பொது அறிவுத் தகவல்கள் முதல் துறை சார்ந்த தரவுகள்வரை பல்வேறு விஷயங்களை இணையத்தில் தேடுபவர்களுக்குப் பரிச்சயமான பெயர் கோரா (Quora). 2010-ல் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்தக் கேள்வி - பதில் தளத்தின் தமிழ்ப் பிரிவின் சமூக மேலாளர் செல்வகணபதி. தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் இந்நிறுவனத்தில் சேர்ந்திருப்பவர். இணையத்தில் தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளில் தீவிரம் காட்டும் அவருடன் ஒரு நேர்காணல்:
உங்களைப் பற்றியும், கோராவில் உங்கள் பணி அனுபவம் பற்றியும் சொல்லுங்கள்.
எனக்குச் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம். சென்னையில் வேதியியல் பொறியலில் டிப்ளோமா பயின்றேன். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒரு வருடம் பயிற்சியெடுத்தேன். அதன் பின்னர் டெல்லி ஐ.ஐ.டி.-யிலும், சென்னை ஐ.ஐ.டி.யிலும் ஆய்வகத் தொழில்நுட்ப மேற்பார்வையாளராகத் தலா ஏழு வருடங்கள் பணிபுரிந்தேன். பின்னர் எம்.பி.ஏ. முடித்துவிட்டு நியூசிலாந்து வந்து வேலை தேடிக்கொண்டிருந்தேன். அந்த வேளையில் கோரா நிறுவனத்தில் தமிழ்ப் பிரிவில் பணிபுரிய வாய்ப்பிருப்பது தெரியவந்தது. விண்ணப்பித்தேன். வாய்ப்பு கிடைத்தது. 2019 ஜனவரி முதல் தமிழ் கோரா இயங்கிவருகிறது. அதில் தமிழ்ச் சமூகத்துக்குப் பயனளிக்கும் விஷயங்களைச் செய்யக் கிடைத்திருக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த பேறு!
தேடுபொறி, சமூகவலைதளம், தகவல் களஞ்சியம் ஆகியவற்றின் கலவை என கோராவைச் சொல்லலாமா?
யார் வேண்டுமானாலும் தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு தளம்தான் கோரா. கோரா ஒரு அறிவுப் பெட்டகம், தகவல் பரிமாற்றத்துக்கான களம் எனும் வகையில் ஒரு சமூக ஊடகம், தகவல்களைத் தேடுபவர்களுக்கு தேடுபொறி, மொத்தத்தில் அறிவை வளர்ப்பதும் பகிர்வதும்தான் கோராவின் அடிப்படை.
தற்போது 24 மொழிகளில் கோரா இயங்கிவருகிறது. 2019 ஜனவரி முதல் தமிழுடன் சேர்ந்து வங்காளம், மராத்தி ஆகிய மொழிகள் இதில் சேர்க்கப்பட்டன. மற்ற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டால் தமிழ் சார்ந்த பணிகள் கோராவில் மிகச் சிறப்பாகவே நடைபெறுகின்றன. மராத்தி, தெலுங்கு போன்ற மொழிகளை அடுத்த இடத்தில் வைக்கலாம்.
கோராவில் கேள்விகளைக் கேட்பதன் மூலம்கூட கணிசமாகச் சம்பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது. அது எப்படிச் சாத்தியமாகிறது?
நல்ல விடைகளைப் பெறுவதற்கு நல்ல வினாக்கள் அவசியம் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். எனவே, கோராவுக்குக் கிடைக்கும் வருவாயில் ஒரு சிறிய தொகையைக் கேள்வி எழுப்புகிறவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். வினாக்களின் தரத்தைப் பொறுத்து, அவற்றுக்கு வரும் விடையைப் பொறுத்து, வரவேற்பைப் பொறுத்து ஒரு சிறிய தொகையை வழங்குகிறோம். வினா / விடை எழுதுபவர்களின் பங்களிப்பால்தான் இந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ் கோரா குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்திருக்கிறது.
கோராவில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாகக் கட்டுரைகளும் எழுதப்படுகின்றன. அவற்றைத் திருத்தவும் சரிபார்க்கவும் என்ன மாதிரியான ஏற்பாடுகள் உள்ளன?
‘களங்கள்’ எனும் பெயரில் ஒரு அமைப்பைக் கோராவில் தொடங்கியிருக்கிறோம். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்கில் இயங்கும் குழுக்களைப் போன்றவை இவை. பயனாளர்கள் இதில் கட்டுரைகளை எழுதலாம். தவறான தகவல்களுடன் கட்டுரை எழுதினால் அதற்கு வரவேற்பு கிடைக்காது. சம்பந்தப்பட்டவர்களின் தவறுகளைக் களத்தின் நிர்வாகி சுட்டிக்காட்டுவார். எங்களுக்கும் தகவல் அளிப்பார்.
கோராவைப் பொறுத்த அளவில், எந்தெந்தத் துறை சார்ந்த கேள்வி - பதில்கள் அதிகம் இடம்பெறுகின்றன?
மொழி சார்ந்து நிறைய வினா / விடைகள் வந்திருக்கின்றன. அதற்கு அடுத்த இடத்தில் அரசியலும் சினிமாவும் இருக்கின்றன. அறிவியல், நிதியியல், பங்குச் சந்தை தொடர்பான தகவல்களும் கணிசமாக இடம்பெற்றிருக்கின்றன.
இந்தியாவில் தமிழ் சார்ந்த முன்னெடுப்புகளைக் கவனிக்கிறீர்களா? மொழி சார்ந்து உங்கள் செயல்பாட்டை விரிவுபடுத்த என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?
கோராவில் பணிபுரியத் தொடங்கிய பின்னர், தமிழறிஞர்கள், தமிழில் நன்கு எழுதத் தெரிந்த பல்வேறு துறைசார் நிபுணர்களின் தொடர்பு கிடைத்திருக்கிறது. அதன் மூலம் பல்வேறு முயற்சிகள் நடப்பதைக் கவனித்திருக்கிறேன். எனவே, மொழி சார்ந்து இயங்குவது என்று தீர்மானித்தேன். அறிவைப் பகிர்வதும் வளர்ப்பதும்தான் கோராவின் முக்கிய நோக்கம். ‘தமிழை வளர்ப்போம். தமிழால் அறிவையும் வளர்ப்போம்’ எனும் நோக்கத்துடன்தான் நான் இயங்கத் தொடங்கினேன். ‘வல்லுநர் வினா / விடை’ எனும் பெயரில் துறைசார் நிபுணர்களின் பங்களிப்புடன் பல விஷயங்களை முன்னெடுக்கிறோம். இதன் மூலம் மொழியையும் வளப்படுத்த முடியும். பல்வேறு கலைச் சொற்கள் இந்தத் தளத்தில் பகிரப்படுவதை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.