‘இணைய தலைமுறை 2020' என்ற ஐந்து நாள் இணையவழிப் பயிலரங்கத்தை 'இந்து தமிழ் திசை' நாளிதழ், கல்வியாளர்கள் சங்கமம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி (புதுக்கோட்டை) ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்திருந்தன. ஜூலை 27 முதல் 31 வரை நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தில் நாள்தோறும் ஆசிரியர்கள், மாணவர்கள், 'இந்து தமிழ் திசை' வாசகர்கள் என நானூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். இந்தப் பயிலரங்கத்தில் பேசிய பேச்சாளர்களுடைய உரைகளின் சுருக்கமான தொகுப்பு:
கல்வி எனும் கலங்கரை விளக்கம்
முனைவர் சொ. சுப்பையா, முன்னாள் துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம்
வாழ்க்கை என்னும் கடலை எளிமையாகக் கடக்க உதவும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது கல்வி. கல்வி என்றால் என்னவென்று, நம்மில் பெரும்பாலோர் புரிந்துகொள்ளவில்லை. கல்வியின் நோக்க மென்பது பணம் சம்பாதிப்பது மட்டும்தான்; பாடத்தைக் கற்று, மனப்பாடம்செய்து எழுதும் முறைதான் கல்வி என்று நினைக்கிறோம். இந்தக் கல்வி முறை காலப்போக்கில் நிச்சயமாக மறைந்துவிடும். இன்றைய குழந்தைகளை இன்றைய தேவைகளுக்காக மட்டுமே நாம் தயார்படுத்துகிறோம்.
அவர்களை நாளைய தேவைகளுக்காகத் தயார்படுத்துவது ஆசிரியர்களின் கடமை. மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும். வகுப்பறையில் பாடம் நடத்தும்போது கவனித்துக்கொள்ளலாம்; இணையம்வழிப் பாடத்தைக் கவனிக்கத் தேவையில்லை என்று பெரும்பாலான மாணவர்கள் நினைக்கிறார்கள். அப்படி நினைக்காமல் இப்பொழுது ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, இணைய வகுப்புகளைக் கவனிக்க முன்வர வேண்டும். கல்வி எப்போதுமே முக்கியம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். உடல், மன வலிமை, உணர்வுரீதியான நிலைத்தன்மை, சமூகப் பழக்கங்கள் ஆகிய நான்கையும் கற்றுக்கொடுப்பதுதான் முழுமையான கல்வி.
ஜாலியா ஒரு சைக்காலஜி
எஸ். கல்யாணந்தி, உளவியல் ஆலோசகர்.
கோவிட்-19 காலத்தில் சமூகப் பொருளாதார நெருக்கடிகளால் பெரியவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உளவியல்ரீதியான உதவி என்பது நம் அனைவருக்குமே
வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் நிச்சயமாகத் தேவைப்படும். இனம் புரியாத அழுத்தம், மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் போன்றவற்றை நாம் அனைவருமே எதிர்கொள்கிறோம். இப்போது, புதுமையான உலகத்துக்குள் நாம் போயிருக்கிறோம். இந்தச் சூழலுக்கு ஏற்ற வகையில் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டிய இந்தச் சூழலில், வீட்டிலிருந்து வேலை பார்ப்பது, இணையவழி வகுப்புகள் என்று பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகிய மூன்று தரப்பினருமே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கேட்ஜெட் பயன்பாடு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
குழந்தைகள், பெரியவர்கள் ஆகிய இரண்டு தரப்பினருமே ‘டிஜிட்டல் டிமென்ஷியா’வால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நம்மை நாமே மறந்துபோவது, எரிச்சலான நடத்தை, கவனக் குறைவு, கண்கள் உலர்ந்துபோதல் எனப் பல்வேறு பிரச்சினைகளை இதனால் எதிர்கொள்கிறோம். குழந்தைகளிடம் கேட்ஜெட் பயன்பாட்டைக் குறைக்க வேண்டுமென்றால், அதற்கு பெற்றோர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இணையவழி வகுப்புகள் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகளுடன் உரையாடுவது, விளையாடுவது, அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து புத்தகங்களை வாசிப்பது ஆகியவற்றைப் பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்.
தோல்விகளால் ஒரு வேள்வி
வி. நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்., கூடுதல் ஆணையர், வருமானவரித் துறை
வாழ்க்கையில் பெரிய விஷயங்களில் தோல்வி அடைந்தவர்கள்தாம், பெரிய ஆளுமைகளாக இருக்கிறார்கள். சிறிய மனிதர்கள், சிறிய பிரச்சினைகள், சிறிய தீர்வுகள் என்று சொல்வார்கள். பெரிய தோல்விகளை நாம் எதிர்கொள்ளும்போது நமக்குத் தானாகவே தைரியம் வந்துவிடும். நமது வாழ்நாள் 80-100 ஆண்டுகள் எனக் கொண்டால், அதில் ஒரு நாள் தோல்வி ஏற்படுவதென்பது பெரிய விஷயமில்லை. எத்தனை தோல்விகளை, வெற்றிகளை எதிர்கொண்டாலும், இறுதியில் வாழ்ந்த வாழ்க்கை யாருக்குமே நஷ்டமாகத் தெரியாது. எல்லோருக்குமே நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு நாளுமே லாபம்தான்.
