திசைகாட்டி

புதிய கல்வி நூல்கள்

செய்திப்பிரிவு

வித்தியாசம்தான் அழகு

- ச. மாடசாமி

வெளியீடு - அகரம் அறக்கட்டளை அகரம் அறக்கட்டளை சார்பில் வெளியிடப்படும் ‘யாதும்’ இதழில் கல்வியாளர், பேராசிரியர் ச.மாடசாமி எழுதிய 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கல்விக்கும் சுற்றுச்சூழலுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளித்து ‘யாதும்’ இதழை புதுப் பொலிவுடன் கொண்டுவரும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் கல்வி சார்ந்து எழுதுபவர்களில் முக்கியமானவரான ச.மாடசாமியை கட்டுரை எழுதக் கேட்டுக்கொண்டதாக நூலின் பதிப்புரையில் ‘அகரம் பவுண்டேஷன்’ நிறுவனரும் நடிகருமான சூர்யா குறிப்பிடுகிறார்.

’கொஞ்சுவோம்...ஆனால் கூண்டுக்குள் இருக்கணும்’ என்று தலைப்பிடப்பட்ட முதல் கட்டுரை சுவிட்ஸர்லாந்து எழுத்தாளர் லூயிஸ் பேஷியோவின் ‘மகிழ்ச்சியான சிங்கம்’ (The Happy Lion) என்ற, 1954இல் வெளியான கதையை முன்வைத்து குழந்தைகளிடம் நாம் செலுத்தும் அன்பும் அக்கறையும் அவர்கள் சுதந்திரத்தை மறுப்பதாகவோ கட்டுப்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது என்பதை விளக்குகிறது.

இப்படி அனைத்துக் கட்டுரைகளும் உலகப் புகழ்பெற்ற குழந்தைகள் கதைகளை முன்வைத்து அவற்றில் வெளிப்படும் பெரியவர்களுக்கான நீதிகளை எடுத்தியம்புகின்றன. குழந்தைகள் கதைகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி அவற்றின் மூலம் குழந்தை வளர்ப்பு சார்ந்து பெரியவர்கள் குறிப்பாக பெற்றோர் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகளை இந்தக் கட்டுரைகள் விளக்குகின்றன.

கல்விக் கூடத்திலிருந்து விடுபடும் சமுதாயம்

- இவான் இல்லிச் (தமிழில்: ச.வின்சென்ட்)
வெளியீடு - எதிர் வெளியீடு

அமெரிக்க தத்துவவியலாளரும் கத்தோலிக்கப் பாதிரியாருமான இவான் இல்லிச் எழுதி 1971இல் வெளியான 'Deschooling Society’ என்ற நூலின் தமிழ் மொழியாக்கம். இந்த நூலை எழுதியதன் மூலமாகவே இவான் இல்லிச், உலகளாவிய கவனத்தைப் பெற்றார். வரலாறு தத்துவம் ஆகிய துறைகளில் பயிற்சியும் கல்வியாளராகச் செயல்பட்ட அனுபவமும் கொண்டவரான இல்லிச், இந்நூலில் நவீன காலத்தில் உலக நாடுகள் பின்பற்றும் கல்வி முறையை விமர்சனபூர்வமாக அணுகும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

குறிப்பாக நிறுவனமயமாக்கப்பட்ட கல்வி முறையை போதாமைகளை அதன் பயனின்மைக்கான சான்றுகளுடன் விளக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளார். நிறுவனமயமாக்கப்பட்ட கல்விக் கூடங்கள் உண்மையான கற்றலுக்கு பதிலாக நுகர்வு கலாச்சாரத்தையும் அதிகாரத்துக்கு அடிபணிந்து நடக்கும் சிந்தனையையுமே ஊக்குவிப்பதாக இல்லிச் விமர்சிக்கிறார். கல்வி, கல்விக்கூடங்கள் தொடர்பான புரட்சிகரமான சிந்தனைகளை இந்நூலில் முன்வைக்கிறார்.

ஒரு தரம் ரெண்டு தரம் மூன்று தரம்

- இரா.எட்வின்
வெளியீடு - வெற்றிமொழி வெளியீட்டகம்

பெரம்பலூரில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியராகப் பணியாற்றிவரும் இரா.எட்வின் ’காக்கைச் சிறகினிலே’, ‘தீக்கதிர்’ உள்ளிட்டஇதழ்களிலும் தனியாகவும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இந்த நூலின் கட்டுரைகள் பிரதானமாக கல்வி வணிகமயமாதல், தனியார்மயமாதல் மற்றும் அரசுப் பள்ளிகள் எண்ணிக்கை குறைவது ஆகியவற்றைப் பேசுகின்றன.

