பிப்.23: நாட்டின் தலைநகர் டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மூன்று நாட்கள் நடைபெற்ற வன்முறையில் 42 பேர் பலியாகியிருக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அமைதிவழியில் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறை நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக 148 குற்றப்பத்திரிகைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 630 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஐந்தாம் பெரிய பொருளாதாரம்
பிப்.23: சர்வதேச நாணய நிதியத்தின் அக்டோபர் உலகப் பொருளாதாரப் பார்வையின்படி, உலகின் ஐந்தாம் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியா ஐந்தாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை உலகின் முதல் நான்கு பெரிய பொருளாதார நாடுகளாக இருக்கின்றன.
மாநிலங்களவைத் தேர்தல்
பிப். 25: 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்தத் தேர்தல், 2020 ஏப்ரலில் ஓய்வுபெறும் 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 மாநிலங்களவை உறுப்பினர் களின் இடங்களுக்கு நடைபெற விருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மார்ச் 26 அன்றே நடைபெறுகிறது.
இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்
பிப்.25: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டு நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தார். இந்த வருகையின்போது, ரூ. 21,000 கோடி மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் இரண்டு நாடுகளுக்கிடையில் கையெழுத்தாகின. இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ஹோஸ்னி முபாரக் காலமானார்
பிப்.25: எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 91. ஜனநாயக ஆதரவு இயக்கமான ‘அரேபிய வசந்த’ புரட்சியால் வெளியேற்றப்படும்வரை, முப்பது ஆண்டுகள் அவர் எகிப்து அதிபராகப் பதவிவகித்துள்ளார்.
உலகச் செல்வந்தர்கள் பட்டியல்
பிப்.26: ‘2020 ஹுருன் உலகளாவிய செல்வந்தர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகச் செல்வந்தர்களின் இந்தப் பட்டியலில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் முதல் இடத்தில் உள்ளார். பிரெஞ்சு ‘எல்விஎம்எச்’ நிறுவனத் தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாம் இடத்திலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர். இந்தப் பட்டியலில் ஒன்பதாம் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
மரியா ஷரபோவா ஓய்வு
பிப்.26: ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதாகும் மரியா ஷரபோவா, ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட தீவிரமான காயங்களால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா - மியான்மர் ஒப்பந்தம்
பிப்.27: மியான்மர் அதிபர் உ வின் மைன்ட் (U Win Myint) இந்தியாவுக்கு நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக வருகை தந்தார். இந்த வருகையின்போது, இந்தியா - மியான்மர் இடையே ஆற்றல், உள்புற கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பத்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. n தொகுப்பு: கனி n