திசைகாட்டி

சேதி தெரியுமா? - நோவாக் ஜோக்கொவிச் வெற்றி

செய்திப்பிரிவு

தொகுப்பு: கனி

பிப்.2: ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை எட்டாம் முறையாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கொவிச் கைப்பற்றியுள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முதல் போட்டி இது. விம்பிள்டன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகியவை மற்ற மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகள்.

40-ம் இடத்தில் இந்தியா

பிப்.5: உலகளாவிய புதுமைக் கொள்கை மையம், சர்வதேச அறிவுசார் சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற 53 நாடுகளில், நான்கு இடங்கள் பின்னுக்குச் சென்ற இந்தியா 40-ம் இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சுவீடன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை முறையே முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ளன.

மக்கள் சேவைத் திட்டம்

பிப்.5: கர்நாடக மாநில அரசு, மக்கள் சேவைத் (ஜனசேவகா) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசின் சேவைகளை மக்கள் வீட்டிலிருந்தே பெற முடியும் என அறிவித்துள்ளது கர்நாடக அரசு. சில சேவைகளை டிஜிட்டல் சேவைகளாக மாற்றவும் அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

233 தேசத்துரோக வழக்கு

பிப்.5: 2014 முதல் 2018 வரை, நாட்டில் 233 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷண் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்தார். அதிகபட்சமாக அசாம், ஜார்கண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களில் 37 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. 2018-ல் 70 பேர், 2017-ல் 51 பேர், 2016-ல் 35 பேர், 2015-ல் 30 பேர், 2014-ல் 47 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மசோதாவுக்கு எதிரான தீர்மானம்

பிப்: 5: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை மத்தியப் பிரதேச அமைச்சரவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாகக் கூறி, அம்மாநில அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. கேரளம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசமும் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம்

பிப். 5: தொழிலாளர் கணக்கெடுப்பின்படி, 2017-18-ம் ஆண்டின் தொழிலாளர் வேலைவாய்ப்பு சதவீதம் 36.9 ஆகவும், வேலைவாய்ப்பின்மை சதவீதம் 6.1 ஆகவும் இருப்பதாகத் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

காவல் நீட்டிப்பு

பிப். 6: ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல் அமைச்சர்கள் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகிய இருவர் மீதும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (PSA) வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், எந்தவொரு விசாரணையும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் காவலில் வைக்க அனுமதிக்கிறது. எதிர்க் கட்சிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

‘சாகர் கவச்’ பாதுகாப்பு ஒத்திகை

பிப். 6: ஆண்டுதோறும் கடலோரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 48 மணிநேரம் நடைபெறும் ‘சாகர் கவச் ஆப்ரேஷன்’ தமிழ்நாட்டில் நடைபெற்றது. தரைமார்க்கமாகவும், கடல்மார்க்கவும் தீவிரவாதிகள் ஊடுருவலை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான முன்னோட்டமாக இந்த ‘சாகர் கவச்’ ஒத்திகை ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT