ஹமிதா நஸ்ரின்
ரோஜா செடி முள்ளைக் கொண்டுள்ளது என்று குறை சொல்லவும் முடியும், முள்செடி அழகிய ரோஜாப்பூவைக் கொண்டுள்ளது என்று சந்தோஷப்படவும் முடியும். சந்தோஷமும் குறையும் நம் பார்வையைப் பொருத்ததே! அந்தப் பார்வை நம் நம்பிக்கையைச் சார்ந்தே இருக்கிறது. சந்தோஷம் தரக்கூடியது நன்னம்பிக்கை, துன்பம் தரக்கூடியது அவநம்பிக்கை.
ஆச்சரியம் என்னவென்றால், 1970வரை நன்னம்பிக்கை ஒரு மனநலக் குறைபாடாக, பக்குவமற்ற எண்ணத்தின் அறிகுறியாக அல்லது பலவீனக் குணமாகக் கருதப்பட்டது. 1970-களின் இறுதியில் மார்க்ரெட் மாட்லின், டேவிட் ஸ்டாங் போன்ற உளவியலாளர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மூலம், நன்னம்பிக்கை பற்றிய இந்தக் குறையான பார்வையை மாற்றி அமைத்தனர்.
ஏன் நன்னம்பிக்கை கொள்ளவேண்டும்?
தோல்விகளும் பின்னடைவுகளும் சறுக்கல்களும் இல்லாத வாழ்க்கையே கிடையாது. தோல்விகளில் துவளாமல் இருக்கவும், பின்னடைவுகளில் பின்தங்காமல் இருக்கவும், சறுக்கல்களில் சுணங்கிப் போகாமல் இருக்கவும் இந்தத் தளரா நம்பிக்கை மிகவும் அவசியம். இந்த நம்பிக்கையானது பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தித்து அதைத் தீர்க்கும் தெளிவான பார்வையை நமக்கு அளிக்கிறது. அது மட்டுமின்றி இந்த நம்பிக்கையானது பின்னடைவுகளில் உள்ள நல்லவற்றை மட்டும் பார்க்கும் திறனை நமக்கு அளிக்கிறது.
நன்னம்பிக்கையை எப்படி வளர்க்கலாம்?
1. சின்ன சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷப்பட்டு, அதைத் தந்த வாழ்க்கைக்கு நன்றி சொல்லுதல்.
2. உதவி தேவைப் படுபவர்களுக்குத் தாமாக முன்வந்து உதவுதல்.
3. புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது.
4. நம்பிக்கையுள்ள மனிதர் களுடன் நேரம் செலவழித்தல்.
5. கடந்துபோன நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் அதே வேளையில், அதை நினைத்து வருந்துவதைத் தவிர்த்தல். ஒவ்வொரு நாளையும் புதிதாக அணுகுதல்.
நம்பிக்கையே வாழ்க்கை
நிரந்தரமில்லை என்பதே நம் வாழ்வில் நிரந்தரம். எந்த இன்னலும் பிரச்சினையும் தோல்வியும் நம்முடன் நிரந்தரமாகத் தங்கப்போவதில்லை. எனவே தோல்வியின்போது துவளவும் வேண்டாம், வெற்றியின் போது அளவுக்கு அதிகமாகத் தலைக்கனம் கொண்டு துள்ளவும் வேண்டாம். விக்டர் ஹியூகோ, தன் புகழ்பெற்ற லே மிசரபிள் (Les Miserables) என்ற புத்தகத்தில் சொல்வதுபோல் ‘மிகவும் இருண்ட இரவு முடிந்து, சூரியன் கண்டிப்பாக உதித்தே தீரும்’.