திசைகாட்டி

வீட்டிலிருந்தே திறனின்மையைக் களையலாம்

செய்திப்பிரிவு

முகமது ஹுசைன்

கரோனா தொற்றுப் பரவலால் உலகமே ஓர் அசாதாரணச் சூழ்நிலையைச் சந்தித்துள்ளது. நமது நாடு மட்டுமல்லாமல் உலகமே இன்று முடங்கிவிட்டது. பள்ளிகளும் கல்லூரிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. வெளியில் எங்கும் செல்ல முடியாது. நண்பர்களையும் பார்க்க முடியாது. தொடக்கத்தில் கைகொடுத்த புத்தகங்களும் தொலைக்காட்சிகளும்கூடத் தற்போது சலிப்பை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், செய்வதற்கு எதுவும் இல்லையென்றால்தானே சலிப்பு ஏற்பட வேண்டும். நமக்குத்தான் வீட்டிலிருந்தபடியே செய்வதற்கும் படிப்பதற்கும் நிறைய உள்ளனவே.

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களின் முன்னிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை திறன் பற்றாக்குறை. தேசத்தின் அச்சாணியை முறிக்கும் விதமாக அது வளர்ந்து நிற்கிறது. ஒவ்வோர் ஆண்டும் இரண்டு கோடிக்கும் மேலான பட்டதாரிகள் வேலைச் சந்தைக்குள் நுழைகிறார்கள். அவர்களில் 35 முதல் 75 சதவீதத்தினர்வரை வேலைக்குத் தயாராகாதவர்களாகவும் தொழில் திறனற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தத் திறன் பற்றாக்குறையைக் களையும் வழியை, அதுவும் வீட்டிலிருந்தபடியே திறனை மேம்படுத்தும் வழியை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு அளிக்கிறது.

கல்வியின் போதாமை

நவீனத் தொழில்நுட்பம் கற்றலையும் கற்பித்தலையும் எளிதாக்கியிருந்தாலும் மறுபுறம் புதுத் தொழில்நுட்பங்களால் படித்தவை வேகமாகக் காலாவதி ஆகின்றன. நாம் படித்து முடித்து வெளிவருவதற்குள் படித்தவை தேவையற்றுப் போய்விடுகின்றன. தகுதியான தொழில்நுட்ப அறிவு கொண்ட மனிதவளம் இல்லாமல் நிறுவனங்கள் தடுமாறுகின்றன.

பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவற்றின் தேவை குறுகிய காலத்திலேயே நீர்த்துப் போய்விடுமென்றால், 18 ஆண்டுப் படிப்பின் அவசியம் கேள்விக்கு உள்ளாகிறது. தேவைக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களும் அதன் பாடத்திட்டங்களும் தம்மைத் தகவமைத்துக்கொள்ளாததால், கல்வியின் போதாமை பெரும் நிறுவனங்களையும் நாட்டையும் ஒருங்கே பின்னுக்கு இழுக்கிறது.

எங்கே பிரச்சினை?

கல்வி உளவியலாளரான டாக்டர் பெஞ்சமின் புளூம் 1956-ல் உருவாக்கிய ‘புளூம் டாக்ஸானமி’ எனும் வகைப்பாட்டின்படி, கற்றல் என்பது தகவல்களை மனத்தில் இருத்துவது மட்டுமல்ல; அது கருத்துகளையும் செயல்முறைகளையும் பகுப்பாய்வுசெய்து மதிப்பிட்டு நடைமுறைப்படுத்துவது. பொதுவாக, நமது கல்விமுறையின் எல்லை கற்றலுடன் சுருங்கிவிடுகிறது. திறன்களும் அணுகுமுறையும் கல்வியின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக உள்ளன. இதுவே, இன்றைய பிரச்சினையின் ஆணிவேர்.

களைவது எப்படி?

கல்வி என்பது மாணவருக்கும் கல்வி நிறுவனத்துக்கும் இடையே மட்டும் நிகழும் அறிவுப் பரிவர்த்தனை அல்ல; அது மாணவருக்கும் ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் இடையே நடக்கும் பரிவர்த்தனை. பாடத்திட்டத்தை மேம்படுத்துவது மட்டும் தீர்வல்ல. வகுப்பைத் தாண்டி கல்வியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கல்வியை அறிவு சார்ந்ததாக மட்டுமல்லாமல், திறன் சார்ந்ததாகவும் அணுக வேண்டும்.

நாஸ்காம்மின் முயற்சி

கற்றலின் போதாமையை ஈடுகட்ட, பெரு நிறுவனங்கள் பயிற்சி வளாகத்தை நிறுவி, ஊழியர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை அளித்துத் தமது தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்றன. பெரு நிறுவனங்களில் சேர முடியாத பட்டதாரிகள், தம் பங்குக்குத் தனியார் பயிற்சி நிறுவனங்களில் பெரும் பணம் கட்டிப் பயின்று தமது திறமையை வளர்த்துக்கொள்ளும் நிலையே உள்ளது. இந்தத் திறனின்மைக் குறையை இட்டு நிரப்பும் நோக்கில், நாஸ்காம் (Nascom) மத்திய அரசுடன் இணைந்து ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்’ (Future Skills Nasscom) எனும் இணையதளத்தைத் தொடங்கி உள்ளது.

ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்

இதை ஓர் இணையக் கல்விச் சந்தை எனவும் சொல்லலாம். நாஸ்காமின் முக்கிய நோக்கம் மென்பொருள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு உதவுவதே. உலகின் முக்கியக் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இந்த இணையதளத்தில் இணைந்துள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது இன்றைய தொழில் அறிவுத் தேவைகளையும் நாளைய தேவையையும் அதில் தெரிவிக்கின்றன. அந்தத் தேவைக்கு ஏற்ற கல்வியை அதில் இருக்கும் கல்வி நிறுவனங்கள் வடிவமைத்து வழங்குகின்றன. அந்தக் கல்வியை மாணவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் கொண்டுசேர்ப்பதற்காக, edusoft எனும் இணையக் கல்வி வகுப்பை நாஸ்காம் பயன்படுத்துகிறது.

வருங்காலத்தை ஆளப்போகும் துறைகள்

செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங், ரோபாடிக்ஸ், இணையப் பாதுகாப்பு, டேட்டா அனலிடிக்ஸ், சமூகத் தொடர்பு, கிளவுட் கம்ப்யூட்டிங், உற்பத்திச் சங்கிலி போன்ற துறைகளுக்கு வருங்காலத்தில் மிகுந்த மனிதவளம் தேவைப்படும். இந்தத் துறைகளுக்குத் தேவையான கல்வியறிவுக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. தற்போது இந்த இணைய வகுப்புகள் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பொறியாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. விரைவில் இவை மாணவர்களுக்கும் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.

உலகின் அச்சாணி

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையில் இன்றைய தேதிக்கு 20 ஆயிரம் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 40 லட்சம் பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர். 2025-ல் இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 60 ஆயிரமாகவும் பொறியாளர்களின் எண்ணிக்கை 70 லட்சம் ஆகவும் உயரும் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகின் அச்சாணியாகத் திகழும் நமது மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தப் பல முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ‘ஃபியூச்சர் ஸ்கில்ஸ் நாஸ்காம்’ (FutureSkills Nasscom) அவற்றில் முக்கியமானது. கரோனா தொற்றால், வீட்டினுள் முடங்கியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மாணவர்களின் திறன் பற்றாக்குறையைக் களையவும் அறிவை வளர்க்கவும் தன்னம்பிக்கையைப் பெருக்கவும் இது உதவும்.

தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in

SCROLL FOR NEXT