தலைப்புக் கட்டுரையான ‘ஒரு தரம் ரெண்டு தரம் மூணு தரம்’ தமிழக அரசுப் பள்ளிகள் தனியார் நிறுவனங்கள் ‘தத்தெடுக்க’க் கோருவதன் பின்னால் உள்ள அரசியலையும் அரசுப் பள்ளிகளை தத்தெடுக்க முன்வரும் தனியார் நிறுவனங்களின் வணிகக் கணக்குகளையும் விவரிக்கிறது. சமகாலக் கல்வித் துறை பிரச்சினைகள் மட்டுமல்லாமல் பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தக் கொள்கைகள் பற்றிய கட்டுரையும் உள்ளது. அது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரியாரின் பங்களிப்பை விளக்குகிறது. கல்வித் துறையைத் தாண்டி நாப்கின்கள், நீர் மேலாண்மை,. தமிழகத்தில் பாஜக வெற்றிபெற முடியாததன் காரணம் ஆகியவை தொடர்பான கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

‘இந்து தமிழ் திசை' வெளியீடுகள்

கேள்வி நேரம்

- ஆதி வள்ளியப்பன்

வெளியீடு - இந்து தமிழ் பொது அறிவுத் தேடல் உள்ளோருக்கும் போட்டித் தேர்வுகளில் வெல்ல பயிற்சி எடுப்பவர்களுக்கும் பொது அறிவுத் தகவல்களை வினா-விடை வடிவத்தில் கொடுப்பது தகவல்களை எளிதாக உள்வாங்கவும் நினைவில் வைத்திருக்கவும் உதவும். அந்த அடிப்படையில் பொது அறிவுத் தேடலில் ஈடுபடும் அனைத்துத் தரப்பினரின் தேவைகளையும் மனதில் கொண்டு இந்த கேள்வி-பதில் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. அரசியல்.

வரலாறு, கலை, அறிவியல், விளையாட்டு என பல்வேறு துறைகள் தொடர்பான பொது அறிவுத் தகவல்கள் கேள்வி-பதில்களாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நூலில் கொடுக்கப்பட்டுள்ள விடைகள் வெறும் தகவல்களை மட்டுமல்லாமல் நிகழ்வுகளின் பின்னணி, அவை தொடர்பான சுவாரசியமான அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளன. பொது அறிவுத் தகவல்களைத் தாண்டி வாசகர்களின் அறிவை விரிவாக்கிக்கொள்ளவும் சுவாரசியமாக வாசிக்கவும் இந்த நூல் உதவுகிறது.

பன்முக அறிவுத் திறன்கள்: ஓர் அறிமுகம் நீங்கள் (உண்மையில்) யார்?

- ம.சுசித்ரா

``எல்லோருக்கும் சமமாகக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது மிகச் சரியான அணுகுமுறை. ஆனால் எல்லோருக்கும் ஒரேமாதிரியான கல்வி என்பது சரியா?'' எனக் கேள்வி எழுப்பும் உளவியல் அறிஞர் கார்டனரின் சிந்தனைகளை அடியொட்டி எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.

காதல் வழிச் சாலை

டாக்டர் எஸ்.மோகன வெங்கடாசலபதி

காதலின் பல்வேறு படிநிலைகளை அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு. காதலை உணர்வு பூர்வமாக அணுகுவதிலும் அறிவு பூர்வமாக உணர்ச்சிவசப்படாமல் அணுகுவதிலும் இருக்கும் வித்தியாசங்களை விளைவுகளை நேர்மறை சிந்தனையோடு விவரிக்கும் நூல்.

தொழில் தொடங்கலாம் வாங்க!

டாக்டர் ஆர்.கார்த்திகேயன்

தொழிலில் வெற்றி பெற்றவர்களை குறித்தும் தோல்வி அடைந்தவர்களை குறித்தும் சமூகத்தில் நிலவும் கற்பிதங்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு இது. அத்தோடு, பணி வாழ்க்கையில் அன்றாடம் ஒரு ஊழியர் எதிர்கொள்ளும் சவால்கள், அதற்கான ஆலோசனைகளையும் உளவியல் பூர்வமான உதாரணங்களோடு விளக்குகிறது இந்நூல்.

சென்னை புத்தகக் காட்சியில் ‘இந்து தமிழ் திசை'
அரங்கு எண்: 133, 134 இந்த புத்தகங்கள் கிடைக்கும்.
தொடர்புக்கு: 7401296562
SCROLL FOR NEXT