அக். 9: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவராக தினேஷ்குமார் காரா நியமிக்கப்பட்டுள்ளார். தலைவராக உள்ள ரஜ்னிஷ் குமாரின் பதவிக் காலம் முடிந்ததால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்.9: இந்தியப் பருத்திக்கான சின்னத்தை மத்திய ஜவுளி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இனி உலகப் பருத்தி வர்த்தகத்தில் இந்தியாவின் உயர் வகைப் பருத்தியானது ‘கஸ்தூரி பருத்தி’ என்றழைக்கப்படும்.
அக். 10: பின்லாந்து நாட்டின் ஒரு நாள் பிரதமராக 16 வயது நிரம்பிய ஆவா மர்த்தோ பதவிவகித்தார். பெண்களுக்கு அதிகாரமளிப்பு, பாலினச் சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அக். 11: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதியாட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நடால் பட்டம் வென்றார். நடாலின் 20ஆம் கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. மகளிர் பிரிவில் போலந்தின் இகா ஷ்வான்டெக் வென்றார்.
அக். 12: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவின் பால் ஆர் மில்குரோம், ராபர்ட் பி வில்சன் ஆகியோர் கூட்டாக வென்றனர். இவர்களுடைய ஏலக் கோட்பாடு, புதிய ஏல வடிவங்களின் கண்டுபிடிப்புகளுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது.
அக். 12: இந்தியாவில் எட்டு கடற்கரைகள் புகழ்பெற்ற நீலக்கொடி சான்றிதழைப் பெற்றுள்ளன. குஜராத்தின் சிவராஜ்பூர், டையூவின் கோகலா, கர்நாடகத்தின் காசர்கோட், படுபித்ரி, கேரளத்தின் கப்பட், ஆந்திரத்தின் ருஷிகொண்டா, ஒடிஷாவின் தங்கக் கடற்கரை, அந்தமானின் ராதா நகர் கடற்கரை ஆகியவை இச்சான்றிதழைப் பெற்றுள்ளன. தூய்மையான கடற்கரைகளுக்கு இச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அக். 13: விஜய ராஜே சிந்தியாவின் 100-வது பிறந்த நாளையொட்டி அவருடைய நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. குவாலியரின் கடைசி அரசரான மகாராஜா ஜிவாஜி ராவ் சிந்தியாவின் மனைவி இவர்.
அக். 16: நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. 13.66 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில். 7,71,500 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் தேர்வெழுதிய 99,610 மாணவர்களில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 8.87 சதவீதம் அதிகம். தமிழகத்தைச் சேர்ந்த ஜன் 710 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் 8ஆம் இடமும் மாநிலத்தில் முதலிடமும் பிடித்தார்.