நவ. 12: பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா காலமானார். உலகில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் இவர். 1971-ம் ஆண்டிலிருந்து இந்தப் பதவியை அவர் வகித்துவந்தார்.
நவ. 13: நகோர்னோ - காராபாக் பிராந்தியத்தில் நடந்துவரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஆர்மீனியாவும் அஸர்பைஜானும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த சமாதானத் திட்டத்துக்கு ரஷ்யா ஏற்பாடுசெய்திருந்தது.
நவ. 15: இணையதள செய்திகள், திரைப்படங்கள், காணொலி நிகழ்ச்சிகள் ஆகிய டிஜிட்டல் சேவைகள் மத்திய செய்தி - ஒளிபரப்பு அமைச்சகத்தின்கீழ் கொண்டுவரும் உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.
நவ. 15: அயோத்தியின் ‘தீப உற்சவம்’ கொண்டாட்டம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. இந்தக் கொண்டாட்டத்துக்காக சரயு ஆற்றங்கரையில் 5,84,572 விளக்குகள் ஏற்றப்பட்டன.
நவ. 16: பிஹார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். பிஹார் மாநிலத்தின் முதல்வராக ஏழாவது முறையாகவும் தொடர்ச்சியாக நான்காவது முறையும் அவர் பொறுப்பேற்றார்.
நவ. 17: தமிழ்ப் பதிப்புலகின் முன்னோடி ‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன் கரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார். தற்காலத் தமிழ் அகராதி உள்பட பல்வேறு நூல்களைப் பதிப்பித்து தமிழ்ப் பதிப்புலக வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் புரிந்தவர் க்ரியா ராமகிருஷ்ணன்.
நவ. 19: மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்ட பகுதிகளில் சிபிஐ விசாரணை நடத்தும்போது மாநில அரசின் ஒப்புதல் கண்டிப்பாகத் தேவை. ஒப்புதல் இல்லாமல் விசாரணை நடத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.
நவ. 19: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மொத்த வாக்காளர்கள் 6.10 கோடி. இதில் ஆண் வாக்காளர்கள் 3.01 கோடி; பெண் வாக்காளர்கள் 3.09 கோடி. மாற்றுப் பாலின வாக்காளர்கள் 6,385. வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் தமிழகத்தின் மிகப் பெரிய சட்டப்பேரவைத் தொகுதி சோழிங்கநல்லூர் (6.53 லட்சம் வாக்காளர்கள்), சிறிய தொகுதி கீழ்வேளூர் (1.73 லட்சம் வாக்காளர்கள்)