திசைகாட்டி

சேதி தெரியுமா? - கூகுள் நிறுவனத்தின் இந்திய முதலீடு

கனி

ஜூலை 13: அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவில் ரூ. 75,000 கோடியை ‘இந்திய டிஜிட்டல்மயமாக்கல் நிதி’யாக கூகுள் நிறுவனம் முதலீடு செய்யும் என்று அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். இந்தியாவில் டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்துவதற்காக ‘கூகுள் ஃபார் இந்தியா’ என்ற திட்டத்தை அந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

மீண்டும் அதிபர்

ஜூலை 13: போலந்து நாட்டுத் தேர்தலில், 51.2 சதவீத வாக்குகளைப் பெற்று, அதிபர் ஆந்த்ரேஸ் டுடா வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரஃபேல் ட்ராஸ்கோவ்ஸ்கி 48.97 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி

ஜூலை 14: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி காரணமாக, துணை முதல்வர் பதவியிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பிரிவுத் தலைவர் பொறுப்பிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு சச்சின் பைலட்டுக்கு இருப்பதால், அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளது.

கத்தாரில் உலகக் கோப்பைக் கால்பந்து

ஜூலை 15: 2022 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி கத்தாரில் 2022, நவம்பர் 21 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் என்று சர்வதேசக் கால்பந்துக் கழகங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 32 அணிகள் கலந்துகொள்ளும் கடைசி போட்டித்தொடர் இது. அடுத்துவரும் 2026 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில், பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை 48 ஆக அதிகரிக்கவிருக்கிறது.

இந்திய மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்

ஜூலை 15: இந்திய மக்கள்தொகை 2047-ல் 161 கோடியாக உச்சத்தை எட்டும் என்றும், 2100-ல் அது 103 கோடியாகக் குறையும் என்றும் ‘லான்செட்’ இதழின் மக்கள்தொகைக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை குறையும் சதவீதம் 2046-லிருந்து தொடங்கும் என்று ஐ.நா.வளர்ச்சித் திட்டத்தின் கணக்கீடு தெரிவிக்கிறது.

SCROLL FOR NEXT