக்கும் ஈரப்பத அளவுகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில்தான், துணி விரைவாகவோ தாமதமாகவோ காய்கிறது.
அது ஒரு மெல்லிய கோடு: இந்தப் பக்கம் துணி, அந்தப் பக்கம் காற்று. இதில் காற்றில் இருக்கும் ஈரப்பதம் குறைந்தால், தன்னிடம் இருக்கும் ஈரப்பதத்தைக் காற்றுக்குத் துணி வழங்கும். காற்றாடி சுழலும்போது காற்று ஓரிடத்தில் நிற்காதில்லையா, காற்று நகரும். அந்த இடத்தை நிரப்புவதற்கு வரும் புதிய காற்று துணியிடம் இருக்கும் ஈரத்தை வாங்கிக்கொள்ளும். இப்படியே காற்றாடி சுழலச் சுழல துணியும், தன் நண்பனுக்கு உதவுவதுபோல் நீரைத் தந்துவிடும். துணி காய்ந்துவிடும்.
அதேநேரம், காற்றாடியின் அடியில் காயும் துணி நமநமவென்று லேசான ஈரப்பதத்துடன் இருக்கும். இதற்குக் காரணம், ஓரளவுக்கு மேல் அந்த அறையில் புதிய காற்றில்லாமல் போவதுதான். அங்கே ஏற்கெனவே இருந்த காற்றுதான், மீண்டும் மீண்டும் சுழல்கிறது என்று அர்த்தம். ஆக, கோட்டுக்கு இந்தப் பக்கம் இருந்த துணியும் அந்தப் பக்கம் இருந்த காற்றும் சமநிலைக்கு வந்துவிட்டன. துணி காய்ந்துவிட்டது - இப்போது இரண்டுமே ஈரப்பதத்தை அடுத்தவருக்குத் தரும் வேலையை நிறுத்திவிட்டன.
காலநிலைக்கு ஏற்றாற் போல காற்றின் ஈரப்பதம் மாறுபடும். வெயிலடிப்பதால் சூடாகும் ஓரிடத்தில், காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும். அதனால் துணியானது தன் நண்பனான காற்றுக்கு விரைவாக நீரைக் கொடுத்து, சீக்கிரம் காய்ந்துவிடும். அள்ளி அள்ளிக் கொடுப்பவனை இதனால்தான் ஈரமனசுக்காரன் என்று சொல்கிறார்கள்போல.
பேட்டிங்கா, பந்துவீச்சா?
அன்றைக்குத் துணியைக் காற்றாடி உதவியுடன் காயவைத்துக் கொண்டிருந்த போது, நேரலையில் கிரிக்கெட் போட்டி ஓடிக்கொண்டிருந்தது. பேட்டிங், பவுலிங்கில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று விராட் கோலி முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தார். துணி காய்வதற்கும் அவர் எடுக்கப்போகும் முடிவையும் ஒரே அறிவியல்தான் தீர்மானிக்கிறது.
கிரிக்கெட் போட்டிகளில் யார் முதலில் ஆடுவது என்பதையும் காற்றின் ஈரப்பதம் ஓரளவு முடிவு செய்கிறது. காற்றில் ஈரப்பதம் அதிகமிருந்தால் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெரும் பிரச்சினை. புற்களின் மீது பனித்துளி அதிகரித்து, மண் ஈரமாகும் – அதனால் பந்து பவுன்ஸ் ஆவது குறையும். மேலும், ஈரப்புற்களின்மீது பட்டு ஓடும் பந்தின் வெளிப்புறம் ஈரமாகிக்கொண்டே இருக்கும்.
அதனால், பந்துவீசும்போது கையிலிருந்து பந்து நழுவிச்செல்லும், சுழன்று வேகமாகப் போகாது. அதனால், பந்து எந்தத் திசையில் வருகிறது என்பதை பேட்டிங் செய்பவர் எளிதில் கணித்து, அடித்து விளாசிவிடுவார். எனவே, போட்டி நாளில் எந்த வேளையில் ஈரப்பதம் குறைவாக இருக்கும் என்பதை தெரிந்துவைத்துக்கொண்டு, சாதகமான முடிவை எடுப்பார் 'டாஸ்' வென்ற அணியின் கேப்டன். ஆக, ஈரப்பதம் ஒரு கிரிக்கெட் போட்டியின் முடிவை மாற்றவும் கூடும்.
கட்டுரையாளர், இஸ்ரேல் டெக்னியன் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: hemazephyrs@gmail.com