திசைகாட்டி

வெற்றிக்கு வழிகாட்டும் ஜெஸ்ஸிகா

செய்திப்பிரிவு

யாழினி

மாணவர்களின் படிப்புத் திறனை அதிகரிக்க யூடியூப்பில் பல அலைவரிசைகள் செயல்பட்டுவருகின்றன. படிப்புத்திறனுடன் சேர்த்து மாணவர்கள், இளைஞர்கள் அன்றாடம் ஊக்கத்துடன் செயல்படுவதற்கும், மனநலனை மேம்படுத்திக்கொள்வதற்கும் ஆலோசனைகளை வழங்கிவருகிறது ‘ஸ்டடி வித் ஜெஸ்’ (Study with Jess) என்ற யூடியூப் அலைவரிசை.

2015-ம் ஆண்டிலிருந்து யூடியூப்பில் இயங்கிவரும் இந்த அலைவரிசையை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘யூடியூபர்’ ஜெஸ்ஸிகா ஹோல்ஸ்மேன் நிர்வகித்துவருகிறார். 4.2 கோடி சந்தாதாரர்களைக் கொண்டிருக்கும் இந்த அலைவரிசை, எளிமையாகப் படிப்பதற்கான பல்வேறு சுவாரசியமான உத்திகளை விளக்குகிறது.

கேள்விக்கென்ன பதில்

படிப்பதற்கான சரியான நேரம்? பாடப்புத்தகத்திலிருந்து படிக்கலாமா, வகுப்பில் எடுத்த குறிப்புகளை வைத்துப் படிக்கலாமா? தேர்வுக்குத் தயாராவது எப்படி? விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும்போது செய்ய வேண்டியவை, பணிவாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது எப்படி? எதிர்மறைச் சிந்தனையைத் தவிர்ப்பது எப்படி என்பது உள்ளிட்ட பல அம்சங்களை ஐந்திலிருந்து பத்து நிமிடக் காணொலிகளில் விளக்கியிருக்கிறார் ஜெஸ்ஸி.

கல்வி, பணிவாழ்க்கை மட்டுமல்லாம் நம்மை நாமே முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கான மனநல ஆலோசனைகளையும் பல்வேறு காணொலிகளில் இவர் வழங்கியிருக்கிறார் .

ஊக்கமூட்டும் வழிகாட்டி

பிரபல யூடியூப்பராக இருப்பதோடு எழுத்தாளராகவும் இருப்பதால் வாழ்க்கைக்கு உதவும் பல சுயமுன்னேற்ற நூல்களையும் இந்த அலைவரிசையில் இவர் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அன்றாடப் பணிகளை ஊக்கத்துடன் மாணவர்கள் எப்படிச் செயல்படுத்தலாம், நீண்ட நேரம் தொய்வில்லாமல் முழு ஆற்றலுடன் இயங்குவது எப்படி? மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடாமல் இயங்குவது எப்படி? சமூக ஊடகங்களில் ஆரோக்கியமாக எப்படி இயங்குவது? பிடித்த பணியைக் கண்டறிவது எப்படி என்பன போன்ற தலைப்புகளில் இந்த அலைவரிசையில் 290-க்கும் மேற்பட்ட காணொலிகள் இடம்பெற்றுள்ளன.

செயல்திறனுடனும் ஊக்கத்தை இழக்காமல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த அலைவரிசை ஒரு சிறந்த வழிகாட்டி.

அலைவரிசையைப் பார்க்க: https://bit.ly/2UaCF1X

SCROLL FOR NEXT