திசைகாட்டி

களத்தில் நின்று விளையாடலாம்

செய்திப்பிரிவு

தொகுப்பு: என். கௌரி

விளையாட்டு தொடர்பாக ‘ஆடுகளம் 2020’ என்ற ஐந்து நாள் இணையவழிப் பயிலரங்கத்தை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், கோவை கே.பி.ஆர். கலை அறிவியல் – ஆராய்ச்சிக் கல்லூரி, ‘கல்வியாளர்கள் சங்கமம்’ ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்திருந்தன. ஜூலை 13 முதல் 17 வரை நடைபெற்ற இந்தப் பயிலரங்கத்தில், ஆசிரியர்கள், மாணவர்கள், ‘இந்து தமிழ் திசை’ வாசகர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் கலந்துகொண்டார்கள். இந்தப் பயிலரங்க உரைகளின் சுருக்கமான தொகுப்பு:

சுவரை வைத்தே சித்திரம்

எஸ்.பாஸ்கரன், ஐ.சி.எஃப்., அர்ஜுனா விருதாளர் (ஆணழகன்)

உடல் கட்டுப் போட்டி (Body Building) என்பது கஷ்டமான துறை. இன்று தமிழ் இளைஞர்கள் பலரும் இந்தத் துறையை விரும்பித் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தத் துறையில் சிறந்து விளங்குவதற்கு மனபலம்தான் மிக முக்கியம். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, தூங்குவது, பயிற்சிசெய்வது, முழுக் கவனம், அர்ப்பணிப்பு ஆகியவை இந்தத் துறையில் சிறந்து விளங்குவதற்கு அவசியம். நான் சாதாரணக்குடும்பப் பின்னணியிலிருந்துதான் இந்தத் துறைக்குவந்தேன்.

என் மன பலமும், உடல் பலமும்தான் அர்ஜுனா விருது வாங்கும் அளவுக்கு என்னை சாதிக்க வைத்தன. இந்தத் துறைக்கு உடலை வருத்திப்பயிற்சிசெய்ய வேண்டும். அந்த வலியைப்பெரிதுபடுத்தினால், இந்தத் துறையில் நிலைத்திருக்க முடியாது. கடின உழைப்பு, மன உறுதி, விடா முயற்சி, அர்ப்பணிப்பு ஆகியவை இருந்தால், எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் வெற்றி நிச்சயம். இந்தத் துறையில் என்னைப் போன்று சாதாரணப்பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கான முயற்சியில்இப்போது ஈடுபட்டுவருகிறேன்.

விடாதே பிடி, கபடி

கே. பாஸ்கரன், தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர், இந்தியக் கபடி அணி வீரர்

காளையை அடக்குவதற்காகப் பயிற்சி செய்யப்பட்டதுதான் கபடி. மாடு முட்டுவதுபோல் தங்களைத் தாங்களே வீரர்கள்முட்டிக்கொண்டு விளையாடத் தொடங்கியதுதான், இந்த விளையாட்டு. சஞ்ஜீவினி, சடுகுடு எனப் பல பெயர்களில் இந்தியாவின் பல மாநிலங்களில்இது விளையாடப்படுகிறது. ‘கைப்பிடி’ என்பதை வைத்துதான் கபடி என்ற பெயர் உருவானது. ஒரு கட்டத்தில், தென்னிந்தியாவைவிட வட இந்தியாவில்கபடியை அதிகமாக விளையாடத் தொடங்கினார்கள்.

அதற்குப் பிறகு, இந்த விளையாட்டுக்குப் படிப்படியாகப் புது வடிவம் கொடுக்கப்பட்டது. கபடி விளையாட்டு ஒலிம்பிக்கில் இணைக்கப்படும் என்ற நம்பிக்கைஇருக்கிறது. கபடி விளையாட்டுக்கான பயிற்சியைப் பன்னிரண்டு முதல்பதினெட்டு வயதுக்குள் தொடங்கலாம். சத்தான உணவைச் சாப்பிடுவதிலிருந்து பல தரப்பட்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை வழக்கமாகக்கொள்ள வேண்டும். மன உறுதிதான் கபடி விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை. கல்வியைப்போலவே விளையாட்டு என்பதும் ஒரு நீண்ட பயணம்தான். தொடர்ந்து ஊக்கத்துடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.

