திசைகாட்டி

தேர்தல் அலசல் - கல்வித் துறை: வெளிச்சப் புள்ளிகளும் சிக்கல்களும்

செய்திப்பிரிவு

கல்வியில் சிறந்து விளங்கும் இந்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்துக்குத் தவிர்க்க முடியாத இடம் உண்டு. நாடு விடுதலை பெற்ற பிறகு கல்வித் துறை சார்ந்து மாநில ஆட்சிகள் தொடர்ந்து கவனம் செலுத்தியதன் விளைவு இது. இந்தப் பின்னணியில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் கல்வித் துறை கண்ட ஏற்றங்களும் இறக்கங்களும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆழ்ந்த பரிசீலனைக்குரியவை.

காலை உணவு

அதிமுகவின் 2016ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அனைத்து அரசு, உள்ளாட்சித் தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி அளிக்கப்படும் என்னும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் மட்டும் தனியார் நிறுவனம் ஒன்றின் துணையுடன் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விரிவுபடுத்த முடியாததற்கு நிதிப் பற்றாக்குறையே காரணமாகச் சொல்லப்படுகிறது. 2021 சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையிலும் இது வாக்குறுதியாகவே நீடிக்கிறது.

பொதுத் தேர்வு மாற்றங்கள்

தமிழகத்தில் பத்து, 12ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வுகளில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் நடைமுறை நிறுத்தப்பட்டது. மதிப்பெண்களுக்குக் கொடுக்கப்படும் அளவு கடந்த முக்கியத்துவத்தைக் குறைப்பதோடு, பல்வேறு காரணங்களால் தேர்வுகளில் உயர் மதிப்பெண் பெற முடியாத மாணவர்கள் எதிர்கொள்ளக்கூடிய மன அழுத்தத்தையும் குறைக்கும் இந்த முடிவு கல்வியாளர்கள், கல்வித் துறை செயற்பாட்டாளர்களின் வரவேற்பைப் பெற்றது.

அதேபோல் 10ஆம், 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படுவதால், தமிழக அரசின் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பல தனியார் பள்ளிகள் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்த வகுப்புக்கான பாடங்களை நடத்தாமல், 12ஆம் வகுப்பு பாடங்களையே நடத்திவந்தன.

இதைத் தடுக்கும் விதமாக 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்னும் நடைமுறை தொடங்கப்பட்டது. பின்னர் அது முக்கியத்துவம் இழக்கச் செய்யப்பட்டது.

பின்வாங்கப்பட்ட முடிவுகள்

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கையை ஒட்டி 5, 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்னும் அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்குப் பிறகு அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது. இதேபோல் கரோனா ஊரடங்கு காலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல், 11, 12ஆம் வகுப்புகளில் துறை சார்ந்த பாடங்களை நான்கிலிருந்து மூன்றாகக் குறைப்பது என பள்ளிக் கல்வித் துறை சார்ந்து வெளியான பல அறிவிப்புகள் கடும் எதிர்ப்புக்குப் பிறகு பின்வாங்கப்பட்டன.

இணையம் இல்லாதோருக்கும் கல்வி

கரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் காரணமாக 2020-21 கல்வியாண்டில் பெரும்பகுதி வீட்டில் அடைபட்டிருந்த மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவது பெரும் சவாலாக உருவெடுத்தது. தனியார் பள்ளிகள் இணையவழி வகுப்புகளை வழங்கின. இதனால் ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் போனது. தமிழக அரசுப் பள்ளிகளுக்கான வகுப்புகள் இணையத்தை நாடாமல். அரசுத் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டன. இந்த நடவடிக்கை பாராட்டைப் பெற்றது.

பின்னர் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி நடத்தப் பட்டிருந்தாலும், நடப்புக் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தவிர மற்ற மூன்று வகுப்புகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற்றுவிட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் கல்லூரி மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதற்கு உதவும் வகையில் தினமும் 2ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

மொழிக் கொள்கை

புதிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்தமாக எதிர்க்கா விட்டாலும் அதில் கூறப்பட்டுள்ளபடி பள்ளிகளில் தாய்மொழி, ஆங்கிலம் தவிர மூன்றாவது மொழி ஒன்றைக் கற்பிப்பதைக் கட்டாயமாக்கும் முயற்சிக்குஎதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, பள்ளிக் கல்வியில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுவதில் உறுதியாக இருந்தது.

நீளும் ‘நீட்’ பிரச்சினை

மருத்துவக் கல்வியில் நுழைவதற்கான அகில இந்திய அளவிலான நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு கலவையான உணர்வுகளை ஏற்படுத்தின. 2016ஆம் ஆண்டு தமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்படுவதை அன்றைய முதல்வர் ஜெயலலிதா உறுதிப்படுத்தினார். பிறகு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 2017இலும் நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என்றது. ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அந்த ஆண்டிலிருந்து தமிழகத்துக்கும் நீட் தேர்வு கட்டாயமானது. அரசின் வாக்குறுதியை நம்பியிருந்த மாணவர்கள் மனமுடைந்தனர். 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண்கள் எடுத்த அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வுத் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டார். அப்போதிலிருந்தே தமிழகத்தின் எரியும் பிரச்சினையாக நீட் நீடித்துவருகிறது. கடந்த ஆண்டு நீட் தேர்வின்போதும் தமிழகத்தில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நடத்தப்படும் நீட் தேர்வுகளால் மருத்துவக் கல்வி வாய்ப்பைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பெரிதும் குறைந்தது. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி மையங்கள், ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டது.

குற்றச்சாட்டுகளும் களங்கமும்.

பல்கலைக்கழக உயர்பதவி நியமனங்களில் ஊழல், தமிழகப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் ஆளுநரின் தலையீடு, பறிபோகும் இடஒதுக்கீடு உரிமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைச் சார்ந்த சர்ச்சைகள் தமிழக உயர்கல்வித் துறையை ஆட்கொண்டன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியை ஒருவர், அதிக மதிப்பெண் பெறுவதற்காகப் பாலியல்ரீதியான சமரசங்களைச் செய்துகொள்ள மாணவிகளைத் தூண்டிய விவகாரம் கல்வித் துறை மீதான மிகப் பெரிய களங்கமானது. மூன்று ஆண்டுகளைக் கடந்துவிட்ட இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பேராசிரியையைத் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் உயர்கல்வி, ஆட்சிப்பணித் தேர்வுகள் தொடங்கி உயர்கல்வித் துறையில் முன்னுதாரண சாதனைகளை நிகழ்த்திவந்த தமிழகம், அந்த அடிப்படையிலேயே தேசிய அளவில் குறிப்பிடத்தகுந்த மாநிலமாகத்தற்போதுவரை திகழ்ந்துவருகிறது. அந்த அடிப்படைகள் மேம்பட்ட வகையில் பேணப்பட்டால் மட்டுமே, தமிழகத்துக்குப் பிரகாசமான எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்த முடியும்.

SCROLL FOR NEXT