திசைகாட்டி

கரோனா இரண்டாம் அலையில் பொதுத் தேர்வு தேவையா?

ச.கோபாலகிருஷ்ணன்

கரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாகப் பரவிவருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காகப் புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால், இரவு நேர ஊரடங்கு உள்பட மேலும் தீவிரமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. ஆனால், மற்ற கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தச் சூழலில் 12ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு மட்டும் வழக்கம்போல் நடத்தப்படவுள்ளது.

திறந்து மூடப்பட்ட பள்ளிகள்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. தனியார் பள்ளிகள் இணையம் வழியாகவும் அரசுப் பள்ளிகள் பதிவுசெய்யப்பட்ட காணொலிகள் வழியாகவும் வகுப்புகளை நடத்தின. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்த பிறகு 2021 ஜனவரி மாதம் 10, 12ஆம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி மாதம் 9,11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பிறகு 9, 10, 11ஆம் வகுப்புகளுக்குக் கடந்த கல்வி ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இறுதித் தேர்வு இல்லை. இப்போது 9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் புதிதாகக் கண்டறியப்படும் கரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரங்களைக் கடக்கத் தொடங்கியபோது, இந்த வகுப்பு மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.

அதேநேரம் 12ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை. இப்போது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 5,000-த்தைக் கடந்திருக்கிறது. இதனால் மத நிகழ்வுகள், திருவிழாக்களுக்குத் தடை, வணிக வளாகங்கள், உணவகங்கள், திரையரங்குகளில் 50 சதவீத மக்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட புதிய ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், மே 3 முதல் 21வரை திட்டமிட்டபடி தமிழக அரசுப் பாடத்திட்டத்தில் பயிலும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் (பிராக்டிகல்) ஏப்ரல் 16 அன்று தொடங்கவுள்ளன.

சி.பி.எஸ்.இ.யின் பிடிவாதம்

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மே-ஜூன் மாதங்களில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது. தேசிய அளவில் புதிதாகக் கண்டறியப்படும் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் 1.4 லட்சத்தைக் கடந்து செல்கிறது. மகாராஷ்டிரத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 60,000-த்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. பஞ்சாப், கர்நாடகம், கேரளம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில்தாம் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது. ஆனால், இந்த மாநிலங்களில் மட்டுமாவது தேர்வைத் தள்ளிவைப்பது குறித்தோ கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளையோ சி.பி.எஸ்.இ. அறிவிக்க வில்லை.

இந்தச் சூழலில் மாணவர்கள் பலர் பொதுத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று 'சேஞ்ச்.ஆர்க்' உள்ளிட்ட இணையதளங்களில் கோரிக்கை மனு உருவாக்குவது உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம் சி.பி.எஸ்.இ.க்குக் கோரிக்கை விடுத்துவருகின்றனர். ஆனால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மட்டும் சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. தனிநபர் இடைவெளியை உறுதிசெய்யும் பொருட்டுத் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

தமிழக மாணவர்களுக்குத் தொற்று

ஏற்கெனவே, தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது மாநிலத்தின் பல பகுதிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். 9 முதல் 11ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கும் அதன் பிறகு அவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டதற்கும் தஞ்சாவூர் திரள்தொற்று முக்கியக் காரணமாக அமைந்தது.

ஆனால், அனைத்துப் பள்ளிகளிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் தொடர்ந்து பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். அவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பது ஒருபுறம். இப்படி ஓர் இக்கட்டான சூழலில் தேர்வை எதிர்கொள்வதால் ஏற்படும் மன அழுத்தம், அவர்களின் மதிப்பெண்களைப் பாதிக்கக்கூடும் என்பது குறித்து யாருக்கும் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.

இணையவழி வகுப்புகளின் ஏற்றத்தாழ்வுகள்

பொதுவாகப் பள்ளி வகுப்புகளில் கற்கும் விஷயங்களை மாணவர்கள் மறப்பது இயல்பானது. மெதுவாகக் கற்பவர்கள், தகவல் களை நினைவில் வைத்துக்கொள்ளச் சிரமப்படுகிற மாணவர்கள், மற்ற மாணவர்களைக் காட்டிலும் அதிக சிரத்தை எடுத்துப் படிக்க வேண்டியிருக்கும். இணைய வழி வகுப்புகளால் இவர்கள் இன்னும் அதிக சிரமப்படுவார்கள்.

குடும்பச் சூழ்நிலை காரணமாக இணையவழி வகுப்புகளில் இடைவிடாமல் பங்கேற்க முடியாத, காணொலி வகுப்புகளைத் தொடர்ந்து பின்தொடர முடியாத மாணவர்களின் கற்றல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த ஆண்டு பள்ளிக்கு வந்து தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் வெவ்வேறு அளவுகளில் கற்றல் இலக்குகளை அடைந்திருப்பார்கள்.

இணையவழி வகுப்புகளால் நிகழ்ந்துவிட்ட இந்த ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்காமல் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. அதோடு தேர்வு நெருங்கும் காலத்தில் ஏற்கெனவே நடத்திய பாடங்களைத் திருப்புதல் செய்யும் நடைமுறைக்கும் (revision) போதிய அவகாசம் இல்லை என்று ஆசிரியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

12ஆம் வகுப்புக்குத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்பதில் கடைப்பிடிக்கப்படும் உறுதியைப் போல், மேற்கண்டது போன்ற பிரச்சினைகளைச் சீரமைப்பதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். அது நிகழ்ந்தால் மட்டுமே அனைத்து மாணவர்களுக்கும் சமமான பரிசோதனை களமாகத் தேர்வுகளைக் கருத முடியும். அதற்கு இன்னும் அவகாசம் தேவைப் படும். 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய முடியவில்லை என்றாலும், சில மாதங்களுக்கேனும் தள்ளி வைக்கவாவது வேண்டும்.

SCROLL FOR NEXT