களரியும் யோகாவும்

டாக்டர் யுவதயாளன், யோகா பயிற்சியாளர், கின்னஸ் சாதனையாளர்

எல்லா விளையாட்டுகளுக்குமே உடல், மனக் கட்டுப்பாடுஇரண்டுமே அவசியம். அதன் காரணமாக ஒரு விளையாட்டு வீரருக்கு யோகா பயிற்சி அவசியம் தேவை. உடல் சார்ந்த புற அம்சத்துக்கு மட்டுமல்லாமல், மனம் சார்ந்த அக அம்சத்துக்கும் யோகா அவசியம். ஒரு விளையாட்டின் உயிர் விசையியலைப் (Bio Mechanics) பொறுத்து, அதற்குத்தேவைப்படும் யோகா பயிற்சிகளைப் பெறுவது அவசியம். எந்த விளையாட்டாக இருந்தாலும், மூளைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் சீராக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு இயல்பாகவே பிராணயாமம் உதவுகிறது. யோகா பயிற்சி, சிந்தனை ஓட்டத்துக்குமட்டுமல்லாமல் தசை நெகிழ்ச்சியடையவும் உதவுகிறது. ஒரு விளையாட்டு வீரர், அவர் தேர்ந்தெடுக்கும் விளையாட்டுக்குத் தேவையான யோகா பயிற்சியை மேற்கொள்வது எப்போதுமே சிறந்தது.

தடம் புரளாத தடகளம்

டாக்டர் பி. நாகராஜன், தலைமைப் பயிற்சியாளர், செயின்ட் ஜோசப் கல்வி நிறுவனம்

தடகளத்தில்முன்பைவிட இந்தியா இப்போது முன்னேறியிருக்கிறது. ஆனால், நம்மைவிடப் பின்தங்கியிருக்கும் சிறிய நாடுகள் எல்லாம் தடகளத்தில் அதிக பதக்கங்களைவெல்கின்றன. விளையாட்டுக்கான நீண்டகாலத் திட்டங்களை நம் நாட்டில் வகுக்க முடியவில்லை. அதற்குக்காரணம், விளையாட்டு இங்கு இன்னும் தொழில்முறைத் துறையாக மாறவில்லை. அதன் காரணமாகப் பெற்றோர் பலரும் தங்கள் பிள்ளைகளை இந்தத் துறைக்கு அனுப்ப விரும்பவில்லை.

விளையாட்டுஒதுக்கீட்டில் வேலை கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வதென்றபயம் பெற்றோர்கள், விளையாட்டைப்பின்தொடரும் இளைஞர் களுக்கு இருக்கிறது. இந்தப் பாதுகாப்பின்மையைப் போக்குவதற்கு நீண்ட காலத் திட்டங்களைஅரசு வகுக்க வேண்டும். அரசு மட்டுமல்லாமல் தனியார்த் துறையும் விளையாட்டில் முதலீடு செய்ய முன்வர வேண்டும். எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் சாதிப்பதற்கு 7 முதல் 10 ஆண்டுகள் ஆகும். அந்தக் காலம்வரை, இந்தத் துறையில் சாதிக்க வருபவர்களின்தனிமனிதத்தேவைகளுக்கு உத்தரவாதம் கொடுக்கும் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான்நாம் இந்தத் துறையில் தடம்புரளாமல் பயணிக்க முடியும்.

சொல்லி அடி வாலிபால்

கே. சந்திரசேகரன், கைப்பந்துப் பயிற்சியாளர், பொள்ளாச்சி

கைப்பந்துகடினமான விளையாட்டுகளில் ஒன்றுதான். கண் இமைக்கும் நேரத்தில் பந்தை என்ன செய்ய வேண்டுமென்பதைத் தீர்மானிக்க வேண்டியிருக்கும். முன்கணிப்புடன் பந்தை அணுகுவதுதான் இந்த விளையாட்டின் முக்கியமான அம்சம். இந்த விளையாட்டைப் பொறுத்தவரை, இந்தியாவின்நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. விளையாட்டுத்துறையில் வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதும்,இதற்கு ஒரு முக்கியக் காரணம். பள்ளியில்மற்ற பாடங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, விளையாட்டுக்கும் கொடுக்க வேண்டும். நம் தேசிய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் தேவை என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. நமது பயிற்சியாளர்களின் தரத்தை உயர்த்துவதுதான் சரியாக இருக்கும்.

SCROLL FOR NEXT