தொகுப்பு: கனி
மார்ச் 20: சர்வதேச மகிழ்ச்சி நாளன்று, உலக மகிழ்ச்சி அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. 156 உலக நாடுகள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியலில், பின்லாந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா 144-ம் இடத்தில் இருக்கிறது. பின்லாந்தைத் தொடர்ந்து, டென்மார்க், சுவிட்சர்லாந்து ஆகியவை இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது.
440 கோடி பேருக்கு நீர்ப் பற்றாக்குறை
மார்ச் 22: உலகத் தண்ணீர் நாளன்று, 2050-ம் ஆண்டுக்குள் 350 கோடி முதல் 440 கோடி பேருக்குத் தண்ணீர் கிடைப்பது குறையும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. இவர்களில் 100 கோடிப் பேர் பெருநகரங்களில் வசிப்பவர்களாக இருப்பார்கள். இன்று உலகில் 220 கோடிப் பேர் பாதுகாப்பான குடிநீர் வசதி இல்லாமல் வாழ்ந்துவருவதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி மாற்றம்
மார்ச் 23: மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க.வின் சிவராஜ் சிங் சவுஹான் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். காங்கிரஸ் கட்சியின் 22 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முதல்வராக இருந்த கமல்நாத் மார்ச் 20 அன்று, தன் பதவியை ராஜினாமா செய்தார். சிவராஜ் சிங் சவுஹான் பதவியேற்றபின், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றிபெற்றார்.
21 நாட்கள் ஊரடங்கு
மார்ச் 24: கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் குறைப்பதற்காக இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஊரடங்கு உத்தரவை மக்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக மத்திய அரசு ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது.
உமர் அப்துல்லா விடுதலை
மார்ச் 24: பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா 232 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப் பிரிவு 370-ஐ 2019 ஆகஸ்டில் நீக்கியபோது, அம்மாநிலக் கட்சித் தலைவர்களைத் தடுப்புக் காவலில் வைத்தது. மற்றொரு முதல்வரான மெகபூபா முப்தி இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக்
மார்ச்.24: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த 2020 ஒலிம்பிக்-பாராலிம்பிக் போட்டிகள் கரோனா வைரஸ் தொற்றுப்பரவல் காரணமாக 2021 கோடைக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே தெரிவித்தார். சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தாமஸ் பாக்குடன் கலந்துரையாடிய பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார். 124 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றில், ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல்முறை.
கரோனா: 7.22 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
மார்ச் 25: கரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் முழுவதும் 7,22,034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றுநோயால் 33,972 பேர் பலியாகி இருக்கிறார்கள். 1,51,514 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் 1121 பேர் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். 95 இந்தியர்கள் நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.