திசைகாட்டி

துறைமுகம்: ஐ.ஐ.டி.யின் இணையவழிப் படிப்புகள்!

வா.ரவிக்குமார்

‘வண்டி ஒருநாள் ஓடத்தில் போகும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்னும் பழமொழியைக் கேட்டிருப்போம். கரோனா இதன் பொருளை நேரடியாக நடைமுறை வாழ்க்கையுடன் பொருத்திப்பார்க்க வைத்திருக்கிறது. நடப்பு ஆண்டில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் அரசுப் பள்ளிகளில் புதிதாகச் சேர்ந்திருக்கின்றனர் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே கூறியிருக்கிறார்.

பள்ளிக் குழந்தைகளுக்குத் தொலைக்காட்சி வழியாகப் பாடங்கள் நடத்தப்படுகின்றன. பள்ளிகளின் வசதிக்கேற்பவும் மாணவர்களின் வசதிக்கேற்பவும் கூகுள் கிளாஸ் ரூம், ஸூம் செயலிகளின் வழியாகவும், இன்னும் சில பள்ளிகளில் கல்வி தொடர்பான வீடியோக்களைப் பதிவிடுவதன்மூலமும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்திவருகின்றனர்.

கோவிட் 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பொருளாதாரம் மட்டுமல்ல; பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களின் படிப்பும்தான். யுனெஸ்கோ ஆய்வின்படி 150 கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இணையவழிக் கல்விக்கு மாறியிருக்கிறார்கள். கல்லூரிச் சாலையில் சிரித்தபடியே சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த மாணவர்கள், இப்பொழுது ‘டிஜிட்டல் பிளாட்பார்ம்’ என்னும் ஒரே கூட்டுக்குள் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையை மாற்றி மாணவர்களைச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளாக ஆக்கும் எண்ணத்துடன் ‘நேஷனல் புரோக்ராம் ஆன் டெக்னாலஜி என்ஹான்ஸ்டு லேர்னிங்’ (NPTEL) என்னும் அமைப்பு அறிவியல் துறையில் புதிய பாதையைப் போட்டிருக்கிறது. என்.பி.டி.இ.எல்., அமைப்பு மும்பை, சென்னை, டெல்லி, கான்பூர், கரக்பூர், ரூர்கேலாவிலிருக்கும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து பொறியியல், அறிவியல் துறை சார்ந்து இணையவழி படிக்கும் பாடங்களை உருவாக்கியிருக்கிறது. இவற்றுடன் IISc பெங்களூருவும் கைகோத்திருக்கிறது. இந்த இணையவழிப் படிப்புகளைப் பற்றி ஐ.ஐ.டி. மெட்ராஸின் பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், பேராசிரியர் பிரதாப் ஹரிதாஸ் ஆகியோர் வழங்கிய கருத்துரையின் சுருக்கம் இது:

மாணவர்களே தேர்ந்தெடுக்கலாம்

“சென்னையிலிருக்கும் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் இப்போது இணையவழி இளநிலை படிப்புகளை (B.Sc., Proggramming and Data Science) மாணவர்களின் வசதிக்காக புதிதாக வடிவமைத்திருக்கிறது. மாணவர்கள் வீ்ட்டிலிருந்தபடியே இத்தகைய வசதிகளைப் பயன்படுத்தித் தங்களின் கல்வித்திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் குழுக்களை அமைத்துப் பாடங்களில் எழும் சந்தேகங்களை ஆசிரியர்கள், நண்பர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். பாடங்களை நன்கு படித்த பிறகு, இணையவழித் தேர்வை எழுதி தங்கள் தகுதியை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

ஐ.ஐ.டி.யின் மிகச் சிறந்த ஆசிரியர்கள், SWAYAM-NPTEL தடத்தின்வழியாக மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடங்களை விரும்பிய நேரத்தில் பயிற்றுவிக்கிறார்கள்.

நாள்தோறும் புதுப்புது இணையவழிப் படிப்புகள் உருவாக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இவற்றிலிருந்து தமக்கானதைத் தேர்ந்தெடுக்கும் தெளிவான பார்வை மாணவர்களுக்கு இருக்க வேண்டும். பிரபல கல்லூரியில் சேர்ந்து படிப்பது பெருமையாகக் கருதப்பட்ட சூழ்நிலையில், தற்போதைய கரோனா காலம், இணையவழிக் கல்வியில் மாணவர்களின் கற்றலுக்கு வழிவகுக்கிறது.

செலவை மிச்சப்படுத்தும்

இணையவழிப் படிப்புகள் பணவிரயம், நேரவிரயம், விடுதிக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, உணவு - உணவகச் செலவு போன்ற அநாவசிய செலவுகளின்றி மாணவர்கள் இருப்பிடத்திலிருந்தே சிறந்த முறையில் கல்வி பயில வழிவகுக்கிறது. சிறந்த கல்வி நிறுவனங்களில் போதிக்கும் சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் ஒரு மாணவர் தனக்குப் பிடித்த பாடங்களைத் தடங்கலின்றி படிக்க வழிவகுக்கிறது.

இணையவழிக் கல்வியானது நன்கு படிக்கும் மாணவர்களுக்கானவை மட்டுமல்ல, திரும்பத் திரும்ப அந்தப் பாடங்களை ஆடியோ-விஷுவல் முறையில் பார்க்கும்போது மிகவும் கடினமான பகுதிகள்கூட, மெதுவாகக் கற்கும் மாணவர்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும்.

இனி இருவழியில் கல்வி

பிடித்த பாடம், பிடித்த இடம், பிடித்த நேரம், சிறந்த ஆசிரியர்கள் என அனைத்தும் அமைந்துவிட்டால் படிப்பதும் மாணவர்களுக்குப் பிடித்துப் போகும். என்.பி.டி.இ.எல். மூலம் 8.5 லட்சம் மாணவர்கள் இதுவரை படித்து சான்றிதழ் பெற்றிருக்கிறார்கள். மீண்டும் வகுப்பறைக் கல்வி முறை தொடங்கப்பட்டாலும் இணையவழி பாதி, நேரடியாக மீதி என இரண்டும் கலந்த கல்வியாகத்தான் அது இருக்கும். ஊரடங்கின்போது இத்தகைய சூழ்நிலைக்கு ஆசிரியர்களும் தங்களைத் (கூகுள் கிளாஸ்ரூம், கூகுள் ஜாம்போர்ட், பவர்பாயின்ட் பிரசன்டேஷன் எனக் கற்றுத் தேர்ந்து) தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்”.

SCROLL FOR NEXT