திசைகாட்டி

சேதி தெரியுமா?

n தொகுப்பு: மிது n

செப். 19: மத்திய அரசின் 3 வேளாண் மசோதாக்களை எதிர்த்து பஞ்சாபைச் சேர்ந்த மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் அமைச்சரவையிலிருந்து விலகினார். இந்த மசோதாக்கள் பஞ்சாபில் வேளாண் துறையை அழிக்கும் என்று கூறி அமைச்சரவையிலிருந்து அவர் விலகினார். தேசிய ஜனநாயக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் அவர் சார்ந்த அகாலிதளம் கட்சி அறிவித்தது.

செப். 21: இந்தியாவின் முதல் பிரத்யேகத் தனியார் ஜெட் விமான நிலையம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டது.

செப். 21: 3 வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, அவை நடவடிக்கைகளில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறி 8 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாநிலங்களவை விதி எண் 255இன்படி இந்த நடவடிக்கையை மாநிலங்களவை தலைவரும் குடியரசுத் துணை தலைவருமான வெங்கய்ய நாயுடு எடுத்தார்.

செப். 24: இந்தியா - மாலத்தீவு இடையே வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக முதலாவது நேரடி சரக்குக் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. இந்தியாவின் தூத்துக்குடி, கொச்சின் துறைமுகங்களிலிருந்து மாலத்தீவின் குலுதுஹ்பூஷி, மாலே துறைமுகங்களை இந்த சேவை இணைக்க உள்ளது.

செப். 25: உடல்நலம் குன்றியிருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (74) காலமானார். கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஆகஸ்ட் 5 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 14 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள அவர், பத்ம, பதம்பூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார்.

செப். 26: அம்மா நடமாடும் நியாய விலைக் கடைத் திட்டத்தை தமிழக அரசு மாநிலம் முழுவதும் விரிவாக்கியுள்ளது. இதன்படி 37 மாவட்டங்களில் 3,501 நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் நீலகிரி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்கள் முன்பு பயன்பெற்றுவந்தன.

SCROLL FOR NEXT