திசைகாட்டி

சோமலெ நூற்றாண்டு: தென்னாட்டின் மார்கோபோலோ

ஆதி

ஏ.கே. செட்டியார், தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், நெ.து. சுந்தரவடிவேலு, மணியன் உள்ளிட்டோர் தமிழ்ப் பயண இலக்கியத் துறையில் கவனம் செலுத்திய முதல் தலைமுறையினராகத் திகழ்ந்தனர். இந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர் சோமலெ.

ஏ.கே. செட்டியார் எழுதிய பயண நூல்களால் உத்வேகம் பெற்று, பயண நூல்களைப் படைக்கத் தொடங்கியவர் அவர். சோம.லெட்சுமணன் என்ற தன்னுடைய பெயரின் முதலெழுத்துகளையே, புனைப்பெயராகப் பயன்படுத்திப் பிரபலமடைந்தார். சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் 1921 பிப்ரவரி 11 அன்று பிறந்த அவருடைய நூற்றாண்டு கடந்த மாதம் தொடங்கியது. சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை சார்பில் சோமலெ நூற்றாண்டு விழா தேசியக் கருத்தரங்கம் சமீபத்தில் நடைபெற்றது.

எழுத்தாளராகத் திரும்பினேன்

சோமலெ, இளங்கலைப் பொருளியலும் மும்பை ஹாரிமன் இதழியல் கல்லூரியில் இதழியலும் படித்திருந்தார். பிற்காலத்தில் குடும்பத் தொழிலான ஏற்றுமதி-இறக்குமதியில் ஈடுபட்டார். இதற்காக உலக நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. தொழில் தேவைக்காக ஆயிரக்கணக்கான கி.மீ. பயணம்செய்த அதேநேரம், அந்த அனுபவங்களை மற்றவர்களுக்கும் பயன்தரும் வகையில் எழுதத் தொடங்கினார். ‘வணிகனாகப் போனேன், எழுத்தாளராகத் திரும்பினேன்’ என்று அவரே இதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

‘அமுதசுரபி’ இதழில் அவருடைய முதல் கட்டுரை வெளியானது; ‘நான் கண்ட வெளிநாட்டுக் காட்சிகள்’ அவருடைய முதல் நூல். அமெரிக்கா, கனடா, ஸ்வீடன், ஃபிரான்ஸ், ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளைப் பற்றித் தனித்தனிப் பயண நூல்களை எழுதியுள்ளார். அந்தக் காலத்தில் அதிகக் கவனம் பெறாத எத்தியோப்பியா, தென்னாப்பிரிக்கா, கானா, நைஜீரியா, சூடானும் காங்கோவும் உள்ளிட்ட 12 நூல்களை ஆப்பிரிக்க நாடுகள் வரிசையில் எழுதியுள்ளார்.

பயண நூல்களில் அந்தந்த நாட்டு மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம் போன்றவற்றுடன் தொழில், கல்வி, வேளாண்மை, உணவு, இதழியல், வங்கித் துறை சார்ந்த தகவல்களையும் விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். வெளிநாடுகளில் தங்கள் நாட்டு மரபுப் பெருமைகளைப் பாதுகாக்கப் பெரும் தொகையைச் செலவிடுதையும் நம் நாட்டில் அதுபோல் செய்யப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாவட்டக் களஞ்சியங்கள்

எந்த ஊர், எந்த நாடாக இருந்தாலும் அவருடைய கவனமெல்லாம் அந்நாட்டு மக்கள் மீதுதான் இருந்தது. வெளிநாடுகளுக்கு இணையாகத் தமிழகம் பற்றியும் எழுதியுள்ளார். 1960-களிலேயே அன்றைய பிரிக்கப்படாத தமிழக மாவட்டங்களான சேலம், கோவை, குமரி, தஞ்சை, வடஆர்க்காடு, தென்னார்க்காடு, நெல்லை, செங்கல்பட்டு, ராமநாதபுரம், மதுரை ஆகியவற்றைப் பற்றி விரிவான நூல்களை (பாரி நிலையம் வெளியீடு) எழுதியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த புகழ்பெற்ற ஆளுமைகளான தமிழறிஞர் தெ.பொ.மீ., மு.வரதராசன், சி.சுப்ரமணியம், மன்னர் சேதுபதி உள்ளிட்டோரிடம் அணிந்துரை பெற்று வெளியிட்டது சோமலெயின் தனிமுத்திரை.

இன்றைக்கு இணையத்தைத் திறந்தால் தகவல் கொட்டுகிறது. 60 ஆண்டுகளுக்குமுன் ஒரு மாவட்டத்தை மையப்படுத்தித் தகவல்களைத் திரட்ட சோமலெ கடுமையான சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய நூல்கள் 50களின் பிற்பாதியில் தொடங்கி, அதற்கடுத்த 20 ஆண்டுகளில் எழுதப்பட்டவை என்பதைக் கணக்கில் கொண்டால், அவருடைய எழுத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். தமிழில் பயணம் அடிப்படையிலான 42 நூல்களையும், ஆங்கிலத்தில் 6 நூல்களையும் எழுதியுள்ளார்.

மலைக்கவைக்கும் எழுத்து

‘இமயம் முதல் குமரி வரை’ என்ற நூலை எழுதியுள்ள சோமலெ, தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்காக வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்தார். மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், டெல்லி ஆகிய வட மாநிலங்களில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறை, சமூகம், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ‘வட மாநிலங்களில் தமிழர்’ என்ற நூலாக அது பிற்பாடு வெளியானது.

நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ‘தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்’ நூல், கல்விப்புல மானிடவியல் அடிப்படையில் அமைந்திருக்காவிட்டாலும், பண்பாடு சார்ந்த அடிப்படைத் தகவல்களைத் தொகுத்துத் தந்துள்ள குறிப்பிடத்தக்க நூல். இந்த நூல் ஆங்கிலத்திலும் (Folklore of Tamilnadu) மற்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சோமலெயின் முயற்சியால்தான் பல்கலைக்கழகம், பதிவாளர் போன்ற தமிழ்ச் சொற்கள் புழக்கத்துக்கு வந்தன. அத்துடன் வங்கி (Bank), உணவுப் பட்டியல் (Menu), தொலைக்காட்சி (TV) உள்ளிட்ட பல புதிய தமிழ்ச் சொற்களை சோமலெயே அறிமுகப்படுத்தியும் உள்ளார். 1986 நவம்பர் 4-ல் மறையும்வரை அவர் மேற்கொண்ட எழுத்துப் பணியை, இன்றைக்குப் பார்க்கும்போது மலைப்பாகத்தான் இருக்கிறது.

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

SCROLL FOR NEXT