திசைகாட்டி

சேதி தெரியுமா? - உலகின் சிறந்த தலைவர்

செய்திப்பிரிவு

தொகுப்பு: கனி

மார்ச் 5: ‘பிபிசி உலக வரலாறுகள் இதழ்’ நடத்திய வாக்கெடுப்பில், 38 சதவீத வாக்குகளைப் பெற்று 19-ம் நூற்றாண்டு சீக்கிய அரசர் மகராஜா ரஞ்சித் சிங், உலகின் சிறந்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் 1801-1839 வரை, நாற்பது ஆண்டுகள் பஞ்சாப் மாகாணத்தை ஆட்சி செய்துள்ளார். ஆப்ரிக்க சுதந்திரப் போராட்ட வீரர் அமில்கர் கப்ரல் இரண்டாம் இடத்தையும், பிரிட்டானிய பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

சூழலியல் குற்றங்களில் முதலிடம்

மார்ச் 6: சுற்றுச்சூழல் குற்றங்களில் நாட்டில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் இருப்பதாக ‘2018 தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை’ தெரிவிக்கிறது. 2014-16-ம் ஆண்டுகளுக்கிடையில் நடைபெற்ற சுற்றுச்சூழல் குற்றங்களில் 40 சதவீதம் ராஜஸ்தானில் நடைபெற்றுள்ளன. இந்த ஆண்டுகளுக்கு இடையில், நாட்டில் 15,723 சுற்றுச்சூழல் குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

ஆசியாவின் செல்வந்தர்

மார்ச் 9: கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்பட்ட பங்குச்சந்தைச் சரிவின் காரணமாக, ஆசியாவின் செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். சீன நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜாக் மா ரூ.3.11 லட்ச கோடி மதிப்புடன் ஆசிய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ஆயுத இறக்குமதி இரண்டாம் இடம்

மார்ச் 9: உலகில் ஆயுத இறக்குமதியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பதாகச் சர்வதேச ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி மையத்தின் (SIPRI) அறிக்கை தெரிவிக்கிறது. உலகின் ஆயுத இறக்குமதியில் சவூதி அரேபியா, இந்தியா, எகிப்து, ஆஸ்திரேலியா, சீனா ஆகியவை முறையே முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன. இந்த ஐந்து நாடுகளும் உலகின் 36 சதவீத ஆயுதங்களை இறக்குமதி செய்துள்ளன.

உலகம் முழுவதும் பரவும் நோய்

மார்ச். 11: கரோனா வைரஸை உலகம் முழுவதும் பரவும் நோயாக (Pandemic) உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் 1,69, 907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, கரோனா வைரஸால் 6,520 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். நோய் பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை - 77,776. இந்தியாவில் இதுவரை 114 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என்.பி.ஆர். பணி நிறுத்திவைப்பு

மார்ச் 12: தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் (NPR) பணிகளை நிறுத்தி வைப்பதாகத் தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். தேசிய குடிமக்கள் பதிவேடு விண்ணப்பத்தில், புதிதாகச் சேர்த்திருக்கும் மூன்று கேள்விகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்கும்வரை, தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகளை நிறுத்திவைப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஃபரூக் அப்துல்லா விடுதலை

மார்ச் 13: பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஏழு மாதங்களாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா விடுதலை செய்யப் பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கிவந்த சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 அன்று அம்மாநில அரசியல் தலைவர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

ம.பி.யில் நம்பிக்கை வாக்கெடுப்பு

மார்ச் 13: மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியாவும் அவருடைய ஆதரவாளர்களான 22 சட்டபேரவை உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமாவை சட்டப்பேரவையில் மார்ச் 10 அன்று அளித்தனர். இதைத் தொடர்ந்து, ஜோதிராதித்ய சிந்தியா பா.ஜ.க.வில் இணைந்தார். மத்தியப் பிரதேச முதல்வர் கமல் நாத் ஆளுநரைச் சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

SCROLL FOR NEXT