குடியரசுத் தலைவரின் புதிய செயலர்
ஏப்.20: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் புதிய செயலாளராக கபில் தேவ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை நியமனக் குழு அவரின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. குடியரசுத் தலைவரின் செயலாளராக இருந்த சஞ்சய் கோத்தாரி, பிப்ரவரி மாதம் ஊழல் ஒழிப்புத் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டதால், புதிய செயலாளராக கபில் தேவ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
குணமடையும் சதவீதம் 17.47
ஏப்.21: நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குணமடையும் சதவீதம் 17.47 ஆக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் 23 மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 61 மாவட்டங்களில் 14 நாட்களாகப் புதிதாக நோய்த்தொற்று ஏற்படவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஜி20 விவசாய அமைச்சர்கள் மாநாடு
ஏப்.21: ஜி20 நாடுகளைச் சேர்ந்த விவசாய அமைச்சர்களின் காணொலி வழி மாநாடு சவூதி அரேபியா தலைமையில் நடைபெற்றது. உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்து ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றவிருப்பதாக இந்நாடுகள் அறிவித்திருக்கின்றன. இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்துகொண்டார். ஊரடங்கின்போது விவசாய நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்காக மத்திய அரசு எடுத்துவரும் செயல்பாடுகளை இந்த மாநாட்டில் அவர் பகிர்ந்துகொண்டார்.
அதிகரிக்கும் உணவு நெருக்கடி
ஏப்.22: ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம், உணவு நெருக்கடியைப் பற்றிய நான்காம் ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, உணவு நெருக்கடி 10 சதவீதம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 26.5 கோடிப் பேர் உணவுப் பாதுகாப்பின்மையை உணர்வதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 55 நாடுகளைச் சேர்ந்த 13.5 கோடிப் பேர் கடுமையான உணவு நெருக்கடியில் இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
15-ம் நிதி ஆணைய மாநாடு
ஏப்.23: நாட்டின் பொருளாதார ஆலோசனைக் குழுவான பதினைந்தாம் நிதி ஆணையம் கோவிட்-19விளைவுகளைப் பற்றி இரண்டு நாட்கள் காணொலி வழி மாநாட்டில் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், அரசுச் செலவினத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.
29 லட்சம் பேர் பாதிப்பு
ஏப்.27: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 29,99,699 ஆக உயர்ந்திருக்கிறது. 2,07,020 பேர் உயிரிழந்திருக் கிறார்கள். 8,81,561 பேர் நோயிலிருந்து மீண்டிருக் கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 27, 892 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள். 872 பேர் உயிரிழந் திருக்கிறார்கள். 6,185 பேர் நோயிலிருந்து மீண்டிருக் கிறார்கள். n தொகுப்பு: கனி n