திசைகாட்டி

சேதி தெரியுமா? - மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு

செய்திப்பிரிவு

தொகுப்பு: கனி

ஏப்.14: கரோனா வைரஸ் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 3 வரை நாட்டில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஏப்ரல் 20 வரை முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். நோய்த்தொற்று புதிதாகப் பரவாத மாவட்டங்களில் ஏப்ரல் 20-க்குப் பிறகு, சில தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வளர்ச்சி 1.9%

ஏப்.14: இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2020-ம் ஆண்டில் 1.9 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக, உலகப் பொருளாதாரம் 1930-களுக்குப் பிறகு எதிர்கொள்ளும் கடுமையான சரிவு இது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் வளர்ச்சி சதவீதமும் கடுமையாக இறங்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

நிதியை நிறுத்திய அமெரிக்கா

ஏப்.15: உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கிவந்த நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். கரோனா நோய்த்தொற்றை உலக சுகாதார நிறுவனம் சரியாகக் கையாளாததாலும், சீனாவுக்குச் சாதகமாகச் செயல்பட்டதாலும் அந்த நிறுவனத்துக்கு வழங்கிவந்த நிதியை நிறுத்துவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் 400-500 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.2,800 கோடி-ரூ.3,500 கோடி) உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா வழங்கிவந்தது.

ஐ.பி.எல். 2020 ரத்து

ஏப்.15: இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2020 போட்டிகள் இந்த ஆண்டு ரத்துசெய்யப்படுவதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. ஜூன் மாதம் நடத்துவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போட்டிகள், அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதிக மாவட்டங்களில் பாதிப்பு

ஏப்.15: நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்த பிறகு, மத்திய சுகாதார அமைச்சகம் கரோனா பரவல் தீவிரமாக இருக்கும் 170 ‘தீவிர பாதிப்பு’ (ஹாட்ஸ்பாட்) மாவட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத் ஆகிய ஆறு பெருநகரங்களும் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு, 22 ‘தீவிர பாதிப்பு’ மாவட்டங்களுடன் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 11 மாவட்டங்களுடன் ராஜஸ்தானும், மகாராஷ்டிரமும் இரண்டாம் இடத்தில் உள்ளன.

சரியும் ரூபாய் மதிப்பு

ஏப்.16: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.76.80 ஆகச் சரிந்துள்ளது. நாட்டில் கணிசமாக அதிகரித்துவரும் கரோனா வைரஸ் தொற்றே இந்தச் சரிவுக்குக் காரணம். அமெரிக்க டாலரை நோக்கி முதலீட்டாளர்கள் நகர்வதால், வளர்ந்துவரும் சந்தைகளின் பணமதிப்பு கடும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளன.

24 லட்சம் பேர் பாதிப்பு

ஏப். 20: உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,07,562 ஆக உயர்ந்திருக்கிறது. 1,65,082 பேர் பலியாகியிருக்கிறார்கள். 6,25,304 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள். இந்தியாவில் கரோனாவால் 17,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 560 பேர் பலியாகியிருக்கிறார்கள். 2,859 பேர் நோயிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT