திசைகாட்டி

சேதி தெரியுமா? - இந்தியப் பறவைகளின் நிலை

செய்திப்பிரிவு

தொகுப்பு: கனி

பிப்.17: குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற ஐ.நா.வின் 13-ம் வலசை போகும் பறவை இனங்கள் மாநாட்டில், ‘2020-இந்தியப் பறவைகளின் நிலை’ என்ற தலைப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், ஆராய்ச்சிக்கு எடுத்துகொள்ளப்பட்ட 867 பறவை இனங்களுமே அருகி வருவது தெரியவந்துள்ளது. இவற்றில், 101 பறவையினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.

அதிகம் பேசப்படும் மொழிகள்

பிப்.18: உலகின் அதிகமாகப் பேசப்படும் 7,111 வாழும் மொழிகளின் ஆண்டறிக்கையை ‘எத்னோலாக்’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உலகில் 113.2 கோடிப் பேர் பேசும் மொழியாக ஆங்கிலம் முதலிடத்திலும், 111.7 கோடிப் பேர் பேசும் மொழியாக மண்டாரின் (சீன மொழி) இரண்டாம் இடத்திலும், 61.5 கோடிப் பேர் பேசும் மொழியாக இந்தி மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. 22.8 கோடிப் பேர் பேசும் வங்க மொழி ஏழாம் இடத்திலும், 8.1 கோடிப் பேர் பேசும் தமிழ் மொழி பத்தொன்பதாம் இடத்திலும் இருக்கின்றன.

16-ம் இடத்தில் ஐ.ஐ.எஸ்.சி

பிப்.18: டைம்ஸ் உயர் கல்வி தரவரிசைப் பட்டியல் லண்டனில் வெளியாகியுள்ளது. ‘வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் பல்கலைக்கழகத் தரவரிசை – 2020’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்தப் பட்டியலில், முதல் 100 இடங்களில், இந்தியாவின் 11 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன.

47 நாடுகளைச் சேர்ந்த 533 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில், 16-ம் இடத்தை பெங்ளூரு இந்திய அறிவியல் நிறுவனம் (IISc) பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஒட்டுமொத்தமாக 56 இந்தியப் பல்கலைக்கழங்கள் இடம்பெற்றுள்ளன.

லாரியஸ் விளையாட்டுத் தருண விருது

பிப். 18: லாரியஸ் விளையாட்டுத் தருண விருது (2000-2020) சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் இந்த விருது விழா நடைபெற்றது. 2011-ல், இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றபோது, அணியினர் சச்சினைத் தோளில் தூக்கி மைதானத்தை வலம்வந்து வெற்றியைக் கொண்டாடினர். இந்தத் தருணத்தைச் சிறந்த விளையாட்டுத் தருணமாக லாரியஸ் தேர்ந்தெடுத்துள்ளது.

வியாழனில் அதிக நீர் உள்ளது

பிப். 18: வியாழன் கோளின் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளில் 0.25 சதவீதம் நீர் இருப்பதாக 2011-ல் நாசா அனுப்பிய ஜுனோ (Juno) திட்டத்தின் தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ‘நேச்சர் அஸ்ட்ரானமி’ இதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வு முடிவுகளால், முன்னர் நினைத்ததைவிட வியாழனில் அதிக நீர் இருப்பது தெரியவந்துள்ளது.

மாற்று மருத்துவப் படிப்புகளுக்கும் நீட்

பிப்.20: மாற்று மருத்துவப் படிப்புகளான ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோ (AYUSH) ஆகியவற்றின் இளநிலை மாணவர் சேர்க்கைக்கும் நீட் நுழைவுத் தேர்வு அவசியம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

பிப். 20: காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக (PSAZ) அறிவிக்கும் மசோதாவைத் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவில், திருச்சி, அரியலூர், கரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் இணைக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT