ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அப்படியே வாய்த்தாலும் அதன் அருமையைப் பலர் உணர்வதில்லை. வெகு சிலரே அதன் அருமையை உணர்கின்றனர். அத்தகைய வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கின்றனர். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், 25 வயதுக்கு உட்பட்டோரில் சிறந்த 25 பேரில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிகின் தரன், அந்த வெகு சிலரில் ஒருவர்.
நிகின் தரன் என்றவுடன் ஏதோ வட இந்தியரோ என்று எண்ண வேண்டாம். இவர் நம் மண்ணின் மைந்தர். ஆம், மாயவரத்தைப் பூர்விகமாகக்கொண்டவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்துவரும்போதும், தமிழில் உரையாடுவதையே விரும்புகிறார். அவருடைய பேச்சுத் தமிழும் உச்சரிப்பும் நம்மைப் பொறாமை கொள்ளவைக்கும் அளவுக்குச் செறிவாகவும் தெளிவாகவும் உள்ளன.
நிகினின் அடித்தளம்
நிகினின் தந்தை விஸ்வநாதன் பரணீதரன் (இதுவே பின்னர் தரன் என்று சுருங்கிவிட்டது). தாய் கிருத்திகா தரன். நிகினின் பெற்றோர் பெங்களூருவில் மருத்துவர்களாக பணியாற்றிவருகிறார்கள். குழந்தைப் பருவத்திலேயே அபரிமித அறிவாற்றலையும் வியக்கத்தக்க நினைவாற்றலையும் நிகின் கொடையாகப் பெற்றிருந்தார். நிகினின் கற்பனைகளுக்கும் சிந்தனை வீச்சுக்கும் வடிகாலாக இருக்கும் விதமாகத் தங்கள் வாழ்க்கையை அவர்கள் தகவமைத்துக்கொண்டார்கள். நிகினின் இன்றைய அசுர வளர்ச்சிக்கு, அதுவே வலுவான அடித்தளமாக அமைந்தது.
மலை போலக் குவிந்த புத்தகங்கள்
பள்ளியில் வழங்கப்பட்ட கல்வியால் நிகினின் அறிவுப் பசிக்குத் தீனி போட முடியவில்லை. ‘எந்திரன்’ படத்தில்வரும், சிட்டி ரோபோவைப் போன்று, ஓராண்டுக்கான படிப்பை ஒரு மாதக் கோடை விடுமுறையிலேயே முடித்துவிட்டு, பள்ளிக்குச் சென்று வேறு என்ன படிக்க வேண்டும் என்று கேட்கும் நிலையில்தான் அவருடைய பள்ளி வாழ்க்கை இருந்துள்ளது. தன்னுடைய ஒன்பது வயதுக்குள், நிகின் படித்த புத்தகங்களும், பார்த்த ஆவணப் படங்களும், இன்றைய கல்லூரி மாணவர்களும் படிக்காத ஒன்று; பார்க்காத ஒன்று.
வாழ்க்கையை மாற்றியமைத்த சந்திப்பு
அவருடைய அறிவுத்திறன் பள்ளியை மீறிய ஒன்றாக, இருந்ததால், ஹோம் ஸ்கூல் முறைப்படி வீட்டிலிருந்தபடியே படிக்கத் தொடங்கியுள்ளார். அவர் படித்த புத்தகங்களும் பார்த்த ஆவணப்படங்களும் எலக்ட்ரானிக் துறை மீது அவருக்கு ஒருவித ஈர்ப்பை ஏற்படுத்தின. அந்தச் சூழலில்தான், நிகின் வீட்டுக்கு அருகில் வசித்த முனைவர் ஜெயராமன் எனும் பேராசிரியரை சந்தித்தார். நிகின் வாழ்க்கையை மாற்றியமைத்த சந்திப்பு அது.
எல்லைக் காவல் படையில் (பி.எஸ்.எஃப்.) விஞ்ஞானியாகப் பணியாற்றிவந்த அவர், தன்னுடைய ஆய்வுக்கூடத்தில் பயிற்சிபெறும் வாய்ப்பையும் நிகினுக்கு வழங்கினார். நிகின் அங்கே கற்றது நான்காண்டு எலக்ட்ரானிக் பொறியியல் படிப்பை மிஞ்சிய ஒன்று. விவசாயிகளுக்கு உதவும் ஆய்வுகளிலும், ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதைத் தவிர்ப்பதற்கான ஆய்விலும், இன்று பிரசித்திபெற்று விளங்கும் ஸ்மார்ட் ஹோம் தொடர்பான ஆய்வுகளிலும் நிகின் ஈடுபட்டுள்ளார். குடியரசுத் தலைவர் கையால் நிகின் விருதும் பெற்றுள்ளார்.
இலங்கை அகதிகளுக்கு உதவி
தன்னுடைய அறிவு இந்தச் சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும், அது மக்களின் வாழ்க்கையில் ஓர் ஆரோக்கியமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், தன்னைப் போன்ற மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்குச் சிறு வயது முதலே இருந்துவந்துள்ளது. சிறு வயதிலேயே, wise எனும் தன்னார்வ அமைப்புடன் இணைந்து செயல்பட்டார். பெங்களூருவுக்கு அருகிலிருக்கும் இந்திரா காந்தி இண்டர்நேஷனல் அகாடமி எனும் இலங்கை அகதிகளுக்கான பள்ளிக்குச் சென்று, அங்கே படித்த தன் வயதை ஒத்த மாணவர்களுக்கு இலவசமாகப் பாடங்களைப் பயிற்றுவித்தார். 2015-ல் நிகின் தன்னுடைய சேவையை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தினார்.
அமெரிக்காவிலும் தொடரும் சாதனை
2 முடித்தவுடனே, பாஸ்டன் நகரிலிருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையுடன் கூடிய பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்தது. 2015-ல் கடற்கரையோரம் வசிக்கும் பின்தங்கிய மாணவர்களுக்கு, ஐ.டி. துறையில் பயிற்சி அளிக்கும் நோக்கில், ஐ.டி.ஏ.பி. எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நிகின் தொடங்கினார். அவருடைய நிறுவனத்துக்கு ‘கிளின்டன் குளோபல் இனிஷியேட்டிவ்’வின் அங்கீகாரமும் நிதியுதவியும் கிடைத்தன.
2017-ல், நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் ‘இண்டர்நெட் ஆஃப் திங்ஸ்' என்றழைக்கப்படும் IoT-காக முதல் ஓபன் பிளாட்பாரத்தை உருவாக்கினார். செயற்கை அறிவுக்கும், ஸ்மார்ட் வீடுகளுக்கும் IoT-யே அடிப்படை. அதற்குப் பிறகு மெட்ஸிக்ஸ் எனும் நிறுவனத்தை இன்னொரு பேராசிரியருடன் இணைந்து தொடங்கியுள்ளார். அவருடைய கண்டுபிடிப்பு, இன்று உலகெங்கும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டோர் எந்தவிதச் சிக்கலுமின்றி விரைவில் குணமடைய உதவுகிறது.
வழிகாட்டும் ஒளி
நிகின் அடைந்திருக்கும் இந்த உயரம், இன்றைய தலைமுறை மாணவர்களுக்கான உத்வேகம் ஊட்டுவது மட்டுமல்ல; அவர்களுக்கு முன் நீளும் பாதையில் வழிகாட்டும் ஒளியும் அதுவே. அமெரிக்காவில் வசிக்கும்போதும், அவருடைய மனம் தன்னுடைய வேரை நோக்கிய ஒன்றாகவே இருக்கிறது. தன்னுடைய அறிவாற்றலையும் தான் கற்றதையும் இந்தியாவுக்குப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதே அவருடைய பெருவிருப்பம். நிதி ஆயோக் அமைப்பின் வழிகாட்டும் குழுவில் இணைந்து பணியாற்றுவதே தன்னுடைய லட்சியம் என்று சொல்லும் நிகினுக்கு 25 வயதுதான் ஆகிறது. நோக்கம் உறுதியாக இருக்கும்பட்சத்தில், அதற்கு வயது தடையாக இருக்குமா என்ன?
தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in