என். கௌரி
ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள இன்றைய சூழலில் எவ்வளவோ புதுமையான வழிகள் வந்துவிட்டன. ஆனால், மாணவர்களை நகரச் சுற்றுலாவுக்கு அழைத்துச்சென்று அவர்கள் மொழித்திறனை மேம்படுத்துகிறது சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கிவரும் ‘தி லாங்க்யுஎட்ஜ்’ (The Languedge) மொழிப் பள்ளி.
2009-ம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இந்த மொழிப் பள்ளியில், ஜெர்மன் மொழிக்கான பயிற்சி வகுப்புகள் கற்பிக்கப்படு கின்றன. இந்த மொழிப் பள்ளியின் நிறுவனரும் ஆசிரியருமான மாதங்கி ஜெயபால், மாணவர்களின் பேச்சுத் திறனை மேம்படுத்துவதற்காக 2013-ம் ஆண்டிலிருந்து ‘ஸ்டட்ரெயிஸே’ (ஜெர்மன் மொழியில் நகரச் சுற்றுலா) என்னும் நிகழ்வை ஏற்பாடுசெய்துவருகிறார்.
சமீபத்தில், இந்த மொழிப் பள்ளியைச் சேர்ந்த பதினைந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், அடையார் ‘தியோசோபிக்கல் சொஸைட்டி, அரசு அருங்காட்சியகம், புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம், ரயில் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு நகரச் சுற்றுலாவுக்குச் சென்றுவந்துள்ளனர்.
“ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதில் மிகவும் முக்கியமான அம்சம் அந்த மொழியை நமக்கு எந்த அளவுக்கு இயல்பாகப் பேச முடிகிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது. இந்த நகரச் சுற்றலாவின்போது மாணவர்கள் ஒரு நாள் முழுவதும் ஜெர்மன் மொழியில் மட்டுமே பேச வேண்டும்.
நகரச் சுற்றுலாவில் செல்லும் இடங்களைப் பற்றி அவர்கள் ஜெர்மன் மொழியில் ஒரு சுற்றுலா வழிகாட்டியைப் போல விளக்க வேண்டும். மாணவர்களைத் தன்னம்பிக்கையுடன் பேச வைப்பதற்கான ஓர் அர்த்தமுள்ள முயற்சியாக இந்த நகரச் சுற்றுலாவை ஆண்டுதோறும் ஒருங்கிணைத்துவருகிறேன்” என்று சொல்கிறார் மாதங்கி.
நம் கலாச்சாரம் பேசுவோம்
ஏழு ஆண்டுகளாக இவர் ஒருங்கிணைத்துவரும் இந்தச் சென்னை மாநகர் மொழிச் சுற்றுலாவில், இதுவரை சென்னை கலங்கரை விளக்கம், சாந்தோம் தேவாலயம், பாரதியார் நினைவு இல்லம், மகாபலிபுரம், விவேகானந்தர் இல்லம், முதலைகள் சரணாலயம், தட்சிண சித்ரா, போர் நினைவுச்சின்னம், சத்ராஸ் (சதுரங்கப்பட்டினம்), பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட இடங்களுக்கு மாணவர்களை அழைத்துச்சென்றுள்ளார்.
“ஒருமுறை, வகுப்பில் புகழ்பெற்ற ஆளுமைகளின் படங்களைக் காட்டி, மாணவர்களிடம் அவர்களை யாரென்று சொல்லும்படிக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த வகுப்பில் எந்த மாணவராலும் பாரதியாரின் உண்மையான படத்தை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை.
அன்றுதான், ஜெர்மன் போன்ற ஐரோப்பிய மொழியை நம் மாணவர்கள் கற்றுக்கொண்டாலும், நம் கலாச்சாரம், நம் நாட்டு ஆளுமைகளைப் பற்றி அவர்கள் படிக்கும் மொழியில் அந்த நாட்டுக்காரர்களுக்கு விளக்கத் தெரிய வேண்டும் என்று நினைத்தேன். அந்த முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் மாணவர்களை நகரச் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லத் தொடங்கினேன்” என்று விளக்குகிறார் மாதங்கி.
ஒரு மொழியைக் கற்றுக்கொள்வது என்பது ஒரு புதிய கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்வது போன்றதுதான். நாம் கற்றுக்கொள்ளும் வெளிநாட்டு மொழியின் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அதே அளவுக்கு நம் தாய்மொழிக் கலாச்சாரத்தை அந்த மொழியில் நமக்கு விளக்கத் தெரிவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அந்த அடிப்படையில் இந்த நகரச் சுற்றுலாவுக்குச் சென்றுவந்த பிறகு, மாணவர்களால் நமது நகரின் கலாச்சாராத்தை சரளமாக ஜெர்மன் மொழியில் விளக்க முடியும் என்று சொல்லும் இவர், “ஓர் அந்நிய மொழியைக் கற்றுக்கொள்வதும், பேசுவதும் கடினமான விஷயமல்ல என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள இந்த நகரச் சுற்றுலா பெரிதும் உதவுகிறது” என்று சொல்கிறார்.
செயல்முறைப் பயிற்சி
இந்த நகரச் சுற்றுலாவில், ஒவ்வோர் இடத்தைப் பற்றி ஜெர்மன் மொழியில் விளக்குவதற்கு நான்கிலிருந்து ஐந்து மாணவர்கள் ஒரு குழுவாகச் செயல்படுகிறார்கள். இவர்களில் படைப்பாற்றல், சுவாரசியத்துடன் எந்தக் குழு சிறப்பாக விளக்குகிறதோ, அந்தக் குழு சிறந்த குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.
“நான் இரண்டு முறை ‘ஸ்டட்ரெயிஸே’ நிகழ்வுக்குச் சென்றுள்ளேன். வகுப்பில் கற்கும் எளிமையான வாக்கியங்களை உண்மையான சூழலில் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த நகரச் சுற்றுலா எங்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கிறது.
எனக்குத் தனிப்பட்ட முறையில், இந்தச் சுற்றுலாவுக்குச் சென்றுவந்த பிறகு, நான் பேச்சு வழக்கில் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்துவது மேம்பட்டுள்ளது” என்று சொல்கிறார் மாணவி மிருதுளா. இவர் இந்த மொழிப்பள்ளியில் தற்போது ஜெர்மன் மொழியில் ‘சி-1 லெவல்’ படித்துவருகிறார்.
மொழியோடு சேர்த்து நம் நகரத்தின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளவும் இந்த நகரச் சுற்றுலா உதவியதாகச் சொல்லும் அருண்குமார், “நான் இதுவரை மூன்று முறை நகரச் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளேன். ஜெர்மன் மொழியில் யோசிக்காமல் அந்தத் தருணத்தில் தன்னம்பிக்கையுடன் சரளமாகப் பேசுவதற்கு எனக்கு இந்த நகரச் சுற்றுலா பெரிதும் உதவியது.
அத்துடன், ஒவ்வொரு குழுவினரும் அந்த இடத்தைப் பற்றி விளக்கிய பிறகு, தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு வார்த்தை விளையாட்டு, படப்புதிர் போன்ற ஒரு செயல்முறை விளையாட்டை ஒருங்கிணைக்க வேண்டும். இந்த விளையாட்டு மொழித்திறனை மட்டுமல்லாமல் எங்கள் படைப்புத்திறனையும் மேம்படுத்தும்விதத்தில் அமைந்திருந்தது” என்று சொல்கிறார்.
‘தி லாங்க்யுஎட்ஜ்’ பற்றி மேலும் விவரங்களுக்கு: thelanguedge.com