திசைகாட்டி

சேதி தெரியுமா? - ஜெர்மனியை விஞ்சும் இந்தியா

செய்திப்பிரிவு

தொகுப்பு: கனி

டிச. 30: 2026-ம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் நான்காம் பெரிய பொருளாதார நாடாகத் திகழும் என்று பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார, தொழில் ஆராய்ச்சி மையம் (CEBR) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. 2026-ம் ஆண்டில், தற்போது நான்காம் இடத்தில் ஜெர்மனியையும், 2034-ம் ஆண்டில் மூன்றாம் இடத்திலிருக்கும் ஜப்பானையும் பொருளாதாரத்தில் இந்தியா விஞ்சும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

துணை முதல்வரானார் அஜித் பவார்

டிச. 30: தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார், மகாராஷ்டிரத்தின் துணை முதல்வராகப் பதவியேற்றார். அம்மாநில அரசின் முதல் அமைச்சரவை விரிவாக்கத்தின்போது, சிவ சேனா கட்சியைச் சேர்ந்த ஆதித்ய தாக்ரேவுடன் 34 சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.

நிலையான வளர்ச்சி இலக்குகள் பட்டியல்

டிச. 30: 2019 - 20-ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகளின் பட்டியலை ‘நிதி ஆயோக்’ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், கேரளம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசம் இரண்டாம் இடத்தையும், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்கள் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.

சிஏஏ சட்டப்பேரவைத் தீர்மானம்

டிச. 31: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்துவதற்கு எதிராகக் கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறும் வகையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா அமைந்திருப் பதாகக் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

தூய்மையான நகரம்: இந்தூர் முதலிடம்

டிச. 31: 2020-ம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் (ஸ்வச்ச சர்வேக்ஷன் லீக்) பட்டியலை மத்திய வீட்டு வசதி நகர விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது. நாட்டின் 4,372 நகரங்கள் இடம்பெற்றிருந்த இந்தப் பட்டியில் மூன்றாம் ஆண்டாகத் தொடர்ந்து இந்தூர் முதலிடத்தில் உள்ளது.

தலைமைப் படைத்தலைவர்

ஜன.1: இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைகளின் தலைமைப் படைத்தலைவராக ஜெனரல் பிபின் ராவத் பதவியேற்றார். முப்படைகளுக்கான இந்தப் படைத்தலைவர் பதவி இந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவப் படைத்தளபதியாகப் பதவி வகித்துவந்த பிபின் ராவத், டிச. 31 அன்று ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தலைமைப் படைத்தலைவராகப் பதவியேற்றார்.

ரயில் கட்டணம் உயர்வு

ஜன.1: சாதாரண வகுப்புப் பயணிகளுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசாவும், அதிவிரைவு ரயில்களுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசாவும், முதல் வகுப்புப் பயணிகளுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு நான்கு பைசாவும் உயர்த்தப்படுவதாக ரயில்வே துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

2020: செவிலியர்கள், தாதிகளுக்கான ஆண்டு

ஜன.2: ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 200-ம் பிறந்த நாளை நினைவுகூரும்விதமாக, 2020-ம் ஆண்டைச் செவிலியர்கள், தாதிகளுக்கான ஆண்டாக உலகச் சுகாதார மையம் (WHO) அறிவித்துள்ளது.

இதையொட்டி, ‘உலகச் செவிலியர்களின் நிலை’ அறிக்கையை முதன்முறையாக உலகச் சுகாதார மையம் தயாரித்துவருகிறது. உலகில் செவிலியர்கள், சுகாதார ஊழியர்களுக்கான தேவை 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக உலகச் சுகாதாரம் மையம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT