எஸ்.எஸ்.லெனின்
பொறியியல் கல்லூரிகள் மூடுவிழா காண்கின்றன; பொறியியல் பட்டதாரிகளுக்கு உரிய பணி வாய்ப்பு இல்லை; மாணவர்கள் மத்தியில் பொறியியல் படிப்பில் ஆர்வம் குறைகிறது. இப்படி ஏராளமான தகவல்கள் பரவிவருகின்றன. இவற்றைக் கண்டு பொறியியல் உயர்கல்வியின் மீது உண்மையான ஆர்வம் கொண்ட மாணவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை.
மாறும் தொழில்நுட்பங்கள் மற்றும் பொறியியல் துறையின் தேவை உள்ளிட்ட போக்குகளை அவதானித்து, அதற்கேற்ப என்ன படிக்கப் போகிறோம், அவற்றை எங்கே படிக்கப் போகிறோம் என்பதே முக்கியமாகிறது. அதற்கான சிறு வழிகாட்டுதலாக, பொறியியல் துறையில் அடுத்து வரும் ஆண்டுகளில் வரவேற்புப் பெற வாய்ப்புள்ள துறைகளை இங்கே அறிந்துகொள்ளலாம்.
இவற்றை அலசி ஆராய்ந்து, தங்களது தனிப்பட்ட ஆர்வத்தை உரைகல்லாக்கி, விருப்பத் துறைகளைச் சுயமாகத் தீர்மானிப்பது அவசியம். அதேபோன்று உரிய கட்டமைப்பு வசதிகள் அடங்கிய தரமான கல்வி நிலையங்களில் சேர்ந்து அவற்றைப் பயில்வதும் அவசியம்.
ஏரோஸ்பேஸ்
விமானங்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், விண் ஏவூர்திகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி அவை தொடர்பான ஆராய்ச்சி, வடிவமைப்புகளின் தொழில்நுட்பங்களுடன் தொடர்புடைய பொறியியல் உயர்கல்வி ஏரோஸ்பேஸ் இஞ்சினீயரிங் ஆகும். விண்வெளித் துறையில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகும் தேசத்தில் அவை தொடர்பான ஏராளமான வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. விமான வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி, விமான உற்பத்தி, சிமுலேஷன் ஆய்வு, செயற்கைக்கோள் மற்றும் விண்வெளிப் பயன்பாடுகள் எனப் பல்வேறு பொறியியல் துறைகளில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பு முடித்தவர்களுக்குப் பணி வாய்ப்புகள் உள்ளன. இஸ்ரோ, HAL, DRDO, ஏர் இந்தியா மற்றும் சிவில் ஏவியேஷன் துறை உட்படப் பல்வேறு உயர் நிறுவனங்கள் அவற்றை வழங்கும்.
ஆட்டோமோட்டிவ் டிசைனிங்
மெக்கானிக்கல் பொறியியல் துறை கால மாற்றத்துக்கு ஏற்றவாறு ஏராளமான திசைகளில் புதிதாகக் கிளைத்துள்ளது. அவற்றில் முக்கியமானது ஆட்டோமோட்டிவ் டிசைன். ஆட்டோமொபைல் துறை சார்ந்த வடிவமைப்பு, பராமரிப்பு, உற்பத்தி, பரிசோதனை, ஆராய்ச்சி உள்ளிட்ட பரந்த துறைகளில் பொறியியல் பட்டதாரிகள் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளலாம். வாகன உற்பத்தித் தொழிலகங்கள், வடிவமைப்புக் கூடங்கள், தொழில்நுட்ப ஆலோசனை, தரம் மற்றும் மேம்பாடு என வேலைவாய்ப்பும் இதில் விரவிக் கிடக்கின்றன.
கணினி அறிவியலுடன் இணைந்த துறைகள்
ஐடி துறையின் சரிவு குறித்த அச்சம், அவற்றுக்கான படிப்புகளில் ஆர்வம் குறையக் காரணமாகிறது. வெறுமனே கணினி அறிவியல் மட்டும் பயிலாது அதனுடன் இணைந்த வேறு பல திறன்சார் துறைகளையும் சேர்ந்து படிப்பது ஐடி துறையின் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் இதர பொறியியல் துறைகளில் கால்பதிக்க உதவும். உதாரணத்துக்கு, கணினி அறிவியல் மற்றும் பொறியியலுடன் இணைந்த பிசினஸ் அனலிடிக்ஸ் மற்றும் ஆப்டிமைசேஷன் அல்லது ஓப்பன் சோர்ஸ், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், பிக் டேட்டா எனத் தனித்திறன் துறைகளின் பங்கு நீள்கிறது.
கணினி அறிவியலுடன் பிசினஸ் அனலிடிக்ஸ் பயில்வோருக்கு அடுத்த தலைமுறையின் பொருளாதாரம் மற்றும் வணிகம் சார்ந்த வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஓபன் சோர்ஸ் சேர்த்து படிப்பவர்களுக்கு வழக்கமான மென்பொருள் மற்றும் அப்ளிகேஷன் மேம்பாடும் மற்றும் டெஸ்டிங் மட்டுமன்றி நிரல் வடிவமைப்பின் புதிய தளங்கள் தங்களைப் பொருத்திக்கொள்ள உதவும். பெருகும் நகரமயமாக்கம், ஸ்மார்ட் சிட்டி உருவாக்கம் உள்ளிட்ட திட்டங்களால், இண்டர்நெட் ஆப் திங்ஸ் சேர்த்து பயில்வோருக்கான தேவை அதிகரித்துள்ளது.
ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ்
இயற்கை மற்றும் மனித பிழைகளால் நேரும் பேரிடர்கள் தொடர்பான ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் துறை வளர்ச்சியின் பாதையில் உள்ளது. இத்துறையில் தற்போதைக்கு வெளிநாட்டுத் தொழில்நுட்ப உதவிகளையே பேரளவு சார்ந்திருக்கிறோம். அவற்றிலிருந்து விலகி சுயசார்பை நோக்கி தேசம் நகர்ந்துவரும் சூழலில், அடுத்து வரும் ஆண்டுகளில் ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் மற்றும் ரிமோட் சென்சிங் தொடர்பான பொறியியல் மற்றும் அறிவியல் படித்தோர் அதிக அளவில் தேவைப்படுவார்கள். பேரிடர்களை முன்கூட்டியே கண்டறியும் சவால் மிக்க பணி வாய்ப்பு சுவாரசியமும் சேர்ந்ததாகும். கூகுள் போன்ற பெரு நிறுவனங்களும் அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனங்களும் உள்நாட்டுப் பணி வாய்ப்புகளை வழங்குகின்றன.
ரோபோட்டிக்ஸ் ஆட்டோமேஷன்
இது, வடிவமைத்தல், கட்டமைப்பு, செயல்பாடு, பயன்பாடு சார்ந்த தானியங்கிகள் மற்றும் உபகரணங்கள் குறித்த படிப்பாகும். கணினியியல், மின்னணுவியல் மற்றும் மெக்கானிகல் துறைகளில் கூட்டாக ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு ஏற்ற துறையாகும். விண்வெளி ஆய்வு, வாகன மற்றும் பிற இயந்திரங்களின் தானியங்கி உற்பத்தி உட்படப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு உண்டு. ஏட்டுக் கல்விக்கு அப்பால் சுயமான ஆர்வம் கொண்டவர்களால் இத்துறையில் ஜொலிக்க முடியும்.
சூழலியல் பொறியாளர்கள்
நீர், நிலம், காற்று எனச் சூழலியல் மாசின் உச்சத்தில் உலகம் இருப்பதால், பொறியியல் துறையின் அரவணைப்பு சுற்றுச்சூழலுக்கு அதிகம் தேவைப்படுகிறது. தொழில் துறைகள் அனைத்திலும் இயற்கை வளங்களை அளவாகப் பயன்படுத்துவது, சூழலியல் சீர்கெடாது கழிவுகளை வெளியேற்றுவது, மறுசுழற்சி செய்வது, அவை தொடர்பான ஆராய்ச்சி உள்ளிட்டவற்றில் சூழலியல் பொறியாளர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. அரசுத் துறைகள் மட்டுமன்றி பெரு நிறுவனங்கள், ஆய்வு அமைப்புகள், அரசு சாரா அமைப்புகளில் வேலைவாய்ப்புகள் உண்டு.
பட்டைதீட்டும் திறன்கள்
அடுத்து வரும் ஆண்டுகளில் பொறியியல் வேலைவாய்ப்பு சந்தை சந்திக்க உள்ள மாற்றங்களை அறிந்துகொள்வது, அவை சார்ந்த பொறியியல் பிரிவுகளை அடையாளம் காண உதவுவதுடன், அவற்றுக்கு அடிப்படையான கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் உதவும். பொறியியல் பணிகளில் பெரும்பாலானதைத் தானியங்கி இயந்திரங்கள் இனி பகிர்ந்துகொள்ளும். எனவே, எத்துறை மாணவரானாலும் ரோபாடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, தகவல்களை ஆய்ந்தறியும் பிக் டேட்டா, டேட்டா சயின்ஸ் குறித்தான திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம்.
ரோபோட்டுகள் மனிதர்களின் பணிவாய்ப்பைப் பறிக்கும் என்பது நிதர்சனமானாலும், அவற்றை இயக்குவது, செப்பனிடுவது, கண்காணிப்பது, இணைந்து செயல்படுவது போன்றவற்றுக்கு மனிதர்களின் தேவை தவிர்க்க முடியாதது. ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கையின்படி அடுத்து வரும் ஆண்டுகளில் Machine learning, Artificial intelligence, Internet of Things, Security, Blockchain, Intelligent Apps, Cloud implementation, Business Intelligence and Analysis உள்ளிட்டவற்றை மையமாகக்கொண்டே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகள் இனிவருங்காலத்தில் நடைபோடும். எனவே, பொறியியல் துறைகளின் மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் இவற்றில் உகந்த திறன்களின் அடிப்படையில் தங்களைப் பட்டை தீட்டிக்கொள்வது, பணிவாய்ப்புகளை உறுதிசெய்யும்.
தொடர்புக்கு: leninsuman4k@gmail.com.