ஜூலை.20: ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 2020-ல் நடைபெறுவதாக இருந்த ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக் கோப்பை, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக 2021 அக்டோபருக்குத் தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தால், உலகக் கோப்பை 2023 போட்டி அட்டவணையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முதல் மெய்நிகர் ஐ.நா. கூட்டம்
ஜூலை 22: செப்டம்பர் 2020-ல் நடைபெறும் ஐ.நா. பொது அவைக் (UNGA) கூட்டத்துக்கு உலகத் தலைவர்கள் பதிவுசெய்யப்பட்ட காணொலி அறிக்கைகளை வெளியிடச் செய்வது என்று ஐ.நா. முடிவெடுத்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 193 உலக நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா.வின் 75 ஆண்டுகால வரலாற்றில், மெய்நிகர்வழியாகப் பொது அவைக் கூட்டம் நடைபெற உள்ளது இதுதான் முதன்முறை.
சீனாவின் செவ்வாய்த் திட்டம்
ஜூலை.23: சீனாவின் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சித் திட்டமான ‘தியான்வென்-1’ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. தியான்வென்-1 விண்கலம், 2021 பிப்ரவரியில் செவ்வாயைச் சென்றடையும். சுற்றுப்பாதைக் கலம், தரையிறங்கு கலம், உலாவி ஆகிய மூன்றையும் இந்தத் திட்டம் உள்ளடக்கியிருக்கிறது. ‘தியான்வென்’ என்றால் ‘சொர்க்கத்துக்கான கேள்விகள்’ என்று பொருள்.
தொலைக்காட்சியில் பாடங்கள்
ஜூலை 23: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை 14 தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆகஸ்ட் 1 முதல் ஒளிப்பரப்பவிருக்கின்றன என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில், பள்ளி மாணவர்களுக்காகப் பாடங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுத்திருக்கும் முதல் மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், இந்தக் கல்வியாண்டில் பாடத்திட்டத்தைக் குறைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
1.64 கோடிப் பேர் பாதிப்பு
ஜூலை 27: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,64,21,465 ஆக உயர்ந்திருக்கிறது. 6,52,276 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 1,00,51,644 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 14,36,019 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 32,812 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 9,18,735 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.