கல்வி - வேலை வழிகாட்டி

நிம்மதியாக மூச்சுவிடும் பூமி!

செய்திப்பிரிவு

வா.ரவிக்குமார்

கரோனா வைரஸின் தாக்கத்தால் உலகம் முழுவதும் மனிதர்கள் மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில், புவி நிம்மதியாக மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் மனித குலம் வாழத் தேவையற்ற செயல்பாடுகள், அபரிமிதத் தொழிற்சாலை நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்திருப்பதுதான்.

சென்ட்ரல் சிஸ்டம் ஆப் ஏர் குவாலிட்டி அண்ட் வெதர் ஃபோர்காஸ்டிங் அண்ட் ரிசர்ச் (SAFAR), காற்றை மாசுபடுத்தும் நுண்துகள்கள் PM2.5 (பார்டிகுலேட் மேட்டர்) டெல்லியில் 30 சதவீதமாகவும் அகமதாபாத், புனேவில் 15 சதவீதமாகவும் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.

காற்றில் நைட்ரஜன் ஆக்ஸைடின் அளவு குறைந்துள்ளது. அபரிமிதமான வாகனப் போக்குவரத்தால் இந்த மாசு உருவாகக் கூடியது. புனேவில் நைட்ரஜன் வாயு மாசின் அளவு 43 சதவீதம், மும்பையில் 38 சதவீதம், அகமதாபாத்தில் 50 சதவீதம் குறைந்துள்ளது. சுவாசக் கோளாறை ஏற்படுத்தும் இந்த காற்று மாசு குறைந்திருப்பதில் உயிரினங்களுடன் சேர்ந்து புவியும் நிம்மதியாக மூச்சுவிடுகிறது.

சஃபர் அமைப்பின் விஞ்ஞானியான கஃப்ரன் பெய்க், “பொதுவாக மார்ச் மாத மாசுபாட்டு அளவு சுமாராக இருக்கும். தற்போது அது (ஏ.க்யு.ஐ. 50-100) 'போதுமான' அல்லது 'நல்ல' (ஏ.க்யு.ஐ. 0-50) நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள பெருநகரங்கள் எல்லாம் ஊரடங்கு உத்தரவால் அடைபட்டிருக்கின்றன. தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள், வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருப்பதன் எதிரொலியாகவே காற்றின் மாசு குறைந்திருக்கிறது” என்கிறார்.

செய்தி என்ன?

மாசுபாடு குறைந்து, சுவாசிக்கத் தகுந்த காற்றுத் தரம் எட்டப்பட்டிருப்பதை ஆரோக்கியமான சமிக்ஞையாக சூழலியலாளர்கள் கருதுகின்றனர். தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் உயர்ந்திருப்பதையும் கான்பூரில் போதுமான தரத்துடன் இருப்பதையும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிசெய்துள்ளது. 92 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் காற்றின் தரம் ‘நல்ல' என்பதிலிருந்து 'போதுமான தரம்' என்னும் நிலையில் இருப்பதும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 39 நகரங்களில் காற்று 'நல்ல' நிலையில் இருப்பதாகவும், 51 நகரங்களில் 'போதுமான தரத்தில்' இருப்பதாகவும் பதிவாகியுள்ளது.

‘சேஃப் ஃபார் ஏர்' என்னும் தன்னார்வ அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜோதி பாண்டே லவாகரே, “காற்றில் மாசு குறைந்திருப்பதும் நிர்மலமான நீல வானமும் நமக்குச் சொல்லும் செய்தி, நவீன வளர்ச்சி - நாகரிகத்தின் பெயரால் காற்றில் மாசை இனிமேலும் அதிகரிக்காதீர்கள் என்பதுதான். இந்த மாற்றத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து மாசை குறைவாக வெளிப்படுத்தும் மாற்றுத் தொழில்நுட்பங்களுக்கு தங்களுடைய செயல்பாடுகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்" என்றார்.

SCROLL FOR NEXT