வாழ்க்கையில் தோல்வி என்பது இயற்கையானது. இன்னும் சொல்லப்போனால், வாழ்க்கையின் வளர்ச்சியே இன்று நாம் எதிர்கொள்ளும் தோல்விகள்தாம். தோல்விகளும் வெற்றிகளும் மரத்தில் இருக்கும் இலைகளைப் போன்றவை. வெற்றி, தோல்வி என்ற இலைகள் மரத்திலிருந்து உதிர்ந்து மீண்டும் மரத்துக்குத்தான் உரமாகின்றன. தோல்வி அனுபவங்கள்தாம் நம் ஆளுமையை வளர்ப்பதற்கான உரமாக இருக்கின்றன. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஒரு விஷயத்தை மனமுவந்து நாள்தோறும் ஐந்து நிமிடங்கள் செய்துவந்தால்கூட, அந்த விஷயம் நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் வெற்றியைக் கொண்டுவரும்.
நில்… கவனி… வெல்…
சிகரம் சதிஷ்குமார், எழுத்தாளர், ஆசிரியர்
கோவிட்-19 காலத்துக்கு ஏற்ற மாதிரி நாம் மாறியே ஆக வேண்டும். நம்மை நாமே கவனிக்கத் தொடங்கிவிட்டால், உலகம் நம்மைக் கவனிக்கத் தொடங்கிவிடும். தெரிந்ததைக் கற்றுக்கொடுப்பதல்ல கல்வி. தேவையானதைக் கற்றுக்கொடுப்பதுதான் கல்வி. புதிய வாசல்களைத் திறக்க வேண்டுமென்றால், சவால்களைக் கடக்க வேண்டும். படிப்பில் வெற்றியும் தோல்வியும் இயல்பு என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய சூழலில், கல்விக்கு மதிப்பெண்கள் அவசியமாக இருக்கின்றன.
ஆனால், நம்முடைய மதிப்பான எண்ணங்களும் கல்வியுமே வாழ்க்கையை உயர்த்தும் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். மாணவர்கள் எப்போதும் ஆசிரியர்களை எதிரிகளாகப் பார்க்கக் கூடாது. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நல்ல நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். நல்ல மனிதர்கள் உருவாக வேண்டுமென்றால் தேவையற்ற எண்ணங்களையும் பழக்கங்களையும் நீக்கிவிட வேண்டும். நம்முடைய குறைகளை நாம்தான் களைய வேண்டும். ஒவ்வொரு தனிமனிதரும் சரியாக இருந்துவிட்டால், உலகம் சரியாகிவிடும்.
நலம், நலமறிய ஆவல்
கவிஞர் தங்கம் மூர்த்தி, தமிழ்ச் செம்மல் விருதாளர்
வீட்டுக்குள் இருக்கும் இந்தக் காலத்தில் எதுவும் செய்ய முடியாது என்று ஏன் நினைக்க வேண்டும்? இந்த நேரத்தில் மனத்தைச் செம்மையாக வைத்துக்கொள்வது அவசியம். இந்தக் காலத்தை வீணடிக்காமல் திட்டமிடுவதற்கான காலமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆரோக்கியமும் பண்பும் வாழ்க்கைக்கு முக்கியம். உடல் வலிமையாக இருப்பதற்கு உண்ண வேண்டிய நேரத்தில் உண்ண வேண்டும், உறங்க வேண்டிய நேரத்தில் உறங்க வேண்டும். சாப்பிடும்போது கைபேசி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள்தாம் இந்த உலகத்தின் நம்பிக்கை. எல்லா வகையிலும் வாழ்க்கையில் எதிர்படும் வாய்ப்புகளை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும்.
பெற்றோர்களை எதிரிகளாகப் பார்க்க வேண்டியதில்லை. பெரியவர்களின் ஆலோசனைகளை உள்வாங்கி, அதிலிருக்கும் நன்மை, தீமைகளை ஆராய்ந்துபார்க்க வேண்டும். வாழ்க்கையை எப்போதும் நேர்மறையாக அணுக வேண்டும். உடற்பயிற்சி, மனப்பயிற்சி இரண்டும் அவசியம். அன்பு என்னும் அருமருந்து இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. ஒரு நாளைக்கு நம் மண்ணில் விளையும் ஒரு பழத்தையாவது சாப்பிடும் பழக்கத்தை வைத்திருக்க வேண்டும். உடல், மன வளத்துடன் வாழ்க்கையை அணுக வேண்டும்.